சென்னையில் கொரோனா வைரசுக்கு இன்று 18 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் மனைவி, மகன் உட்பட அவரது குடும்பத்தினர் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு முன் எப்போதும் இல்லாத அளவாகக் கடந்த 3 நாட்களாக நாள் தோறும் சுமார் 5 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இதனால், கொரோனா தொற்று பாதிப்பு மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்பின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அதன்படி, சென்னையில் இன்று மட்டும் 18 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். இதில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 8 பேர், சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்துள்ளனர். 

அத்துடன், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த தலா 3 பேர் வீதம், இந்த மருத்துவமனைகளில் 9 பேர் இன்று அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.

அதேபோல், சென்னை தனியார் மருத்துவமனையில் கொரோனா வைரசுக்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உட்பட இன்று மட்டும் மொத்தம் 18 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

குறிப்பாக, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் மனைவி, மகன் மாமனார், உட்பட அவரது குடும்பத்தினர் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இதனையடுத்து, சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணனின் குடும்பத்தினர் 4 பேரும், சென்னையில் உள்ள கிங்ஸ் கொரோனா மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், குடும்பத்தில் உள்ள தனது மாமனார் - மாமியாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணனும் பரிசோதனை செய்து கொண்டார். இதனையடுத்து, அவர் தன்னை தானே தனிமைப் படுத்திக்கொண்டார். இந்த செய்தியை, ராதாகிருஷ்ணன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதேபோல், சென்னையில் தற்போது 15,127 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாகச் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அத்துடன், சென்னையில் 70,651 பேர் கொரோனா நோய்த் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர் என்றும் சென்னை மாநகராட்சி கூறி உள்ளது.

மேலும், சென்னையில் கொரோனா தொற்று கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 8 மண்டலங்களில் குறைவாகவும், 7 மண்டலங்களில் சற்று அதிகரித்துள்ளதாகவும் சென்னை மாநகராட்சி குறிப்பிட்டுள்ளது.

சென்னையில் கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக, சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாகச் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், “சென்னையில் மிகப்பெரிய மீன் சந்தையான காசிமேட்டில் ஏராளமான பொதுமக்கள் குவிந்து வருவதால், அங்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் சூழ்நிலை இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், நோய் தொற்றைத் தடுக்கும் விதமாகவும், காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்குள் மீன் வாங்கப் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை” என்று குறிப்பிட்டார்.

அத்துடன், “காசிமேடு மீன்பிடி துறை முகத்தில் காலை 3 மணி முதல் 8 மணி வரை மட்டுமே மீன் விற்பனை செய்ய வேண்டும்” என்றும், அவர் உறுதிப்படத் தெரிவித்தார்.

குறிப்பாக “அடையாள அட்டை வழங்கப்பட்ட படகு உரிமையாளர்கள், தொழிலாளர்கள், வியாபாரிகளுக்கு மட்டுமே துறைமுகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், மற்றவர்களுக்கு அனுமதி இல்லை” என்றும், அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.