“நிகழும் பருவநிலை மாற்றத்தால் இந்தியாவின் கிழக்கிந்திய மாநிலங்களுக்கு பெரும் பாதிப்பு இருக்கும்” என்று, ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

இந்தியா உட்பட உலகம் முழுமைக்கும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டு இருக்கின்றன. 

அத்துடன், உலகம் முழுவதும் ஏற்படும் இந்த பருவ நிலை மாற்றத்தால், பல்வேறு பகுதிகள் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டு வருகின்றன. 

இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், “இத்தகைய பருவ நிலை மாற்றத்தால், இந்தியாவில் இருக்கும் அனைத்து மாவட்டங்களும் ஏறக்குறைய பாதிக்கப்படக் கூடிய வாய்ப்பு இருக்கும்” என்கிற, அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. 

குறிப்பாக, “இந்தியாவில் உள்ள கிழக்குப் பகுதியில் இருக்கும் 100 மாவட்டங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படவே அதிக அளவிலான வாய்ப்புகள் இருப்பதாக” ஐஐஎஸ்சி பெங்களூரு, ஐஐடி மண்டி மற்றும் ஐஐடி கவுகாத்தி இணைந்து நடத்திய ஆய்வில் தற்போது தெரியவந்திருக்கிறது.

அதாவது, “நாட்டில் பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்படக் கூடிய வாய்ப்பு இந்தியாவில் உள்ள அனைத்து 612 மாவட்டங்களுக்கும் இருக்கிறது என்றாலும், அதிலும் குறிப்பாக இந்தியாவின் கிழக்கிந்திய மாநிலங்களில் உள்ள கிட்டதட்ட 100 மாவட்டங்கள் பெரும்பாலான பாதிப்புகள் நிகழும்” என்பது தெரிய வந்திருக்கிறது.

இது குறித்து ஐஐஎஸ்சி, பெங்களூரு, ஐஐடி மண்டி மற்றும் ஐஐடி கவுகாத்தி ஆகியவை இணைந்து நடத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை ஆதரவுடன் ஆய்வு ஒன்று மேற்கொண்டது. இதில் தான் இந்த அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

மிக முக்கியமாக, “இந்தியாவின் கிழக்கிந்திய மாநிலங்களாக உள்ள ஜார்கண்ட், மிசோராம், ஒடிசா, சத்திஸ்கர், அசாம், பிகார், அருணாச்சலப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய 8 மாநிலங்களில் இந்த பருவநிலை மாற்றத்தின் பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்புகளே அதிகம் உள்ளன” என்றும், தெரிய வந்திருக்கிறது.

“கொள்கை ஒருங்கிணைப்பு மற்றும் திட்ட மேலாண்மை பிரிவின் மூத்த ஆலோசகர் மற்றும் தலைவரும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் பருவநிலை மாற்ற நிபுணருமான டாக்டர் அகிலேஷ் குப்தா” இந்த தகவலை தற்போது உறுதிப்படுத்தி இருக்கிறார்.

இது தொடர்பாகப் பேசிய அவர், “சர்வதேச தட்ப வெப்பத்தில் 2 சதவீதம் அதிகரிப்பு என்பது எதிர்பார்ப்பதை விட முன்னதாகவே நிகழக்கூடும்” என்கிற அதிர்ச்சியூட்டும் தகவலையும் கூறி உள்ளார். 

மேலும், “இதன் காரணமாக இந்தியாவின் வேளாண்மை, சுகாதாரம் மற்றும் நீர் பாதுகாப்புத் துறைகளில் மிகப் பெரிய பாதிப்பு ஏற்படலாம் என்றும், இந்த சவாலைத் திறம் பட எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இந்தியா தற்போது இருக்கிறது” என்றும், டாக்டர் அகிலேஷ் குப்தா எச்சரிக்கையாகவே கூறியுள்ளார்.