“1.2 லட்சம் பாலியல் தொழிலாளர்களுக்கு உடடினயாக உணவு மற்றும் பண உதவிகளைச் செய்யுங்கள்” என்று, மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வரும் இந்த காலத்தில், அனைவரும் விலகி இருக்க வேண்டும் என்றும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், மத்திய - மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

குறிப்பாக, தம்பதிகள் அனைவரும் பாதுகாப்பான தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபட வேண்டும் என்றும், முடிந்த அளவுக்கு மிகவும் நாகரிகமான உறவில் மட்டுமே ஈடுபட வேண்டும் என்றும், துணையுடன் மட்டுமே உறவில் இருக்க வேண்டும் என்றும், உலக நாட்டின் மருத்துவர்கள் எல்லாம் அடுத்தடுத்து அறிவுரைகளை வழங்கி வந்தனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக, ஐ.டி. துறை முதல் பல்வேறு துறையினர் வரை பலரும் வேலை இழந்து தவித்து வரும், இந்தியாவில் உள்ள பாலியல் தொழிலாளர்களும் வருமானம் இன்றி கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

இதனால், “கொரோனா ஊரடங்கு பொது முடக்கம் காரணமாக நாடு முழுவதும் வேலையில்லாமல் இருக்கும் பாலியல் தொழிலாளர்களுக்கு உடடினயாக உணவு, பண உதவி உள்ளிட்ட இன்னம் பிற அடிப்படை வசதிகளாக அவசரமாகச் செய்து தரும்படி, மத்திய - மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்து உள்ளது.

கொரோனா தொற்று நோயால் வருமானம் பாதிக்கப்பட்டுள்ள பாலியல் தொழிலாளர்களுக்கு ஆதரவளிக்க, பாலியல் தொழிலாளர்கள் கூட்டமைப்பு தர்பார் மஹஜலா சமன்வயா குழு, உச்ச நீதிமன்றத்தை அணுகியது. இந்த மனுவுக்கு ஆதரவாக ஆஜரான வழக்கறிஞர் ஆனந்த் குரோவர், “கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மஹாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உள்ள சுமார் 102 லட்சம் பாலியல் தொழிலாளர்கள் தொற்று நோய் காரணமாக, தங்களது வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர் என்றும், இதனால் அவர்களுக்கு உடனடியாக உதவி தேவைப்படுகிறது” என்று வாதிட்டார்.

இந்த மனுவை, நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ் மற்றும் ஹேமந்த் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

அப்போது, “அரசு பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் தனது அதிகாரங்களைப் பயன்படுத்த முடியுமா, அவர்களுக்கு உடனடி உதவியை வழங்க முடியுமா” என்று, கேட்டறிந்தனர்.

அத்துடன், “பாலியல் தொழிலாளர்கள் இப்போது கடும் துயரத்தில் உள்ளனர் என்றும், அவசரமாக அவர்களுக்கு எதாவது உதவி செய்ய வேண்டும் என்றும், இது லட்சக்கணக்கான மக்களின் உயிர் வாழ்வைப் பற்றியது என்றும் குறிப்பிட்ட நீதிபதிகள், இது தொடர்பாக நீதிமன்றத்தின் உத்தரவிற்காக காத்திருக்காமல், மத்திய - மாநில அரசுகள் உடனடியாக உதவிகள் செய்ய வேண்டும்” என்றும், அறிவுறுத்தினர்.

மேலும், “நாடு முழுவதும் உள்ள பாலியல் தொழிலாளர்களுக்கு அடையாளச் சான்றுகளை வற்புறுத்திக் கேட்காமல் உதவிகள் செய்ய வேண்டும்” என்றும், நீதிபதிகள் அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்.