கொரோனா பரவல், பொருளாதார நெருக்கடி உள்பட பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையே நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 14-ஆம் தேதி தொடங்கியது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் முகக்கவசம், சமூக இடைவெளி உள்பட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு அது குறித்த விவாதம் நடத்தப்பட்டது. பின்னர் வாக்கெடுப்பு மூலம் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு வந்தன. அந்தவகையில் கடந்த கடைசி 2 நாள்களில் 14 மசோதாக்கள் என 10 நாள்களில் 25 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

எனினும் வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதாக்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

எனினும் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதற்கு கண்டனம் தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் வளாகத்திலேயே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்றும் (புதன்கிழமை) அவையை புறக்கணித்து உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் நாடாளுமன்ற மாநிலங்களவையை மறு தேதி குறிப்பிடாமல் அவைத் தலைவர் வெங்கய்யா நாயுடு ஒத்தி வைப்பதாக அறிவித்திருக்கிறார். மாநிலங்களவையில் நேற்று செவ்வாய் நடந்த அலுவல் ஆலோசனைக் கமிட்டி கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. பாராளுமன்ற விவகார இணை அமைச்சர் வி. முரளிதரன் மாநிலங்களவையில் இன்று இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

சில முக்கியமான மசோதாக்கள் மாநிலங்களவையின் ஒப்புதலுக்காக இன்று பரிசீலிக்கப்பட இருந்தன. ஒவ்வொரு மசோதாவுக்கு எவ்வளவு நேரம் ஒதுக்குவது என்று அலுவல் ஆலோசனைக் கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மாநிலங்களவையில் ஒப்புதலுக்காக காத்து நிற்கும் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட பிறகு, அவை ஒத்தி வைப்பது குறித்த தீர்மானம் அவைத் தலைவருக்கு சமர்ப்பிக்கப்படும் என்று முரளிதரன் குறிப்பிட்டார்.

அரசாங்கம் அவையை ஒத்தி வைப்பது குறித்த பரிந்துரையை அவைத் தலைவருக்கு  வழங்கலாம். ஆனால் அவையை என்று ஒத்தி வைப்பது என முடிவு எடுக்க அவைத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது என அவைத் தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார்.

மாநிலங்களவையின் ஒப்புதலுக்காக சில மசோதாக்கள் காத்திருக்கின்றன அவை: 

அந்நியச்செலாவணி ஒழுங்குமுறை திருத்த மசோதா, நிதி ஒப்பந்த மசோதா, நிதி ஒதுக்கீட்டு மசோதா எண் 3, நிதி ஒதுக்கீட்டு மசோதா எண் 4. அவைத் தலைவர் வெங்கையா நாயுடு தொடர்ந்து பேசும்பொழுது உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் நவம்பர் மாதம் அவையில் இருந்து ஓய்வு பெறுகிறார்கள் என்று கூறினார். பிஎல் புனியா, ராம்கோபால் யாதவ், ஹர்தீப் பூரி, நீரஜ் சேகர், ராஜ் பாப்பர் மற்றும் ஜாவித் அலி.

``சிலர் மீண்டும் அவைக்கு தேர்ந்தெடுக்கப்படலாம். மற்றவர்களை அவை சந்திக்க நாள் ஆகலாம்" என்று வெங்கையா நாயுடு கூறினார். அக்டோபர் 1-ஆம் தேதி நிறைவடைய இருந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் குளிர்கால கூட்டத்தொடர் முன்கூட்டியே நிறைவுபெற்றுள்ளது. 

``மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நடந்துகொண்ட விதம் வருத்தம் அளிக்கிறது; எதிர்காலத்தில் இப்படி நடந்து கொள்ளக்கூடாது" என மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார். மேலும் நாடாளுமன்ற வளாகத்தில் மாநிலங்களவை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். 8 எம்.பி.க்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை திரும்பப் பெறாது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.