உலக மக்களின் உடல்நிலையையும், பொருளாதாரத்தையும் கடந்த ஆறு மாத காலமாக ஆட்டிப்படைத்து வருகின்றது கொரோனா வைரஸ். எந்த ஒரு நாட்டையும் விட்டு வைக்காத இந்த கோவிட் - 19 வல்லரசு நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளிலும் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தியது. மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவில், கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.5 லட்சம் என்ற எண்ணிக்கையைத் தொடவுள்ளது.

என்னதான் உலக நாடுகள் அனைத்தும் இப்படித் திணறிக் கொண்டிருந்தாலும் கொரோனா-வின் பிறப்பிடமாகக் கருதப்படும் சீனா தற்போது அதன் பாதிப்பிலிருந்து வேகமாக மீண்டு வந்துகொண்டிருக்கிறது. குறிப்பாகச் சீனாவில் உற்பத்தித் துறை முதல் சேவைத் துறை வரையில் அனைத்துத் துறை வர்த்தகமும் சிறப்பாக நடந்து வருகின்றது. இந்தக் காரணத்தால் சீனாவில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா-வுக்குப் பின் முதல் முறையாகப் பொருளாதார வளர்ச்சி சந்தித்துள்ள நாடு என்ற பெயரைப் பெறுகிறது சீனா. 

உலகின் முன்னணி பொருளாதார நாடுகளில் ஒன்றாக விளங்கும் சீனா, கொரோனா பாதிப்பைத் தடுக்கும் வகையில் அமல்படுத்தியிருந்த பொது முடக்கமும் கட்டுப்பாடுகளும் கொஞ்சம் கொஞ்சமாக தளர்க்கபட்டு அங்கிருக்கும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும் நிலை உருவாகி இருக்கிறது. பொது முடக்கம், சீனாவில் இரண்டாவது அலை கொரோனா பாதிப்பை ஏற்படுத்தியது என்பதும் மறுப்பதற்கில்லை. இருப்பினும் இரண்டாவது அலை கொரோனாவை சீன அரசு மிகவும் நேர்த்தியாகவும் வேகமாகவும் கட்டுப்படுத்தியுள்ளதது.

கட்டுப்படுத்தப்படும் யுக்தியைச் சீனா அறிந்த காரணத்தினாலேயே, சீனாவில் கடந்த சில மாதங்களாகவே வர்த்தகம் மற்றும் உற்பத்தி சந்தை வேகம் பெறத்தொடங்கியுள்ளது. இன்றைய சூழலில் சீனாவில் வர்த்தக சந்தைகள் கிட்டத்தட்ட 90 சதவீதம் இயங்கி வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன. இதன் பலனாக, ஜூன் காலாண்டில் சீன பொருளாதாரம் 3.2 சதவீதம் வரையிலான வளர்ச்சி அடைந்திருப்பது தெரியவந்துள்ளது. இதற்கு முன்னர், கடந்த மார்ச் காலாண்டில் சீனா -6.8 சதவீத பொருளாதாரச் சரிவை சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது. வெறும் 3 மாத காலத்தில் 3.8 சதவீத பொருளாதார சீனா பதிவு செய்து, தன் வளர்ச்சியைக் காண்பித்திருப்பது பலதரப்பினரிடமிருந்தும் பாராட்டைப் பெற்று வருகிறது. 

கொரோனாவை கையாளும்  யுக்தியை அறிந்து கொண்ட காரணத்தினால், அடுத்த காலாண்டில் சீனா முழுமையான வளர்ச்சியை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சீன அரசின் கடுமையான கட்டுப்பாடுகளின் எதிரொலியாகத்தான் கொரோனா தொற்று அங்கு படிப்படியாகக் குறைந்து, இப்போது வர்த்தக மற்றும் உற்பத்தி சந்தை இயங்க துவக்கத்துக்கு உதவியிருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். 

பிற நாடுகளோடு ஒப்பிடுகையில், சீனா அளவு வேறு எந்த நாட்டிலும் இவ்வளவு வேகமான பொருளாதார வளர்ச்சி கொரோனா நேரத்தில் பதிவாகவில்லை. இந்தியாவிலும்கூட, பின்னோக்கிய நிலைதான் இன்றளவும் நீடிக்கிறது. இந்தியாவில் கடந்த 100 ஆண்டுகளில் ஏற்படாத அளவுக்கான பொருளாதார இழப்பு இப்போது ஏற்பட்டிருப்பதாகச் சொல்லியிருக்கிறார் ஆர்.பி.ஐ. கவர்னர்! கொரோனா ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து, பழைய நிலைக்கு வேகமாகத் திரும்பிய நாடு சீனா தான் எனப் பொருளாதார வல்லுநர்கள் சீனாவுக்குப் பாராட்டு மழையைப் பொழிகின்றனர். கிட்டத்தட்ட 6 கோடி மக்களை எவ்விதமான வர்த்தகம் மற்றும் பயணம் செய்யக் கூடாது என அதிகப்படியாகக் கட்டுப்பாடுகளை விதித்தது சீன ஜி ஜின்பிங் அரசு. 

வேலைவாய்ப்பு தற்போது சீனாவில் கிட்டத்தட்ட 90 சதவீத நிறுவனங்கள் இயங்க துவங்கினாலும், சினிமா, பயணம், மற்றும் சில சேவைத் துறைகள் வர்த்தகக் கட்டுப்பாடுகளில் தான் இருக்கிறது. இதன் காரணமாகப் பல லட்சம் மக்கள் இன்னும் வேலைவாய்ப்புப் பயத்தில் இருக்கின்றனர். இந்த வருடத்தின் இறுதிக்குள் சுமார் 2.5 கோடி மக்கள் வேலைவாய்ப்பை இழக்க நேரிடும் எனச் சீனா சந்தை ஆய்வுகள் கூறுகிறது. இதற்காகச் சீன அரசு 280 பில்லியன் டாலர் அளவிலான தொகையை 90 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காகச் செலவிட முடிவு செய்துள்ளது. 

ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சீனாவின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் அதிகளவில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை நம்பியிருக்கும் காரணத்தால், உலக நாடுகள் எவ்வளவு வேகமாக வர்த்தக எல்லைகளைத் திறக்கிறதோ, அவ்வளவு வேகமாகச் சீன வர்த்தகச் சந்தை முழுமையாக மீண்டு வரும் என சொல்லப்படுகிறது. முக்கியப் பிரச்சனை அவை அனைத்திற்கும் தாண்டி சீனாவிற்கு எதிராக அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் கடுமையான வர்த்தகக் கட்டுப்பாடுகளை விதிக்கும் காரணத்தால் புதிய வர்த்தகத்திற்குப் பெரிய வாய்ப்புகள் கிடைப்பது தற்போதைய சூழ்நிலையில் கடினமான விஷயமாகும். இருப்பினும் சீனா நம்பிக்கையோடு இருக்கிறது.

- ஜெ.நிவேதா