ரஷியாவின் முக்கிய எதிர்க்கட்சியான ‘எதிர்கால ரஷியா’ கட்சியின் தலைவர் அலெக்சி நவல்னி. அதிபர் புதினின் ஆட்சிக்கு எதிராக தீவிரமாக போராடி வருபவர்களில் முக்கிய தலைவரான அலெக்சி நவல்னி, அதற்காக பல முறை சிறை சென்றுள்ளார்.

ஏற்கனவே, அரசு ஆதரவாளர்கள் அவரை கிருமிநாசினி மூலம் கடந்த 2017-ம் ஆண்டு தாக்கியதில் அவரது ஒரு கண் பாதிக்கப்பட்டது. 2018-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில், புதினை எதிர்த்து போட்டியிட அவருக்கு கோர்ட்டு தடை விதித்தது.

மேலும் அவர் அரசின் அரசாங்கத்தில் நடைபெற்று வரும் ஊழல்களை மக்கள் மத்தியில் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறார். இதனால் ஆளும்கட்சியின் மிகமுக்கிய எதிர்ப்பாளராக பார்க்கப்படும் நவல்னிக்கும், ஆளுங்கட்சியினருக்கு இடையே அடிக்கடி வார்த்தை மோதல்கள் ஏற்படுவது வழக்கம். இந்நிலையில், நவல்னி சைபீரியாவிலிருந்து மாஸ்கோவிற்கு விமானத்தின் சென்று கொண்டிருந்தபோது, அவருக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது. அதனால் விமானத்தை அவசரமாக தரையிறக்கியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து அங்குள்ள ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த அவர், கோமா நிலைக்கு சென்றார்.

டோம்ஸ்க் நகரிலிருந்து புறப்படுவதற்கு முன்னதாக, விமான நிலையத்தில் நவல்னி டீ அருந்தினர் என்றும், அந்த டீயில் வேண்டுமென்றே விஷம் கலக்கப்பட்டிருக்கலாம் என்றும் நவல்னியின் செய்தித் தொடர்பாளர் கிரா யர்மிஷ் கூறினார்.

நவல்னியை விஷம் வைத்து கொல்ல முயற்சி நடந்ததாகவும், இந்த சதிக்கு பின்னால் புதினின் அரசு இருப்பதாகவும் அவரது குடும்பத்தினரும், ஆதரவாளர்களும் தீர்க்கமாக நம்புகின்றனர். இதனால் இந்த விவகாரம் சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியின் தலைவர்கள் நவல்னி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எந்தவொரு உதவிகளையும் வழங்க தயாராக இருப்பதாக உறுதி அளித்ததோடு, என்ன நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்த ரஷியாவை வலியுறுத்தின. மேலும் நவல்னிக்கு ஜெர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள சாரிட் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிப்பதற்கு தேவையான உதவிகளை செய்ய ஜெர்மனியை சேர்ந்த தொண்டு நிறுவனம் முன்வந்தது.

இந்த ஆஸ்பத்திரி வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் அரசியல் எதிர்ப்பாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் புகழ்பெற்றதாகும். எனினும் நவல்னியை சிகிச்சைக்காக ஜெர்மனி அனுப்புவதற்கு ரஷிய மருத்துவர்கள் மறுப்பு தெரிவித்தனர். இன்னொரு இடத்துக்கு மாற்ற முடியாத அளவுக்கு நவல்னியின் உடல்நிலை மிக மோசமாக உள்ளது என்று மருத்துவர்கள் கூறினர்.

ஆனால் நவல்னியின் குடும்பத்தினரும், ஆதரவாளர்களும் இது முற்றிலும் பொய் என்றும், அவரை ஜெர்மனிக்கு அழைத்து செல்ல அதிபர் புதினின் அரசு முட்டுக்கட்டை போடுவதாகவும் குற்றம் சாட்டினர். இதனிடையே ஜெர்மனியைச் சேர்ந்த தொண்டு நிறுவனம் உயர் தொழில்நுட்பம் வாய்ந்த மருத்துவ உபகரணங்களுடன் கூடிய விமானத்தை ஓம்ஸ்க் நகருக்கு அனுப்பி வைத்தது.

அந்த விமானத்தில் சென்ற ஜெர்மனி மருத்துவ குழு நவல்னியின் உடலை முழு பரிசோதனை செய்து அவரை ஜெர்மனி அழைத்து செல்வதில் எந்த சிக்கலும் இல்லை என ரஷிய மருத்துவர்களிடம் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து நவல்னியை ஏற்றிக்கொண்டு ஜெர்மனி விமானம் ரஷியாவில் இருந்து புறப்பட்டது.

இந்த விமானம் உள்ளூர் நேரப்படி நேற்று காலை 9 மணிக்கு பெர்லினில் அரசு மற்றும் ராணுவ விமானங்கள் பயன்படுத்தும் டெகல் விமான நிலையத்தில் தரை இறங்கியது. அதனைத் தொடர்ந்து நவல்னி ஆம்புலன்ஸ் மூலம் சாரிட் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு அந்த நாட்டின் தலைசிறந்த மருத்துவ நிபுணர் குழு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. தற்போது அவருடைய உடல்நிலை சீராக இருக்கிறது எனக்கூறி மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.