சிறுநீரக மருத்துவத்துறையில் 35 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் வாய்ந்த மருத்துவர் P.சௌந்தரராஜன். ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தி உள்ளார். இந்தியாவிலேயே முதன் முறையாக HIV நோயாளிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ததும், பாம்பு கடியால் பாதிக்கப்பட்டவரின் சிறுநீரகத்தை எடுத்து வெற்றிகரமாக பயன்படுத்தியதும் மருத்துவர் P. சௌந்தரராஜனின் சாதனைகளாக திகழ்கின்றன.

மேலும் 30-க்கும் மேற்பட்ட சிறுநீரக மருத்துவர்களை உருவாக்கிய மருத்துவர் P. சௌந்தரராஜனுக்கு டெல்லி மருத்துவ நிபுணர்களின் குழுமமான அவதார் நிறுவனம் துரோணாச்சாரியார் விருது வழங்கி கௌரவித்துள்ளது. காணொலி மூலம் நடைபெற்ற பிரபல சிறுநீரக நிபுணர்களின் மாநாட்டில், மருத்துவர் டாக்டர் P.சௌந்தரராஜனுக்கு துரோணாச்சாரியார் விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் செளந்தரராஜனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம், ``விருது வழங்கப்பட்டுள்ளது பெரு மகிழ்ச்சியளிக்கிறது. தமிழகத்திற்கும், தமிழர்களுக்கும் பெருமை தேடித்தந்துள்ள Dr.சௌந்தரராஜன் அவர்கள் மருத்துவத்துறையில் மேலும் பல சாதனைகள் படைத்திட எனது மனம்நிறைந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவிலேயே முதன் முறையாக HIV நோயாளிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தது உட்பட பல்வேறு சாதனைகளுக்காக மாண்புமிகு தெலங்கானா ஆளுநர் மருத்துவர் தமிழிசை சௌந்தரராஜன் @DrTamilisaiGuv, அவர்களின் கணவர் Dr.சௌந்தரராஜன் @kidneydrsoundar அவர்களுக்கு துரோணாச்சாரியார் விருது!” என பதிவிட்டுள்ளார்.

மருத்துவரும் ஆளுநரமான தமிழிசையும், தன் கணவர் சௌந்தரராஜனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதேநேரம், மருத்துவர்கள் குறித்து மக்களின் கண்ணோட்டத்தில் நிறைய மாற்றங்கள் வரவேண்டும் என்றும் மருத்துவர்களின் சேவைகளை, துயர்களை மக்கள் அடையாளம் காணவேண்டும் என்றும் அவர் சமீபத்தில் குறிப்பிட்டிருக்கிரார். இந்தியன் மெடிக்கல் அசோசியேஷனை சேர்ந்தவர்கள், ஆன்லைனில் நடத்திய கான்வகேஷனில் விருந்தினராக பங்கேற்ற அவர், மேற்கூறிய தகவல்களையெல்லாம் கூறியிருந்தார். மேலும் பேசியபோது, மருத்துவர்கள் திறம்பட செயல்பட்டு சேவை அளிப்பதால், நாட்டில் கொரோனா மரணங்களின் சதவிகிதம் மிகவும் குறைவாக இருக்கின்றது என்று கூறியுள்ளார்.  கொரோனா பாதிக்கப்பட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மரணங்களின் விகிதம், 15 சதவிகிதம் என்றிருப்பது கவலை தெரிவிப்பதாக கூறியிருக்கிறார்.

இந்த கலந்துரையாடலில் ஐ.எம்.ஏ. தேசிய தலைவர் ராஜன், செக்ரடரி ஜெனரல் அசோகன், அஷ்ரப், தெலுங்கானா மாநிலத்தின் மெடிக்கல் கவுன்ஸிலை சேர்ந்த ரவீந்தர் ரெட்டி ஆகியோரும் பங்கு கொண்டனர்.