மத்திய அரசு அமைத்த கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழுவினர் 2019ஆம் ஆண்டு ஜூன் 1ம் தேதி புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை வெளியிட்டனர். புதிய கல்விக் கொள்கை வரைவில் இடம்பெற்ற மும்மொழிக் கல்வி, குருகுல கல்வி முறை, NTA எனப்படும் நுழைத்தேர்விற்கான அமைப்பு, 3 வயது முதலே கல்வியை தொடங்குதல், சமஸ்கிருத மொழிக்கு முக்கியத்துவம் உள்ளிட்ட அம்சங்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தின.

தமிழகத்தில் தி.மு.க உள்ளிட்ட கட்சிகளும், கல்வியாளர்களும் புதிய கல்விக் கொள்கைக்கு மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். கல்வியாளர்கள் வைத்த சில கோரிக்கைகளை மட்டும் ஏற்றுக்கொண்டு மத்திய அரசு சில திருத்தங்களை செய்தது. இருப்பினும் புதிய கல்விக் கொள்கையில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

எதிர்ப்புகள் பல இருந்தபோதிலும், புதிய கல்விக்கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், புதிய கல்வி வரைவு கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ஒப்புதலுக்கு பிறகு, இம்மாத தொடக்கத்தில், பிரதமர் மோடி இதுபற்றி காணொலி வாயிலாக மக்களிடம் உரையாற்ற்னார். அப்போது, ``இந்தியாவில் 34 ஆண்டுகால பழமையான கல்வி முறையை மாற்றியமைக்கும் தேசிய கல்வி கொள்கை எந்த ஒரு பகுதியிலும் சார்பு குறித்த கவலைகளை எழுப்பவில்லை, என்பது "மனதைக் கவரும்" விஷயமாக உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார்.

மேலும் அவர், ``பள்ளி மற்றும் உயர்கல்வி முறைகளில் மாற்றத்தக்க சீர்திருத்தங்களுக்கு வழி வகுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பழைய கொள்கை என்பது என்ன சிந்திக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தியது, ஆனால் புதிய தேசிய கல்விக் கொள்கை என்பது எவ்வாறு சிந்திக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகிறது. இது ஒரு குறிப்பிடத்தக்க வித்தியாசம். மாணவர்கள் தங்கள் தாய்மொழியில் கற்பிக்கப்படும் போது, அந்த விஷயத்தை பற்றிய அவர்களது புரிதல் மிகவும் சிறப்பாகிறது. அதனால், 5ம் வகுப்பு வரை தாய்மொழியில் கற்றல் என்பது பெரிதும் உதவும்" என்று கூறியிருந்தார் அவர்.

இவற்றைத் தொடர்ந்து, எதிர்ப்புகளை மீறி நடைமுறைக்கு வர தயாரிகிவிட்ட இந்த புதிய கல்விக்கொள்கை குறித்து, சர்ச்சைகள் ஓய்ந்த பாடில்லை. இருப்பினும், சூழலை சரிசெய்ய வேண்டும் மத்திய அரசு, இந்தக் கல்விக்கொள்கையின் அம்சங்கள் குறித்து கருத்துக் கேட்க முடிவு செய்துள்ளது.

அதன்படி புதிய கல்வி கொள்கை பற்றி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் உள்ளிட்டோரிடம் கருத்து கேட்க மத்திய கல்வி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. 

அதன்படி, நாளை முதல் வருகிற 31ஆம் தேதி வரை நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கொடுத்துள்ள கேள்விகளுக்கு விடை அளிக்கும் வகையில் கருத்துருக்கள் பெறப்பட உள்ளன. நாடு முழுவதும் இருந்து பெறப்படும் கருத்துக்களின் அடிப்படையில் ஆய்வு செய்து என்சிஇஆர்டி உரிய முடிவை எடுக்கும் என அறிவிக்க வாய்ப்புள்ளது.