உத்தரப் பிரதேசத்தில் நேற்று மாலை நடைபெற்ற மிகப் பெரிய வன்முறை சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் மகன் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

பாஜக தலைமையிலான மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து உத்தரப் பிரதேசத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. 

இந்த போராட்டத்தில் அங்குள்ள லகிம்பூர் கேரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளும் தீவிரமாகப் பங்கேற்று வருகின்றனர்.

இந்த நிலையில் தான், மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ரா லகிம்பூர் கேரி மாவட்டத்தின் திகுனியா அருகே உள்ள பன்வீர்பூரை சேர்ந்த அவர், இந்த கிராமத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக, அந்த மாநிலத்தின் துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா வருவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த சூழலில், அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அங்குள்ள பக்கத்து கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் திகுனியா என்னும் இடத்தில் திரண்டு நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும், “3 புதிய வேளாண் சட்டங்களை ரத்துச் செய்யக்கோரி” அவருக்கு கருப்புக் கொடி காட்டினார்கள்.

அத்துடன், அந்த வழியாக பாஜக வினரின் வாகன அணிவகுப்பு ஒன்று வந்தது. இதில், மத்திய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா சென்ற காரானது, திடீரென்று விவசாயிகள் பக்கம் திரும்பி, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது ஏறி இறங்கி உள்ளது. 

குறிப்பாக, விவசாயிகள் மீது காரை ஏற்றிவிட்டு, பல விவசாயிகளையும் இடித்து தள்ளியபடி அங்கிருந்து காரை ஆஷிஷ் மிஸ்ரா எடுத்துச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த விபத்தில், 4 விவசாயிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதில், பலரும் படுகாயம் அடைந்தனர்.

இதனால், கொதித்து எழுந்த விவசாயிகள், பாஜகவினர் வந்த வாகனங்களை அடித்து நொறுக்கினார்கள். இதனால், அங்கு வன்முறை வெடித்தது. 

முக்கியமாக, ஆஷிஷ் மிஸ்ராவின் காரை அடித்து நொறுக்கியதோடு, அந்த காரை தீயிட்டுக் கொளுத்தி உள்ளனர். இச்சம்பவத்தால் லக்கிம்பூரில் கடும் பதற்றம் நிலவியதால், அங்கு உடனடியாக விரைந்து வந்த போலீசார், போராட்டக்காரர்களை கலைத்தபோது அங்கு மிகப் பெரும் வன்முறை வெடித்தது. 

போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கும் இடையே மிகப் பெரிய மோதல் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் ஏற்கனவே கார் மோதி 4 விவசாயிகளும், தொடர்ந்து நடைபெற்ற வன்முறை கலவரத்தால் 4 பேரும் என மொத்தம் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் வெளியானது.

காயம் அடைந்தவர்களில் இன்று  மேலும் ஒருவர் உயிரிழந்து உள்ளனர்.

இந்த சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அந்த மாநிலம் முழுவதும் உள்ள ஒட்டுமொத்த விவசாயிகளும் கொந்தளித்து உள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக, இந்த வன்முறை சம்பவம் மேலும் பரவாமல் இருக்க லகிம்பூர் கேரி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அதிரடியாகப் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால், அங்கு இணையதள சேவைகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு உள்ளது.

மிக முக்கியமாக, இந்த விவசாயிகள் போராட்டத்தில் கலவம் வெடிக்க காரணமாக இருந்த மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மற்றும் 15 பேர் மீது கொலை மற்றும் வன்முறையைத் தூண்டியதற்காக உத்தரப் பிரதேச போலீசார் தற்போது வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.

இச்சம்பவம், இந்தியா முழுவதும் உள்ள ஒட்டுமொத்த விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.