“கொரோனா விதியை மீறிய நடிகர் கமல்ஹாசன்?”… விளக்கம் கேட்ட சுகாதாரத்துறை செயலாளர் !

“கொரோனா விதியை மீறிய நடிகர் கமல்ஹாசன்?”… விளக்கம் கேட்ட சுகாதாரத்துறை செயலாளர் ! - Daily news

கொரோனா தொற்றிலிருந்து மீண்ட பின் தனிமைப்படுத்துதலில் இல்லாமல் பொதுநிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கடந்த மாதம் அமெரிக்க பயணத்தை முடித்துவிட்டு தமிழகம் திரும்பியபோது காய்ச்சல் மற்றும் இருமல் இருந்தது. இதனை கமல்ஹாசன் தனது ட்விட்டரில் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். 

இதையடுத்து சென்னையை அடுத்த போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி கமல்ஹாசன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி ஆனது. அதைத்தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டு அவருக்கு அங்கேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. 

KAMALHAASSAN

அதையடுத்து கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்த கமல்ஹாசன் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் வீடு திரும்பினார்.  அவரை வீட்டு தனிமையில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர். மேலும் கடந்த 1 ஆம் தேதி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன கமல்ஹாசன் 3 ஆம் தேதி வரை ஓய்வில்  தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், 4 ஆம் தேதி முதல் அவர் தனது அன்றாடப் பணிகளைத் துவங்கலாம் எனவும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது. 

இதனால் கடந்த 4 ஆம் தேதி  விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் வார இறுதி எபிசோடுக்கான ஷூட்டிங்கில் கமல்ஹாசன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.  இதை தொடர்ந்து கொரோனாவில் இருந்து குணமடைந்த சில நாட்களிலேயே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்து கமல்ஹாசனிடம் விளக்கம் கேட்கப்படும் என்று சுகாதாரதுறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

KAMALHAASAN

மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தாலும், அதன்பின் 7 நாட்கள் வீட்டுத்தனிமையில் இருக்க வேண்டும் என்பதுதான் நடைமுறை. அதனை மீறி அவர் செயல்பட்டதற்கு சரியான விளக்கம் கேட்கப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில்,  “கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு 14 நாட்கள் தனிமைப்படுத்துதலில் ஈடுபடாமல் பொது நிகழ்ச்சியில் கமல் பங்கேற்றது குறித்து விளக்கம் கேட்கப்படும். 

பொதுவாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் மருத்துவமனையில் 7 நாட்களும், அதன் பின் 7 நாட்கள் வீட்டில் என மொத்தம் 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.

Leave a Comment