தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. கொரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்தும் வகையில் பலகட்டங்களாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு, வர்த்தக நடவடிக்கைகளுக்காக தளர்த்தப்பட்டது. 

மத்திய அரசு வழிகாட்டுதலின்படி, பல்வேறு கட்டங்களாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. தற்போது நான்காம் கட்ட தளர்வுகள் வரும் 30ஆம் தேதி வரை அமலில் இருக்கிறது. பொதுமக்களின் வசதிக்காக தமிழகத்தில் இ-பாஸ் முறை எளிமையாக்கப்பட்டது. பொதுப் போக்குவரத்து மீண்டும் செயல்படத் தொடங்கியது. இன்று காலை நிலவரப்படி தமிழகத்தில் 5,52,674 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 4,97,377 பேர் குணமடைந்துவிட்டனர். 8,947 பேர் பலியாகியுள்ளனர். 46,350 பேர் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 66.4 லட்சம் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,337 பேருக்கு கோவிட்-19 தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 5,406 பேர் குணமடைந்துள்ளனர். 76 பேர் பலியாகியிருக்கின்றனர். இதன்மூலம் நோய்த்தொற்று முழுவதும் கட்டுப்பாட்டிற்குள் வரவில்லை என்று தெரிகிறது. ஆனால் வைரஸ் பரவலின் வேகம் முன்பை விட பெரிதும் குறைந்துள்ளது. சுகாதாரக் கட்டுப்பாடுகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும் என்று பொதுமக்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னையில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பிருக்கிறதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய அவசியமோ அல்லது அதற்கான சூழலோ தற்போது இல்லை என்று கூறினார்.

இதையடுத்து அதிமுகவை வழிநடத்த 11 பேர் கொண்ட குழு எப்போது அமைக்கப்படும் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு தேவைப்படும் போது இதுபற்றி தலைமை முடிவெடுக்கும் என்று தெரிவித்தார். நாட்டில் கொரோனா தொற்று அதிகமுள்ள மாநில முதல்வர்கள் உடன் பிரதமர் மோடி இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்துகிறார்.

அதில் தமிழக முதல்வர் பழனிசாமி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். இந்தக் கூட்டத்தில் தமிழக கொரோனா பாதிப்பு நிலவரம், எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள், அடுத்த கட்ட திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளன.

இதுவொருபுறமிருக்க, மீண்டும் அதிமுகவில் சசிகலாவை இணைப்பது தொடர்பாக பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக ஆலோசனை செய்யவே டிடிவி தினகரன் டெல்லி சென்றாதகவும், குறிப்பாக சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைப்பதற்கு பாஜக இணைப்பு பாலமாக செயல்படுவதாகவும் பல்வேறு நாளிதழ்கள் செய்தி வெளியிட்டது.

சென்னை திரு.வி.க நகர் மண்டலத்தில் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு மேற்கொண்டு, கபசுர குடிநீர், வைட்டமின் மாத்திரைகளை வழங்கிய நிகழ்வில் இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் அவர்களிடம் சசிகலா மீண்டும் அதிமுகவில் இணைகிறாரா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அமைச்சர், நான் அதிமுகவின் ஒரு சாதாரண தொண்டன். எனக்கு தற்போதைய தமிழக கள நிலவரம் குறித்தும் கொரோனோ பிரச்சினை, விவசாய பிரச்சனைகள் குறித்து தான் தெரியும். சசிகலா அதிமுகவில் இணைவது குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்று பதிலளித்தார்.