தொடர்ந்து அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஒரு பக்கம் இருக்கும் நிலையில், தமிழ்நாடு காவல் துறையின் புதிய டிஜிபியாக பொறுப்பேற்று உள்ள சைலேந்திர பாபு முன் இருக்கும் சவால்கள் என்னென்ன? என்பதைப் பற்றி என்பதைப் பற்றி தற்போது பார்க்கலாம். 

தமிழ்நாடு காவல் துறையின் புதிய தலைமை இயக்குநராக சி.சைலேந்திர பாபு நியமிக்கப்பட்ட நிலையில், அவர் முறைப்படி நேற்று பதவியேற்றுக் கொண்டார்.

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருந்த திரிபாதி நேற்றுடன் ஓய்வு பெற்ற நிலையில், தமிழகத்தின் புதிய டிஜிபியாக டாக்டர் சைலேந்திரபாபு நியமிக்கப்பட்டு இருக்கிறார். அவரது பதவிக் காலம் 2 ஆண்டுகள் ஆகும். 

புயல், மழை, மீட்புப் பணி, சைக்கிள் பந்தயம் என அனைத்திலும் சைலேந்திர பாபு பலருக்கும் முன்னுதாரணமாகச் செயல்பட்டு வந்திருக்கிறார். இப்படி,  பன்முக திறமை வாய்ந்தவர் சைலேந்திரபாபு. 

அதே நேரத்தில், பன்முக திறமை வாய்ந்த சைலேந்திரபாபு, தலைசிறந்த தொழில் முறையிலான அதிகாரியும் ஆவார். 

குறிப்பாக, களத்தில் இறங்கி சேவை செய்வதில் தமிழ்நாடு காவல் துறை உயரதிகாரிகள் மட்டத்தில், சைலேந்திரபாபுவை அடித்துக்கொள்ளத் தமிழ்நாட்டிலேயே ஆள் இல்லை என்று சொன்னாலும், அது மிகையாகாது.

முக்கியமாகத் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை கையாள்வதிலும் சரி, ரவுடிகள் ஒழிப்பு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக இருந்தாலும் சரி, நிர்வாகம் மற்றும் ஆளுமை திறமையிலும் சரி, போலீஸ், பொது மக்கள் நலத்தைப் பேணி காப்பதிலும் சரி, அவருக்கு நிகர் அவர் மட்டுமாகவே இருக்கிறார்.

ஆனால், தற்போது தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபு பதவி ஏற்றுக்கொள்ள இந்த சூழலில், தமிழ்நாட்டில் சில பிரச்சனைகள் முக்கிய பிரச்சனைகளாக, அதுவும் சவால் நிறைந்தவையாக இருக்கின்றன.

அவற்றில் முக்கியமானது தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்துவரும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. இதனால், இது போன்ற குற்றங்கள் இனி நடைபெறாமல் இருக்கவும், அப்படி நடைபெறும் குற்றங்களுக்கு உடனுக்குடன் தண்டனையைப் பெற்றுக் கொடுப்பதும் மிக முக்கிய சவலாக முன் நிற்கிறது.

வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் தமிழ்நாட்டில் குடிபெயர்ந்து இருப்பதால், அவர்கள் மூலமாக இங்கு நாளுக்கு நாள் வழிபறி, திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் காணப்படுகின்றன. இதனால், வெளிமாநில கொள்ளைக் கும்பலின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தி, இனி குற்றங்களை நடைபெறாமல் தடுக்க வேண்டியது சைலேந்திரபாபுவின் முன்பு இருக்கும் மிக முக்கியமான சவாலாக இருக்கிறது.

அத்துடன், “மாறிவரும் டிஜிட்டல் யுகத்திற்கு ஏற்க, தமிழ்நாட்டில் சைபர் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. இணையத்தில் பண மோசடிகள் தற்போது சர்வ சாதாரணமாக அரங்கேறிக்கொண்டு இருக்கின்றன. இது குறித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டிய சவால் நிறைந்த பணியும் சைலேந்திரபாபுவின் முன்பாக இருக்கிறது.

இவற்றுடன், தமிழ்நாட்டில் தற்போது கொரோனா விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால், போலீசார் பலரும் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இப்படியான நிலையில், சில இடங்களில் பொது மக்கள்  - போலீசார் இடையே மோதல் போக்குகள் தொடர்ந்து அதிகரித்துக் காணப்படுகின்றன. இதனால், பொது மக்களிடம் போலீசார் நல்லுறவை வளர்க்க வேண்டிய பொறுப்பும் டிஜிபின் முன்பாக இருக்கிறது.

இதனிடையே, எப்போதும் காவல் துறை சீருடையிலும் சரி, இயல்பான ஆடைகளிலும் சரி, தனது இயல்புகளால் மிடுக்குடன் நடைபோடும் புதிய டிஜிபி சைலேந்திரபாபு, இந்த சவாலான தருணத்தில் தமிழ்நாடு காவல் துறையை இன்னும் சிறப்பாக வழி நடத்தி நீதியின் கொடியை நாட்டுவார் என்ற புதிய நம்பிக்கையே கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.