டி.வி. விவாதத்தின் நேரலையின் போது, பேச வாய்ப்பு தராத நெறியாளரை வெறுப்பேற்ற நடிகை கஸ்தூரி பொங்கல் சாப்பிட்ட நிகழ்வு வைரலாகி வருகிறது.

இந்தியாவில் உள்ள டி.வி. விவாத நிகழ்ச்சிக்கு பெயர் போனவர் ரிபப்ளிக் டி.வி.யில் அர்னாப் கோஸ்வாமி. இவர், பாஜகவிற்கு ஆதரவாகத்தான் தனது கருத்துக்களை முன் வைப்பார் உள்ளிட்ட பல விமர்சனங்கள் இவர் மீது இருந்தாலும், டி.வி. விவாத நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினர்களை அழைத்துவிட்டு, அவர்களுக்குப் பேச வாய்ப்பு தராமல், இவரே டி.வி.யில் தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பதை நாம் டி.வி.யில் பார்த்திருப்போம். இது தொடர்பாகவும், அர்னாப்
கோஸ்வாமி மீது பல்வேறு தரப்பினரும் விமர்சனம் செய்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்ட போது, இந்தியா முழுவதும் ஒட்டு மொத்த தொலைக்காட்சியும், சுஷாந்த் சிங் தற்கொலை பற்றி ஆழமான விவாதங்களை முன் வைத்தன.

அப்போது, நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பாகப் பேசிய நடிகை கங்கனா ரனாவத், நெப்போடிசம் உள்ளிட்டவை பற்றி பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். 
அந்த நேரத்தில், நடிகை கங்கனா ரனாவத்தை தன் டி.வி.யின் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்க அர்னாப் கோஸ்வாமி அழைத்திருந்தார். அதன்படி, அர்னாப் கோஸ்வாமி, நடிகை கங்கனா ரனாவத் உள்ளிட்டோருடன் தமிழகத்தைச் சேர்ந்த பிரபல நடிகை கஸ்தூரியும் பங்கேற்றார்.

அதன்படி, டி.வி. விவாத நிகழ்ச்சியானது நேரலையில் ஒளிபரப்பாகிக்கொண்டு இருந்தது. அப்போது, நடிகை கஸ்தூரிக்கு பேசுவதற்கு வாய்ப்பு தரப்படவே இல்லை. இந்த நிகழ்ச்சியில், தன் தரப்பிலான கருத்துக்களைப் பேச நடிகை கஸ்தூரி எவ்வளவோ முயன்றும், நெறியாளர் அர்னாப் கோஸ்வாமி, அதைப் பற்றி கண்டுகொள்ளாமல், அதைக் காதிலும் வாங்காமல் அவர் எப்போதும் போல் தான் மட்டுமே பேசிக்கொண்டு இருந்தார்.

இவற்றையெல்லாம் பொறுமையாகப் போர்த்துக்கொண்டிருந்த நடிகை கஸ்தூரி, ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமையை இழந்து, “விவாத நிகழ்ச்சி முடிய இன்னும் கொஞ்ச நேரம் தான் இருக்கிறது. எப்படியும் இனி நம்மைப் பேச வைக்கப் போறது இல்ல. நாம பேசறதையும் அவுங்க கேட்க போறது இல்லை” என்ற முடிவுக்கு வந்துவிட்டார். அதனால், அவர் நேரலையில் இருக்கும் போதே, அவர் பாட்டுக்கு சாப்பிடத் தொடங்கினார். இந்த காட்சிகள் அப்படியே நேரலையில் ஒளிபரப்பானது.

இது தொடர்பாகக் கருத்து தெரிவித்த நடிகை கஸ்தூரி, “ டி.வி. நெறியாளர் அர்னாப் கோவ்சாமி, நேர்காணல்களின்போது எப்போதுமே அவர் பாட்டுக்குப் பாதிக்கும் மேற்பட்ட நேரத்துக்கும் அவரே தொடர்ந்து பேசிக்கொண்டு இருப்பார். நானும் ஒரு 60 நிமிடங்கள் பொறுமையாகப் பார்த்தேன். இனியும் அவர் நம்மை நிச்சயம் பேச விடமாட்டார் என்று தெரிந்து தான், நான் மதிய உணவை சாப்பிட்டேன். எனினும், ஸ்கைப் கணக்கை லாக் அவுட் செய்ய மறந்துட்டேன், அதற்காக மன்னிப்பு கேட்டுக்குறேன். இதில், நான் யாரையும் அவமரியாதை எதுவும் செய்ய வில்லை” என்று தெரிவித்தார்.

இதனை நேரில் பார்த்த அவரது ரசிகர் ஒருவர், அவருடைய டிவிட்டர் பக்கத்தில், “எனக்கு ஒரு பெரிய டவுட்” என்று குறிப்பிட்டு, “நீங்க சாப்பிட்டது சேமியாவா?” என்று கேட்டுள்ளார். அதற்கு, பதில் அளித்த நடிகை கஸ்தூரி, “நான் சாப்பிட்டது பொங்கல். அப்போ தானே அந்த பக்கம் கத்திட்டு இருக்கும்  அர்னாப் சத்தத்தை மறந்து, இங்கே நான் கொஞ்சம் தூங்கவாச்சும் செய்ய முடியும்” என்று பதில் அளித்தார்.

அதன் பிறகு, அந்த குறிப்பிட்ட டி.வி.யில் அவர் சில நாட்கள் பேசாமல் இருந்தார். இதனைத் தொடர்ந்து, “நான் மீண்டும் அர்னாபுடன் இன்னொரு நேரலையில் பங்கேற்றுப் பேசப் போகிறேன்” என்று நேற்று நடிகை கஸ்தூரி அறிவித்திருந்தார்.

இந்த விவாதம் முடிந்த பிறகு, இது தொடர்பாகத் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நடிகை கஸ்தூரி, “இந்த முறை நான் சாப்டல, பாதியில் எழுந்து போகல, கிட்டத்தட்ட ஊமையாயிட்டேன். நடுவுல மட்டும் ஒன்னு இரண்டு வார்த்தைகள் மட்டும் பேசினேன்” என்று, ஜாலியாக பதிவிட்டுள்ளார்.