குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 50 வயது தந்தையின் 2 வது கல்யாண ஆசைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மகனை, தந்தையே கடுமையாகத் தாக்கிய சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

“ஆசை 20 வதிலும் வரும், 60 வதிலும் வரும் என்பதற்கு உதாரணம் தான்” அகமதாபாத்தில் நடைபெற்றுள்ள இந்த சம்பவம் சாட்சியாக அமைந்திருக்கிறது.

அகமதாபாத் தரியபூர் பகுதியைச் சேர்ந்த 50 வயதான நயிமுதின் சேக் என்பவர் தான், இந்த குற்றச்சாட்டுக்கு தற்போது ஆளாகி இருக்கிறார்.

தரியபூர் பகுதியைச் சேர்ந்த 50 வயதான நயிமுதின் சேக், தனது மனைவி மற்றும் மகனுடன் சந்தோசமாக ஒன்றாக ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தனர். அப்போது, நயிமுதின் சேக்கிற்கும், அவரது மனைவி ஜுபேதாபானுவுக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டுக்கொண்டே இருந்தது. இதனால், அடிக்கடி கணவன் - மனைவி இருவரும் சண்டை போட்டுக்கொண்டே இருந்தனர்.

ஒரு கட்டத்தில் கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு மோதல்கள் அதிகரிக்கவே, அவர்களுக்குள் சண்டையும் பெரிதானது. இதனால், கணவன் நயிமுதின் சேக், மனைவி ஜுபேதாபானு விட்டுப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார்.

அதாவது, அவர்களது மகன் யாஹ்யா ஷேக்கும், அவரது தாயார் ஜுபேதாபானுவுன் அங்குள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் தனியாக வசித்து வருகின்றனர். அதே அடுக்குமாடிக் குடியிருப்பின் தரை தளத்தில் நயிமுதின் சேக், வசித்து வந்தார்.

இந்நிலையில், 50 வயது தந்தை நயிமுதின் ஷேக் 2 வது கல்யாணம் செய்ய ஆசைப்பட்டு உள்ளார். இரண்டாவது திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து, அது தொடர்பான ஏற்பாடுகளையும் அவர் செய்து வந்தார். இந்த தகவல், முதல் தளத்தில் வசித்து வந்த மகன் யாஹ்யா ஷேக்கிற்கு தெரிய வந்தது. இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த மகன், தந்தை நயிமுதின் சேக் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் இதனால், தந்தைக்கும் - மகனுக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், பிரச்சனை பெரிதாகி உள்ளது.

இதில், கடும் ஆத்திரமடைந்த தந்தை நயிமுதின் சேக், மகன் யாஹ்யா ஷேக்கை கடுமையாகத் தாக்கி உள்ளார். அடிப்பது தந்தை என்பதால், மகன் யாஹ்யா ஷேக் திருப்பி தந்தையை தாக்க வில்லை என்று கூறப்படுகிறது. இதனால், மகன் யாஹ்யா ஷேக்கின் தயார், தனது கணவனைத் தடுத்துள்ளார். அப்போது, அவரையும் நயிமுதின் சேக், தாக்கி உள்ளார்.

தந்தையிடம் அடி வாங்கிய மகன் யாஹ்யா ஷேக்கிற்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவரது தோள்பட்டை, கன்னம், அவரது முதுகு பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, மகன் யாஹ்யா ஷேக்கை அவரது தாயார் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு, அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அத்துடன், மகனைத் தாக்கிய கணவன் நயிமுதின் சேக் மீது, அவரது தாயார் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, 50 வயது தந்தையின் 2 வது கல்யாண ஆசைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மகனை, தந்தையே கடுமையாகத் தாக்கி பலத்த காயம் ஏற்படுத்திய சம்பவம், அகமதாபாத்தில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.