விடிய விடிய பெய்த கனமழையால் அதிகரித்த நீர்வரத்து... செம்பரம்பாக்கம் ஏரியில் 3 ஆயிரம் கன அடி நீர் திறப்பு!

விடிய விடிய பெய்த கனமழையால் அதிகரித்த நீர்வரத்து... செம்பரம்பாக்கம் ஏரியில் 3 ஆயிரம் கன அடி நீர் திறப்பு! - Daily news

கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், இன்று காலை 8 மணி முதல் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கை கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும்,  கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருச்சி, கரூர், நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்திருந்தது.

இந்த சூழலில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவும் கனமழை பெய்தது. நேற்று இரவு முதல் பெய்த கன மழையால் சென்னை நுங்கம்பாக்கம், கோயம்பேடு, கோடம்பாக்கம், போரூர், மயிலாப்பூர் ஆகிய பகுதிகளிலும், தாம்பரம், பல்லாவரம், மீனம்பாக்கம், அம்பத்தூர், பூந்தமல்லி ஆகிய புறநகர் பகுதிகளிலும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

நீர் தேங்கியுள்ள சாலைகள் மற்றும் மழை நீர் பெருக்கு காரணமாக சென்னையில் பல இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி ரங்கராஜபுரம் இரண்டு சக்கர வாகன சுரங்கப் பாதை மற்றும் தி நகர் மேட்லி சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. 

Chennai rain

மேலும் கேகே நகர் ராஜமன்னார் சாலையில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டு இரண்டாவது அவின்யூ நோக்கி திருப்பி விடப்படுகிறது. வளசரவாக்கம் சாலையில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, ஆற்காடு ரோடு செல்ல கேசவர்த்தினி சாலை நோக்கி திருப்பி விடப்பட்டுள்ளது. வாணி மஹால் முதல் பென்ஸ் பார்க் வரை தண்ணீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, அபிபுல்லா சாலை மற்றும் சாலை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது.

சென்னை மாநகரம் மழைநீர் வடிகால் வாரிய சீரமைப்பு பணியை அண்ணா பிரதான சாலையில் மேற்கொண்டு வருகிறார்கள் எதிரே உள்ள அண்ணா சாலையில் வடிகால் அமைக்கும் பணியை எளிதாக்கும் வகையில் உதயம் திரையரங்கம் நோக்கி செல்லும் போக்குவரத்து எதிர்திசையில் அனுமதிக்கப்படுகிறது. 

இதேபோல் உதயம் சந்திப்பில் காசி முனையிலிருந்து அண்ணா பிரதான சாலை நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் மட்டுமே அசோக் பில்லர் நோக்கி திருப்பி விடப்படுகின்றன. மேடவாக்கம் சோழிங்கநல்லூர் வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மாறாக காமாட்சி மருத்துவமனை வழியாக சோழிங்கநல்லூர் நோக்கி திருப்பி விடப்படுகின்றன.

Sembarambakkam lake

சென்னை மாநகரில் 1 லட்சத்துக்கும் அதிகமான தெருக்கள் உள்ளன. இதில் தாழ்வான இடங்களில் உள்ள 500 தெருக்களில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த இடங்களில் தண்ணீரை வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்களும், அதிகாரிகளும், போலீசாரும் ஈடுபட்டு உள்ளனர். கடந்த முறை மழை வெள்ளம் தேங்கிய இடங்களிலேயே மீண்டும் மழை நீர் தேங்கி உள்ளது.

இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக, இன்று காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர்வரத்து 6 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து கடந்த 3 நாட்களாக வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டு வந்த நிலையில், தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளதால், இன்று காலை 8 மணி முதல் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

Leave a Comment