“பவானிபூர் இடைத்தேர்தலில் வென்றால் மட்டுமே முதலமைச்சர் பதவியில் மம்தா பானர்ஜி நீடிக்க முடியும்” என்கிற நிலையில், வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது.

கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் நடந்த மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் மம்தா பானர்ஜி தோல்வி அடைந்தார் என்று அறிவிக்கப்பட்டது.

எனினும், மம்தா பானர்ஜி முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். இப்படியாக 6 மாதங்களுக்குள் அவர் எம்எல்ஏ வாக வேண்டும் என்பதால், மம்தா போட்டியிட வசதியாக அவரது சொந்த தொகுதியான பவானிபூரில் வெற்றி பெற்ற எம்எல்ஏ ராஜினாமா செய்தார். 
அதையடுத்து, பவானிபூர் மற்றும் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்ட சாம்சர்கஞ்ச், ஜங்கிபூர் ஆகிய தொகுதிகளுக்கு கடந்த 2 தினங்களுக்கு முன்பு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

இப்படியாக, பவானிபூர் உள்ளிட்ட 3 தொகுதி இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணியானது, இன்றைய தினம் கிட்டதட்ட 3 அடுக்கு பாதுகாப்புடன் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் 21 சுற்றுக்களாக எண்ணப்படுகின்றன. 

அத்துடன், இந்த ஓட்டுக்கள் அனைத்தும் எண்ணப்பட்டு, இன்று மாலைக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும், பவானிபூரில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து ஆறாயிரத்து 456. இதில் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 243 ஆண்கள், 95 ஆயிரத்து 209 பெண்கள் இருக்கிறார்கள்.

குறிப்பாக, மம்தா பானர்ஜி போட்டியிடும் தொகுதி என்பதால், பவானிபூர் இடைத் தேர்தல் முடிவுகள் அந்த மாநிலம் மட்டுமில்லாது, இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பவானிபூரில் முதல் 2 சுற்றுக்கள் நிலவரப்படி மம்தா பானர்ஜி, பாஜகவின் பிரியங்கா டிப்ரோலை விட 2,800 வாக்குகள் முன்னிலையில் இருக்கிறார். 

பவானிபூர் இடைத்தேர்தலில் வென்றால் மட்டுமே முதலமைச்சர் பதவியில் மம்தா பானர்ஜி நீடிக்க முடியும் என்ற நிலை உருவாகி உள்ளதால், இந்த சூழலில் தான் தற்போது அங்கு வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

மிக முக்கியமாக, இந்தத் தேர்தலின் முடிவு மம்தாவின் தலையெழுத்தையும், செல்வாக்கையும் தீர்மானிக்கும் விசயமாக உள்ளதாக அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது குறிப்பிடத்தக்கது.