தமிழகத்தில், பொது முடக்கக் காலத்தில் சுகாதாரத்துறைக்கு அடுத்தபடியாக எதிர்க்கட்சி சார்பில் அதிக விமர்சனத்துக்கு உட்பட்ட ஒரு துறை மின்வாரியத்துறைதான். மின்கட்டணக் குளறுபடிகளை எதிர்த்து திமுகவினர் தொடர்ச்சியாகக் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக, வரும் ஜூலை 21-ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளின் முன்பு கறுப்புக் கொடி ஏற்றி, கண்டனப் போராட்டம் நடத்த வேண்டுமென திமுக சார்பில் பொது மக்களுக்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள் கூட்டம் ஸ்டாலின் தலைமையில் காணொலி வாயிலாக இன்று கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் முடிவில், ஆலோசனைகளின் தீர்வாக 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில் மின்கட்டண உயர்வுக்கு எதிராகப் போராட்டம், கொரோனாவுக்கான சிகிச்சை முறைகள், சாத்தான்குளம் தந்தை மகன் மரண வழக்கு, மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி இட ஒதுக்கீடு உள்ளிட்டவை முடிவு எடுக்கப்பட்டுள்ளன.

இதில் மின்கட்டண உயர்வை எதிர்த்து திமுக நிறைவேற்றிய தீர்மானம் பற்றிய விவரம் இங்கே!

“தமிழகத்தின் ஆளும் அரசு ஊரடங்கைப் பிறப்பித்த பின்னர், மக்கள் வெளியில் நடமாடும் நபர்களிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாயை அபராதமாக வசூலித்தது. அதேபோல ஆயிரக்கணக்கான வாகனங்களைப் பறிமுதல் செய்தது. இன்னொருபக்கம், வீட்டுக்குள் இருந்துள்ளவர்களிடம் கோடிக்கணக்கில் மின் கட்டணம் வசூலிக்கிறது. மின் கட்டணத்தைக் குறைக்கக் கோரி மக்கள் கேட்டால், `நீங்கள் வீட்டிற்குள்ளேயே இருந்து மின்சாரத்தை அதிகமாகப் பயன்படுத்தியுள்ளீர்கள்; அதெல்லாம் கட்டணத்தைக் குறைக்க முடியாது' என்று மக்கள் மீதே பழி சுமத்துகிறது.

கட்டணத்தையும், சரியாகக் கணக்கெடுக்காமல் தவறான கணக்கீடுகளின் அடிப்படையில் அதீத மின் கட்டணத்தை வசூலிக்கின்றனர். எல்லாத் தரப்பிலும் எவ்வளவோ நாங்கள் எடுத்துரைத்தும், அதையெல்லாம் ஏற்காமல், அனைத்துத் தரப்பு மக்களையும் பெருந்துயரத்திற்கு உள்ளாக்கியுள்ள இந்த அதிமுக அரசுக்கு மாவட்டச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

ஊரடங்கு காலகட்டத்தில் மக்கள் பலருக்கும் வேலை இல்லை, சம்பளமும் இல்லை, தொழில் இல்லை, வருமானமும் இல்லை. மின்சாரச் சட்டமேவும் “நுகர்வோருக்கு நியாயமான மின் கட்டணத்தை வழங்குவது மிக முக்கியம்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. நம் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை வாரியமே அச்சட்டத்தின் கீழ்தான் இயங்குகிறது. ஆனால் அதை ஏற்க மாட்டேன் எனச் சொல்வது சரியாக இருக்காது.

சட்டத்தின் கீழ் இயங்கும் இந்தத் துறைக்கு, கொரோனா காலத்தைச் சிறப்பு நேர்வாகக் கருதி மின் கட்டணச் சலுகை அளிப்பதில் சட்டரீதியாக எவ்வித தடையும் இல்லை என்பதால் அதைச் செயல்படுத்த வேண்டுகிறோம். இப்படியான சட்டத்தின் கீழ் மத்தியப் பிரதேசம், கேரளம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களே கொரோனா கால மின்கட்டணச் சலுகைகளை அறிவித்திருக்கிறது. இவற்றையெல்லாம் கவனிக்காமல், அதிமுக அரசு மட்டும் முறையாகவே கணக்கிட்டுள்ளோம் என்று உயர் நீதிமன்றத்தின் முன்பு வாதாடிவிட்டு, இப்போது அதையே விளக்கமாகச் செய்திக்குறிப்பு ஒன்றைக் கொடுத்திருப்பது பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பற்றிக் கவலைகொள்ளாத கருணையற்ற போக்காகும்.

அதிமுக அரசின் இந்தக் கருணையற்ற போக்கைக் கண்டித்தும், ‘ரீடிங்’ எடுத்ததில் உள்ள குழப்பங்களை மின் நுகர்வோருக்குச் சாதகமான முறையில் கணக்கிட்டு - ஊரடங்கு கால மின் கட்டணத்தைக் குறைக்கக் கோரியும் – குறிப்பாக, முந்தைய மாதத்திற்குச் செலுத்திய பில் கட்டணத்தைக் குறைப்பதற்குப் பதில் அந்தத் தொகைக்குரிய “யூனிட்டுகளை” கழிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், அப்படிக் குறைக்கப்பட்ட மின்கட்டணத்தை எளிய மாதத் தவணைகளில் செலுத்த மக்களுக்கு அனுமதி வழங்கக் கோரியும் வரும் ஜூலை 21 அன்று தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளின் முன்பு கறுப்புக் கொடி ஏற்றுவதோடு, கண்டன முழக்கங்களை எழுப்பிப் போராடுவது என்று மாவட்டச் செயலாளர்கள் – நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களின் இந்தக் கூட்டம் தீர்மானிக்கிறது.

கட்சி நிர்வாகிகள் இந்தப் போராட்டத்திற்கு வலிமை சேர்க்கும் விதத்தில் துண்டறிக்கைகள், சுவரொட்டிகள், மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் மக்களிடம் இந்தப் போராட்ட நோக்கத்தைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்”.

என்று திமுக தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- பெ.மதலை ஆரோன்