தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேர்வு எழுதுபவர்களுக்கு வரும் காலங்களில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த முக்கிய அறிவிப்பு நாளை நடக்க இருக்கும் குரூப் 1 தேர்வுகளுக்கும் பொருந்தும். இதுகுறித்து, தமிழ்நாடு தேர்வு  ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், 

“காலை 9.15 மணிக்குள் தேர்வுக்கூடத்திற்குச் சென்றடைய வேண்டும். இதற்கு முன்னர் நடத்தப்பட்ட தேர்வுகளுக்கு தேர்வு தொடங்கும் வரை தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர். தற்போது இந்த நடைமுறை கைவிடப்பட்டுள்ளது. காலை 9.15 மணிக்குப் பிறகு வரும் தேர்வர்கள் யாரும் தேர்வுக்கூடத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள்.
விடைத்தாளில் விவரங்களைப் பூர்த்தி செய்யவும், விடைகளை குறிக்கவும் கருப்பு நிற மை உடைய பந்து முனைப் பேனாவை (black ball pen) மட்டுமே பயன்படுத்த வேண்டும். பென்சில், ஏனைய நிற மைப் பேனாக்களை பயன்படுத்தக் கூடாது.

விடைத்தாளில் உரிய இடங்களில் (இரு இடங்களில்) கையொப்பமிட்டு, இடது கைப் பெருவிரல் ரேகையினைப் பதிக்க வேண்டும்.

வினாத்தாளில் உள்ள கேள்விகளுக்குள் ஏதேனும் கேள்விகளுக்கு விடை தெரியவில்லையென்றால் விடைத்தாளில் (E) என்ற வட்டத்தினைக் கருமையாக்க வேண்டும்.

விடைத்தாளில் ஏ, பி, சி, டி மற்றும் (இ) என்று ஒவ்வொரு விடைக்கும் எத்தனை வட்டங்கள் கருமையாக்கப்பட்டுள்ளன என்று எண்ணி அந்த மொத்த எண்ணிக்கையை உரிய கட்டங்களில் நிரப்பி கருமையாக்க வேண்டும். இந்த எண்ணிக்கை தவறாகும்பட்சத்தில் தேர்வர் பெறும் மதிப்பெண்களிலிருந்து ஐந்து மதிப்பெண்கள் குறைக்கப்படும்.

இச்செயலைக் செய்வதற்கு மட்டுமே ஒவ்வொரு தேர்வருக்கும் தேர்வு நேரம் முடிவுற்ற பிறகு 15 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்படும்.  1 மணி முதல் 1.15 மணி வரை இந்தச் செயல்பாட்டினை செய்து முடித்து விடைத்தாளினைத் தேர்வு அறைக் கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.

மேற்கூரிய அம்சங்கள் தேர்வர்களின் நலனுக்காகவும், எவ்வித தவறுகளும் நிகழாமல் தவிர்ப்பதற்காகவும் தேர்வாணையத்தால் அறிமுகப்படுத்திச் செயல்படுத்தப்பட உள்ளது’’. இவ்வாறு, தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.