உலகில் மிகவும் சக்தி வாய்ந்த 100 பேரின் பட்டியலில் பிரதமர் மோடி உட்பட சில இந்தியர்களும் இடம் பெற்றுள்ளனர். 

உலக அளவில் மிகவும் சக்தி வாய்ந்த டாப் 100 பேரின் பட்டியலை டைம் இதழ் தற்போது வெளியிட்டு உள்ளது. இந்த பட்டியலில், உலகின் பல்வேறு துறைகளில் சிறப்பாகத் திகழ்வோரை வைத்து இந்த பட்டியல் தயார் செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டு உள்ளது.

அதே நேரத்தில், உலக அளவில் மிகவும் சக்தி வாய்ந்த மனிதர்களின் இந்த பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்தவர்களும் சிலர் இடம் பிடித்து உள்ளனர். இதில், பிரதமர் நரேந்திர மோடி, பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா, கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை, பேராசிரியர் ரவீந்திர குப்தா உள்ளிட்டோரும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். 

அத்துடன், இந்த பட்டியலில், சீன அதிபர் ஜி ஜின்பிங், அமெரிக்க மருத்துவ வல்லுநர் அந்தோணி ஃபாஸி உள்ளிட்டோரும் இதில் இடம் பெற்றுள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவில் தொடர்ந்து 2 வது முறையாகத் தேர்தலில் வெற்றி பெற்று உள்ளார். அதே நேரத்தில் பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. ஜம்மு, காஷ்மீருக்கான சிறப்பு அங்கீகாரத்தை ரத்து செய்தது, குடியுரிமை சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டது உள்ளிட்ட பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டதன் மூலம், பிரதமராகவே இருந்தாலும் நாட்டு மக்களின் மத்தியில் அவர் பரபரப்பாகப் பேசப்பட்டார் என்று, டைம் இதழ் கூறி உள்ளது. 

நடிகர் ஆயுஷ்மான் குரானா

நடிகர் ஆயுஷ்மான் குரானா, எப்போதும் வித்தியாசமான மற்றும் விதவிதமான கதைக் களம் கொண்ட படத்தில் மட்டுமே நடிப்பார் என்றும், இப்படி நடித்ததின் மூலமே மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவராக நடிகர் ஆயுஷ்மான் குரானா அறியப்படுகிறார் என்றும், குறிப்பிடப்பட்டு உள்ளது. இவரது படங்களுக்கென்று தனி இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளிலும் தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது என்றும், தனக்கு வரும் வாய்ப்புகளைச் சிறப்பாகப் பயன்படுத்தி அவர் முன்னேறி வருகிறார் என்றும், டைம் இதழ் புகழாரம் சூட்டி உள்ளது.
 
சுந்தர் பிச்சை

கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, இளம் வயதிலேயே தனது உழைப்பால் இந்த நிலையை அடைந்திருக்கிறார். தனது தீவிர முயற்சியால் கூகுள் நிறுவனத்தை மேம்படுத்தி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் Drive, Gmail, Maps ஆகியவற்றிலும் கூகுளின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும் வகையில் அவற்றின் செயல் திறனையும், மக்கள் மிகவும் எளிமையாகப் பயன்படுத்தும் வகையிலும் அதன் தரத்தையும் உயர்த்தி இருக்கிறார் என்று, டைம் இதழ் தெரிவித்து இருக்கிறது.

ரவீந்திர குப்தா

இங்கிலாந்தைச் சேர்ந்த எய்ட்ஸ் நோயாளி ஒருவர், கடந்த மார்ச் மாதம் அந்த நோயிலிருந்து முற்றிலும் குணமடைந்து மீண்டு வந்தார். இதற்கு, இதற்கு இந்தியாவைச் சேர்ந்த பேராசிரியர் ரவீந்திர குப்தா தலைமையிலான குழு மேற்கொண்ட ஆய்வு தான் மிகப் பெரிய அளவில் அந்த நோயாளிக்கு உதவியது. உலகளவில் ஹெச்.ஐ.வி. யில் இருந்து மீண்டு வந்த 2 வது நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. எய்ட்ஸ் நோயாளிகளைக் குணப்படுத்துவதில் அவர் நம்பிக்கை அளிக்கும் விதமாக நடந்து கொண்டது மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. இதனால், உலக நாடுகள் எல்லாம் பேராசிரியர் ரவீந்திர குப்தாவை தலை நிமிர்ந்து பார்த்தது. அவரை கவனிக்க ஆரம்பித்தது. இதனால், அவரும் சக்தி மிக்க மனிதராகத் திகழ்கிறார் என்று டைம் இதழ் கூறியுள்ளது.

பில்கிஸ்

மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து, டெல்லியின் ஷாஹீன் பாக் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 82 வயதான மூதாட்டி பில்கிஸ் என்பவரும் ஒருவர். தனது தள்ளாத இந்த முதுமையிலும், தனது வயதைக்கூட பொருட்படுத்தாமல் அந்த மூதாட்டி போராட்டத்தில் கலந்து கொண்டு குரல் உயர்த்தி கொடுத்தது பலரது கவனத்தையும் ஈர்த்தது. அந்த மூதாட்டியின் போராட்ட குணம் பலரையும் கவனிக்க வைத்து, போராட்டத்தை மேலும் தூண்ட காரணமாக இருந்தது என்றும், டைம் இதழ் தெரிவித்து உள்ளது.