கொல்கத்தாவில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பெண் ஒருவர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சாலையோரம் தூக்கி வீசப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாகப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, அனைத்தும் முடங்கிப் போய் உள்ளது. அதே நேரத்தில், அனைவரும் வீட்டில் இருக்கக்கூடிய இத்தகைய நெருக்கடியான சூழலிலும், நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துள்ளதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தா அடுத்துள்ள ஹரோவா கிராமத்தைச் சேர்ந்த பழங்குடி பெண் ஒருவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயமானார். இதனையடுத்து, அந்த பெண்ணின் குடும்பத்தினர் அந்த பகுதி முழுவதும் தேடிப் பார்த்துக் கிடைக்காத நிலையில், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகத் தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து, பெண் மாயமான அடுத்த சில நாட்களில், அந்த பழங்குடியின பெண் கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி, கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில், சாலையோரம் தூக்கி வீசப்பட்டுள்ளார்.

இதனை, அந்த பகுதியைச் சென்றவர்கள் பார்த்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்துவிட்டு, அந்த பெண்ணை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அந்த பெண்ணிற்குத் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அத்துடன், அந்த பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த பெண்ணின் உடலில் பல இடங்களில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, துன்புறுத்தப்பட்டற்கான காயங்கள் மற்றும் தடயங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்வாக, வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அதன்படி, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

மேலும், அந்த 4 பேரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஆனால், அவர்கள் தற்போது தலைமறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில், அந்த பகுதியில் உள்ள மற்ற பழங்குடியினர், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனையடுத்து, அங்கு விரைந்து வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, குற்றவாளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததால், அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

அத்துடன், முன்னதாக மேற்கு வங்க மாநிலம் சோனார்பூர் பகுதியில் இதே போன்று 15 வயது சிறுமி ஒருவர், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாகவும், கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கு மிகப் பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்தன. அதன் தொடர்ச்சியாக தற்போதும், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பெண் ஒருவர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சாலையோரம் தூக்கி வீசப்பட்ட சம்பவம், கொல்கத்தாவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.