பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்துடன் சுதந்திரப் பேரணி ஒன்று நடந்துள்ளது. 1947-ம் ஆண்டு முதல் பாகிஸ்தானிடம், சிந்து மாகாணத்தை பிரிட்டிஷ் காரர்கள் ஒப்படைத்தனர். இதன்பின், 1967-ம் ஆண்டு தனி சிந்து தேசம் கோரி, பாகிஸ்தானில் சிந்துமாகாணத் தலைவர் ஜிஎம் சையது, பீர் முகமது அலி ரஷ்டி ஆகியோரது தலைமையில் போராட்டம் நடைப்பெற்றது. அதன்பின் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெறவில்லை என்றாலும் தொடர்ந்து தனி சிந்து தேசம் கோரப்பட்டு வந்தது. 


இந்நிலையில் ஜிஎம் சையதுவின் 117-வது பிறந்த நாளை முன்னிட்டு பாகிஸ்தானிடமிருந்து சுதந்திரம் வேண்டும் என்று  பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் போராட்டக்காரர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் அடங்கிய புகைப்படங்கள் கொண்ட பதாகைகளுடன் பேரணி நடைப்பெற்றது. இந்த உலகத் தலைவர்கள் தனி சிந்து மாகாண விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். 


” சிந்து சமவெளி நாகரீகம் தொழில், தத்துவம், கடல்வழி பயணம், கணிதம், வானியல் என்று பல துறைகளில் உலகளவில் சிறந்து விளங்கியது. இப்போது இந்த மாகாணத்தை பாகிஸ்தான் ஆட்சி செய்கிறது ஆனால்  இஸ்லாமியத்தின் பெயரில் பஞ்சாபிய ஏகாதிபத்தியம் தான் நடைபெற்று வருகிறது. நாங்கள் பாகிஸ்தானின் அடிமைகளாக இருக்க விரும்பவில்லை. பாசிச-இஸ்லாமிய- பயங்கரவாத பாகிஸ்தானிடமிருந்து விடுதலை வேண்டும். ” என்கிறார்கள் போராட்டக்காரர்கள்.