சமீபகாலமாகவே, யூட்யூப் பிரபலங்கள் சர்ச்சையில் சிக்குவது தொடர்கதையாகி வருகிறது. கந்த சஷ்டி கவசத்தை அவதூறாக பேசியது, நபிகள் நாயகத்தை அவதூறாக பேசியது என்று, இறை நம்பிக்கை சார்ந்து நகர்ந்துக் கொண்டிருந்த இந்த சர்ச்சைகள், தற்போது கட்சி ரீதியான மோதல்களாக மாறிவருகின்றது. அந்தவகையில், மாரிதாஸ் மற்றும் மதன் ரவிச்சந்திரன் ஆகியோர் பல்வேறு சர்ச்சைக்குள் சிக்கி வருகின்றனர். இருவருமே, திமுக மற்றும் திராவிட கழகங்கள் குறித்து தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வந்தவர்கள்.

இவர்களில் மாரிதாஸ், நியூஸ் 18 செய்தி நிறுவனத்தின் மூத்த பத்திரிகையாளர்கள் திராவிட கழகத்தின் மூலம் இயக்கபப்டுகின்றனர் என்று சொன்னதற்காகவும் - மதன் ரவிச்சந்திரன், திமுகவின் இளைஞரணி செயலாளர் மீது குற்றச்சாட்டுகளை வைத்ததற்காகவும் தற்போது நீதிமன்றத்தில் வழக்கை எதிர்கொண்டு வருகிறார்கள். இதில் மாரிதாஸ் பிரச்னையில், நேற்று நீதிமன்றம் ஒருசில தீர்ப்புகளை வழங்கி, நஷ்டஈடு குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என சொல்லி வழக்கை ஒத்திவைத்துள்ளது. வழங்கப்பட்ட தீர்ப்பில், இதுவரை நியூஸ் 18 குறித்த வெளியிட்ட வீடியோக்களை நீக்க வேண்டும் - இனி நியூஸ் 18 தொடர்பாக இப்படி வீடியோ வெளியிட தடை என்று மாரிதாஸுக்கு சொல்லப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்றைய தினம் மாரிதாஸ் அரசு பணியாளர்கள் தொடர்பாக வெளியிட்டிருந்த பழைய வீடியோவொன்று வைரலாகியது. எட்டு மாதங்களுக்கு முன்பு வெளியாகியிருந்த அந்த வீடியோவில், அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வுக்கான போராட்டம் குறித்து பேசியிருந்தார் மாரிதாஸ். குறிப்பாக, 

`இந்த மாதிரியான போராட்டங்களை, திமுகதான் பின் நின்று இயக்குகிறது. போதுமான சம்பளம் வழங்கப்பட்டும் கூட, இந்தப் பணியாளர்கள் ஊதிய உயர்வுக்கு இப்படியெல்லாம் போராடுகிறார்கள். அரசு மருத்துவமனைகளில், அநியாயாங்கள் நடக்கிறது. அரசுப் பணியாளர்களுக்கு, நாட்டுப்பற்றும் கிடையாது, மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணமும் கிடையாது.

ஆகவே அரசு மருத்துவமனைகளில் தரப்படும் நலத்திட்ட உதவிகளுக்கான பணத்தை, தனியார் மருத்துவமனைகளில் செலுத்தி - அவர்களிடமிருந்து அரசாங்கம் நலத்திட்ட சேவைகளை எதிர்ப்பார்க்க வேண்டும். தனியார் நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களை வைத்து நிச்சயம் சிறப்பாக நலத்திட்டங்களை செய்து முடிக்கும். இப்படி செய்தால், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கும் சூழலும் அரசுக்கு ஏற்படாது; அதேநேரம் நலத்திட்டங்களும் சிறப்பாக முடியும்'

என்று பேசியிருந்தார் மாரிதாஸ். இந்த வீடியோ தற்போது வைரலானதை தொடர்ந்து, அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாரிதாஸுக்கு கண்டனங்கள் விடுக்கப்பட்டுள்ளது. மாரதாஸை, `குண்டர் தடுப்பு  சட்டத்தின் கீழ் மாரிதாஸை கைது செய்க!' என்று அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு முதல்வருக்கு அறிக்கை வாயிலாக வலியுறுத்தியுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது :

``அரசு மருத்துவர்கள் குறித்து மிகவும் அவதூறாக பேசி காணொளி வெளியிட்டுள்ள மாரிதாஸ் என்ற நபருக்கு அரசு டாக்டர்கள்  சங்கங்களின் கூட்டமைப்பு கடும் கண்டனத்தை பதிவு செய்கிறது. 
  
இந்த கோவிட் தொற்று நேரத்தில் தங்கள் உயிரை பொருட்படுத்தாமல் மக்களைக் காப்பதற்காக  அரசு மருத்துவர்கள் மற்றும் அரசு மருத்துவமனை பணியாளர்கள் அனைவரும் இரவும் பகலும் மிகவும் கடினமாக உழைத்து வருகிறார்கள். 

 இவ்விவகாரத்தில்,  மாண்புமிகு தமிழக முதல்வர் மற்றும் மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோர் உடனடியாகத் தலையிட்டு மாரிதாஸ் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அவரது காணொளியில் கூறப்பட்டுள்ளவை முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை. உலகளாவிய தொற்றுப்பரவல் நேரத்தில் பொதுமக்களிடையே தவறான தகவல்களை பரப்பியதற்காக குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்ட வேண்டும். 

யூடியூபில் உள்ள அவரது காணொளியை உடனடியாக நீக்க மாண்புமிகு முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்"

இந்த விஷயத்தில், தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் மற்றும் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் ஆகியவையும் கடும் தங்களின் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளன.

இதைத்தொடர்ந்து, மாரிதாஸ் மீது அரசு சார்பில் நடவடிக்கை எடுக்குப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

- ஜெ.நிவேதா