2D என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து உருவாகியுள்ள திரைப்படம் சூரரைப் போற்று. ஓய்வு பெற்ற ராணுவ தளபதி ஏர் டெக்கான் கோபிநாத் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது. இதில் நெடுமாறன் ராஜாங்கம் என்ற பாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். நடிகை அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்க அவருடன் கருணாஸ், மோகன் பாபு, காளி வெங்கட் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜாக்கி ஆர்ட் டைரக்ஷன் செய்துள்ளார். படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளது. இப்படம் அமேசான் ப்ரைமில் தீபாவளி விருந்தாக, வரும் நவம்பர் 12-ம் தேதி வெளியாகவுள்ளது. சமீபத்தில் இந்திய விமானப்படையிடம் இருந்து NOC சான்றிதழும் கிடைத்துவிட்டது. 

சமீபத்தில் வெளியான ட்ரைலர் உலகளவில் ட்ரெண்டானது. சூர்யாவின் அசத்தலான நடிப்பு மற்றும் வசனங்கள் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்து வருகிறது. ட்ரைலரை தொடர்ந்து படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. படத்தின் மீதமுள்ள இரண்டு பாடல்களுக்காக காத்திருக்கின்றனர் ரசிகர்கள். சூரரைப் போற்று படத்தின் மலையாளம் மற்றும் கன்னட வெர்ஷனுக்கு நடிகர் நரேன் டப்பிங் பேசியுள்ளார். நடிகர் சத்யதேவ் தெலுங்கில் ஆகாசம் நீ ஹாதுரா எனும் பெயரில் வெளியாகும் சூரரைப் போற்று படத்திற்கு டப்பிங் செய்துள்ளார் என்ற தகவல் தெரியவந்தது. 

தற்போது படத்தின் இரண்டாம் டயலாக் ப்ரோமோ வீடியோ வெளியானது. மனைவியிடம் பதினைந்தாயிரம் கடனாக கேட்பது போல் காட்சிகள் உள்ளது. மேலும் விமான பயணிகளின் ஆக்கிரமிப்பு பற்றி விவரிக்கிறார் மாறா(சூர்யா). ஏர் டெக்கான் கோபிநாத் தன் நிஜ வாழ்வில் பல கஷ்டங்களை சந்தித்த பிறகே சாதனையாளராக மாறியிருக்கிறார் என்பதை இந்த சூரரைப் போற்று திரைப்படம் எடுத்துக்காட்ட உள்ளது. 

சூரரைப் போற்று திரைப்படத்தை கமர்ஷியல் பாணியிலும் படமாக்கியுள்ளனர். திரை ரசிகர்கள் ரசிக்கும் வகையில் காமெடி காட்சிகளை வடிவமைத்துள்ளனர். தற்போது வெளியான ப்ரோமோவில் கூட, கருணாஸ் வரும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. அதில் டீ கடைக்காரர் 800 ரூபாய் பாக்கியுள்ளது என்று கேட்க, பணமழையா கொட்டப்போகுது இப்ப வந்து 800 ரூபாய் என விரட்டுகிறார் கருணாஸ். 

சூர்யாவின் சூப்பர் ஹிட் படங்களான நந்தா,பிதாமகன் போன்ற திரைப்படத்தில் கருணாஸின் காமெடி ரசிகர்களை கவர்ந்த ஒன்று. இந்த சூரரைப் போற்று படத்திலும் அந்த மேஜிக் தொடரும் என்று எதிர்பார்க்கின்றனர் ரசிகர்கள்.