அதீத பக்தியால், தங்களது 2 மகள்களையும் நிர்வாணப்படுத்தி பூஜை அறையில் அடித்துக் கொன்ற பெற்றோரால், அந்த மாநிலமே கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறது. 

ஆந்திரா மாநிலத்தில் தான் இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப் பள்ளியைச் சேர்ந்த புருஷோத்தம் நாயுடு - பத்மஜா தம்பதியினர், இருவரும் அங்குள்ள கல்லூரியில் பேராசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு அலேக்யா, சாயி திவ்யா என்ற இரு மகள்கள் உள்ளனர். இதில் ஒருவருக்கு 27 வயதும், மற்றவருக்கு 22 வயதும் நடந்து வந்தது. அவர்கள் இருவரும் தற்போது படித்துக்கொண்டு இருந்தனர்.

இப்படிப்பட்ட நிலையில், இந்த தம்பதிக்கு கடவுள் மீது அதீத பக்தி இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதனால், பேராசிரியர்களாக பணியாற்றும் அந்த பெற்றோருக்கு, அமானுஷ்யங்கள் மீது அதிக நம்பிக்கையும், பூஜை மற்றும் யாகங்கள் செய்வதில் அதிக ஆர்வமும் இருந்திருக்கிறது.

அத்துடன், தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக, கடந்த 8 மாதங்களாக மகள்கள் இருவரும் வீட்டிலேயே பெற்றோருடன் தங்கி வந்தனர். 

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக வீட்டில் பூஜைகள் செய்து சில அற்புதங்கள் நடத்துவதாகக் கூறி, பல்வேறு விதமான பூஜைகள் செய்து வழிபாடு செய்து வந்துள்ளனர். 

இந்த நிலையில் கடந்த 24 ஆம் தேதி இரவு அந்த வீட்டில் பூஜைகள் செய்தபடி அந்த தம்பதியினர் இருந்துள்ளனர். அப்போது, தங்களது இரு மகள்கைளையும் பூஜை அறையில் நிற்க வைத்து, உடற்பயிற்சி செய்யும் டம்பல்ஸ் மூலம் அடித்து கொலை செய்து பூஜைகள் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அப்போது, அவர்களது இரு மகள்களும் கடும் சத்தம் போட்டதால், அந்த சத்தத்தைக் கேட்ட அக்கம்பக்கத்தினர், உடனடியாக போலீசாருக்கு தகவல் கூறியுள்ளனர்.

உடனடியாக இது தொடர்பாக விரைந்து வந்த போலீசார், அந்த வீட்டை ஆய்வு செய்தனர். பின்னர், சில மணி நேரம் கழித்து செய்தியாளர்களிடம் பேசிய போலீசார், “கணவன் - மனைவியான புருஷோத்தம் நாயுடு, பத்மஜா இருவரும் நல்ல வேலையில் பணிபுரிந்து வரக்கூடிய நிலையில், மகள்களையும் படிக்க வைத்து வந்துள்ளனர். ஆனால், ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள் பக்தியின் மூலம் ஏதோ அற்புதங்கள் நிகழ்ந்துவிடும் என்ற எண்ணத்தில் தங்களது இரு மகள்களையும் பூஜை அறையில் நிர்வாணப்படுத்திவிட்டு அதன் பின்னர் அடித்து கொலை செய்துள்ளனர்” என்று கூறினார்.

“எதற்காக இவ்வாறு செய்தார்கள் என்று தெரியாத நிலையில், போலீசார் மற்றும் உறவினர்களைக் கூட அவர்கள் வீட்டிற்குள் உள்ளே வரவிடாமல் தடுத்து வருகின்றனர்” என்றும், அவர் குறிப்பிட்டார்.

மேலும், “தங்கள் மகள்கள் மீண்டும் எழுந்து வருவார்கள் என்றும், ஒரு இரவு பொறுத்து இருங்கள் என்றும் அவர்கள் கூறுவதாகவும்” போலீசார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தம்பதிகளான புருஷோத்தம் நாயுடு - பத்மஜா இருவரையும், அங்குள்ள மதனபள்ளி சிறையில் 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டு உள்ளனர். 

அத்துடன், நீதிமன்றக் காவலுக்கு முன்னதாக, புருஷோத்தம் நாயுடு, பத்மஜா இருவரையும் கொரோனா பரிசோதனைக்காக போலீசார் அழைத்துச் சென்றபோது,  

ஒத்துழைக்காமல் நடந்துகொண்ட பத்மஜா, “நான் சிவனின் அவதாரம். என் கழுத்தில் விஷம் உள்ளது. அதனால் நான் ஏற்கனவே கொரோனாவை அகற்றிவிட்டேன். சிவன் திரும்பி வந்துவிட்டார். நான்தான் சிவன்” என்று கூச்சல் போட்டு, விநோதமாகவும் நடந்துகொண்டுள்ளார்.

பிறகு நிதானத்திற்கு வந்த அவர், “எங்கள் மகள்களை நாங்கள் தேவையில்லாமல் கொன்றுவிட்டோம். நாங்கள் வாழத் தகுதியானவர்கள் இல்லை” என்றும், அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் மட்டுமல்லாது, அந்த மாநில மக்களே கடும் அதிர்ச்சியிலும், பீதியிலும் உரைந்துள்ளனர்.