“நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் வன்முறைகளுக்கு பெண்கள் அரை குறை ஆடைகளை அணிவதே முக்கிய காரணம்” என்று, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெண்ணியம் பற்றி பேசுபவர்களின் முக்கிய கருத்தே, ஆடை சுதந்திரமாகத் தான் இருக்கிறது. அப்படியான, இந்த ஆடை சுதந்திரத்தைப் பற்றி கடந்த காலங்களில் கருத்து பேசி வந்த பல பிரபலங்களும் வாங்கிக்கொண்டனர். பலரும் சர்ச்சையில் சிக்கினார்கள். அந்த வரிசையில், தற்போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் புதிய சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

அதாவது, கடந்த 20 ஆம் தேதியான நேற்றைய தினம் HBO டிவியில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அளித்த பேட்டி ஒன்று ஒளிபரப்பு செய்யப்பட்டது. அந்த பேட்டியில் பேசி உள்ள இம்ரான் கான், “ஒரு பெண் அரை குறை ஆடைகளை அணிந்தால், அது ஆணின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று, குறிப்பிட்டு உள்ளார்.

அத்துடன், “நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் பலாத்கார சம்பவங்கள் மற்றும் பாலியல் வன்முறைச் சம்பவங்கள், அதே போல் பெண் குழந்தைகளுக்கு எதிராக அரசாங்கம் என்ன செய்யத் திட்டமிட்டுள்ளது?” என்று, செய்தியாளர் கேள்வி எழுப்பியிருந்தார். 

இதற்குப் பதில் அளித்திருந்த இம்ரான்கான், “நமது நாட்டில் பாலியல் பலாத்கார மற்றும் பாலியல் வன்முறைகள் தொடர்பான குற்றங்கள் அதிகரித்து உள்ளது  மிகவும் மோசமானதாகக் கருதுகிறேன்” என்று, தனது கவலையைத் தெரிவித்தார்.

அதன் தொடர்ச்சியாக, “ஒரு பெண்ணின் உடைகள் பாலியல் வன்முறையைத் தூண்ட முடியுமா?” என்று, அந்த செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

இதற்கும் பதில் அளித்துப் பேசிய அவர், “இது நீங்கள் வாழும் சமுதாயத்தைப் பொறுத்தது என்றும், ஒரு சமூகத்தில் மக்கள் அந்த மாதிரியான விஷயங்களைக் காணவில்லை என்றால், அது அவர்களுக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், உங்களைப் போன்ற ஒரு சமூகத்தில் நீங்கள் வளர்ந்தால், அது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தாது” என்றும், அவர் விளக்கம் அளித்தார்.

குறிப்பாக, “பாகிஸ்தான் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்களின் படி, இந்த நாட்டில் ஒவ்வொரு நாளும் குறைந்த பட்சம் 11 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவாகின்றன என்றும், கடந்த 6 ஆண்டுகளில் இது போன்று மொத்தம் 22 ஆயிரம் வழக்குகள் காவல் நிலையங்களில் பதிவாகி உள்ளன என்றும், இருப்பினும் பாகிஸ்தானில் பாலியல் பலாத்கார குற்றவாளிகளின் தண்டனை விகிதம் 0.3 சதவீதமாக உள்ளது” என்றும், அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், “பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோக வழக்குகளை விசாரிக்கச் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கக் கடந்த ஆண்டு டிசம்பரில் பாலியல் பலாத்கார தடுப்பு கட்டளை 2020 க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது என்றும், இது போன்ற வழக்குகளில் சட்ட நடவடிக்கைகளை 4 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்” என்று, உத்தரவிட்டு உள்ளது என்றும், அவர் கூறினார்.

மிக முக்கியமாக, “நாட்டில் பாலியல் வன்கொடுமை அதிகரிப்புக்குப் பெண்கள் அரை குறை ஆடைகளை அணிவதே காரணம்” என்றும், பேசியுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இந்த கருத்து, மிக கடுமையான விமர்சனங்களை அவருக்கு எதிராக ஏற்படுத்தி உள்ளது. 

இம்ரான் கானின் இந்த கருத்துக்களுக்கு, அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களும், அந்நாட்டின் செய்தியாளர்கள் மற்றும் பெண்ணியல் ஆர்வலர்கள் பலரும் தங்களது கடும் விமர்சனத்தை முன் வைத்து உள்ளனர்.

அதே போல், “பாகிஸ்தான் நாட்டில் பாலியல் வன்முறைக்கான காரணங்கள் தொடர்பாக பிரதமர் இம்ரான் கான் பேசியிருப்பது என்பது, பாதிக்கப்பட்டவர்கள் மீது மீண்டும் பழிபோடும் விதமாக உள்ளது என்றும், ஒரு பிரதமரின் இந்த கருத்து பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது” என்றும், தெற்காசியாவின் சர்வதேச நீதிபதிகள் ஆணையத்தின் சட்ட ஆலோசகர் ரீமா ஓமர் கருத்து தெரிவித்து உள்ளார். அத்துடன், அந்நாட்டின் இணையத்தில் பாகிஸ்தான் பிரதமர் பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.