பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவனோடு கடைசி வரை போராடிய பெண், கடுமையாகத் தாக்கப்பட்டதால், அந்த பெண்ணின் பார்வை பறிபோன சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம் புனே பகுதியில் தான், இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

இந்தியா எவ்வளவு தான் வளர்ச்சி அடைந்து விட்டதாக மார் தட்டிக்கொண்டாலும், நம் நாட்டில் இன்னும் தீர்க்கவே முடியாத மனிதனின் அன்றாட அடிப்படை பிரச்சனைகளின் பட்டியல் மிகப் பெரியது.

நம் நாட்டில் மனிதன் வாழ்வதற்கு அடிப்படைத் தேவையாகப் பார்க்கப் படும் உணவு, உடை, இருப்பிடம் ஆகியவை கிடைத்து விட்டாலும், முறையான கழிவறை வசதி கிடைக்காத மக்கள், பெருமளவில் இருக்கிறார்கள். அத்துடன், கழிவறை வசதி இல்லாத சூழலால், பல மாநிலங்களில் பெண்கள் அதிகாலை நேரத்தில், விடியலுக்கு முன்பும், மாலை வேளையில் இரவு வரும் வரை காத்திருந்து இரவு நேரத்தில் வெளியே செல்லும் அவல நிலையில் தான், நம் நாட்டில் ஏராளமான குடும்பங்கள் தற்போது வரை வசித்து வருகின்றன. 

ஆனால், இப்படி இரவு நேரம் மற்றும் அதிகாலை நேரத்தில் கழிவறைக்குச் செல்லும் பெண்களைக் குறி வைத்து, அவர்களிடம் பாலியல் அத்து மீறிலில் ஈடுபடும் சம்பங்கள், தமிழகம் முதல் மஹாராஷ்டிரா மாநிலம் வரை தொடர் கதையாகவே நடந்துகொண்டு இருக்கிறது. இப்படி, அரங்கேறும் கொடூரமான பாலியல் பலாத்கார சம்பவங்களால், பெண்களால் வெளியே கூற முடியாமல் மனசுக்குள்ளேயே குமுறிக்கொண்டு இருக்கின்றனர். இத்தகைய சூழலை தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் சில கொடூரர்கள், இரவோடு இரவாக பாலியல் பலாத்காரம் செய்து விட்டு, அப்படியே தப்பியும் விடுகின்றனர்.

அப்படியான ஒரு சம்பவம் தான் மஹாராஷ்டிரா மாநிலம் புனே பகுதியில் அரங்கேறி இருக்கிறது. மஹாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் நவாரே கிராமத்தைச் சேர்ந்த 37 வயது பெண் ஒருவர், தனது வீட்டுக்கு அருகில் உள்ள கழிவறைக்கு இரவு நேரத்தில் சென்று உள்ளார். அப்போது, அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவர், அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று உள்ளார். 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண், அந்த நபரோடு கடுமையாகப் போராடி உள்ளார். இதனையடுத்து, அந்த நபர் திடீரென அந்த பெண்ணை கடுமையாகத் தாக்கத் தொடங்கி உள்ளார். இதில், அந்த பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. அந்த பெண் அங்குள்ள சாசூன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்த தாக்குதல் சம்பவத்தில் இறுதி வரை போராடிய அந்த பெண்ணின் கண் பார்வை, முழுவதும் பறிபோய் உள்ளது. இதனால், அந்த பெண்ணால் குற்றவாளியை அடையாளம் காட்ட முடியாமல் போய்விட்டது.

இது குறித்து விரைந்து வந்த போலீசார், அடையாளம் தெரியாத நபர் என, வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.