மாஸ்க் போடாத காரணத்தால் போலீசார் கொலைவெறி தாக்கியதில் சாத்தான்குளத்தில் நடந்ததை போல் மற்றுமொரு லாக்கப் டெத் சம்பவம் நடந்துள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில், செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் மற்றும் இவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் ஊரடங்கு விதி முறைகளை மீறி கடையைத் திறந்ததாகக் கூறி, கடந்த மாதம் இருவரையும் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர், தந்தை - மகன் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்த போலீசார், அவர்களைக் கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்தனர். சிறையில் அடைத்த அன்று இரவே பென்னிக்சுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. மறுநாள் காலை தந்தை ஜெயராஜூம் உயிரிழந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

தூத்துக்குடியில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தந்தையும் - மகனும் உயிரிழந்த விவகாரத்தில், காவல் நிலையத்தில் இருவருக்கும் பாலியல் 
துன்புறுத்தல்கள் கொடுக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. குறிப்பாக, இருவரின் ஆசன வாயில் போலீசார் லத்தியை உள்ளே விட்டு கடும் 

சித்திரவதை செய்து கொடுமைப் படுத்தியதாவதாகவும், ஜெயராஜ் - பென்னிக்ஸ் உறவினர்கள் போலீசார் மீது பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். இந்த லாக்கப் டெத் தொடர்பாக தற்போது சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. 

இந்த லாக்கப் டெத்தின் ரணம் கூட இன்னும் காயாத நிலையில், அதே போன்ற ஒரு சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக, இந்தியா முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி, வீட்டை விட்டு வெளியே வரும் மக்கள் கண்டிப்பாக முகத்தில் மாஸ்க் அணிந்து வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, வாகனத்தில் செல்வோர் மாஸ்க் அணியாமல் சென்றால், அவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆந்திராவில் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள சீராலா நகரைச் சேர்ந்த கிரண் குமார் என்ற இளைஞர், கடந்த 19 ஆம் தேதி முகக் கவசம் அணியாமல் அவரது நண்பர் ஆபிரகாம் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் வேலைக்குச் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது, அவரை அந்த பகுதியில் மடக்கிய போலீசார், முகமூடி அணியாததற்காக அபராதம் விதிப்பதற்குப் பதிலாக, எஸ்.ஐ. மற்றும் அவரது பணியில் இருந்த போலீசார் கிரண் குமாரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

காவல் நிலையம் சென்றதும், கிரண் குமார் மீது போலீசார் கொலை வெறி தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதில், உயிருக்கு ஆபானத்த நிலையில் காயம் அடைந்த கிரண் குமாரை, அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவர்  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்குத் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது அவர் சிகிச்சை பலனின்றி கிரண் குமார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பாக கிரண் குமாரின் தந்தை மோகன் ராவ் செய்தியாளர்களிடம் கூறும் போது, “போலீசார் துளிகூட இரக்கமின்றி என் மகனை அடித்தே கொன்றதாக” பகிரங்கமாகக் குற்றம்சாட்டி உள்ளார்.

அதே நேரத்தில், “போலீசார் தாக்கியதில் கிரண் குமார் இறக்கவில்லை” என்று, சிராலா காவல் நிலைய போலீசார் கூறியுள்ளனர்.

மேலும், கிரண் குமார் மற்றும் ஆபிரகாம் ஆகியோர் மது குடித்துவிட்டு வண்டி ஒட்டி வந்ததாகவும், அப்போது காவல் துறையினர் அவர்களது இரு சக்கர வாகனத்தைத் தடுத்து நிறுத்திய போது, ​​கிரண் குமார் மற்றும் ஆபிரகாம் ஆகியோர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் குறிப்பிட்டனர். 

குறிப்பாக, காவல் துறை வாகனத்தில் கிரண் குமார் மற்றும் ஆபிரகாம் ஆகியோரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லும்போது ​​கிரண் குமார் வாகனத்திலிருந்து குதித்து இறந்தார்” என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

எனினும், கிரண்குமாரின் தந்தை மோகன் அளித்த புகாரின் பெயரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், இது குறித்தது விசாரிக்க ஒரு சிறப்பு குழுவையும் அமைத்து விசாரிக்க உத்தரவிட்டனர்.

அத்துடன், உயிரிழந்த கிரண் குமாரின் குடும்பத்திற்கு ஆந்திரா மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே, சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு போலவே, ஆந்திராவில் போலீசார் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளது கடும் அதிர்ச்சியையும், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.