தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,83,792 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் மட்டும், 52,123 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறதாக சொல்லப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவு நேற்றைய தினம் எண்ணிக்கை 50,000- த்தை கடந்திருக்கிறது.

மேலும் கொரோனா தொற்றால், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 775 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 34,968 ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 10,20,582 ஆகவும் உயர்ந்துள்ளது. 15 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக சொல்லப்பட்டு வந்த நிலையில், அதில் 10 லட்சம் பேர் குணமடைந்ததாக கூறப்பட்டிருப்பது, மகிழ்ச்சியான செய்தியாக இருந்துவருகிறது.

நேற்று வரையில் இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 1,81,90,382 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. அதில் நேற்று மட்டும் 4,46,642 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றைய நாளின் முடிவில், இதுவரை பரிசோதிக்கப்பட்ட கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கையானது 2 கோடி என்றாகிவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

உலகளவில் கொரோனாவின் பாதிப்பு சில நாடுகளில் குறைந்துள்ளது. இருப்பினும் சில நாடுகளில் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது. அதில் அதிகரித்துக் கொண்டே போகும் நாடாக இந்தியா இருக்கிறது. அதிக பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் 2வது இடத்திலும் தொடர்ந்து நீடிக்கின்றன. தற்போது, 3வது இடத்தில் இருக்கும் இந்தியா, 2வது இடத்தை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக இந்தியாவில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 45 ஆயிரத்துக்கு மேல் இருந்து வருகிறது.

இதே வேகம் நீடித்தால், இன்னும் 15 நாட்களில் பிரேசிலை பின்னுக்கு தள்ளி, உலகளவில் 2வது இடத்தை பிடிக்கும் என நிபுணர்கள் கணிக்கின்றனர்.

இப்போதைக்கு, மற்ற நாடுகளை விட, இந்தியாவில் குணமானவர்களின் சதவீதம் அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் இந்தியர்கள் பயப்பட வேண்டாம் என சொல்லி வருகிறார் பிரதமர் மோடி

நாட்டில் கொரோனா பாதிப்பின் முதல் லட்சத்தை எட்டுவதற்கு 110 நாட்களான  நிலையில், அடுத்த 39 நாட்களில் இது 5 லட்சத்தை எட்டியது. தற்போது, தினமும் சராசரியாக 50 ஆயிரம் பேர் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதால், 2 நாட்களுக்கு ஒருமுறை கூடுதலாக தலா ஒரு லட்சம் அதிகமாகி வருகிறது.

இந்தியாவை பொறுத்தவரை, குறிப்பிட்ட சில மாநிலங்களில்தான் கொரோனா தொற்று மிக அதிகமாக காணப்படுகிறது. அவற்றுள் தமிழகமும் ஒன்று. தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் 6,500 என்ற எண்ணிக்கையில் புதிய நோயாளிகள் பதிவாகி வருகின்றனர்.

தமிழகத்தில் தினமும் 6000-7000 என புதிய நோயாளிகள் வந்துக்கொண்டிருக்கும் இந்த நிலையில், அண்டை மாநிலமான ஆந்திரா, நம்மை விடவும் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகிறது. அப்படி, நேற்று ஒரே நாளில் ஆந்திராவில் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 10,093 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த பாதிப்பு 1,20,390 ஆக உயர்ந்துள்ளது. அங்கு மொத்தமாக 63771 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளது.

ஆந்திராவில் இதுவரை மொத்தமாக 55406 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். மொத்தமாக இன்று மட்டும் 2784 பேர் குணமடைந்து உள்ளனர். இன்று ஆந்திராவில் 65 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். மொத்தமாக ஆந்திராவில் 1213 பேர் பலியாகி உள்ளனர்.

ஆந்திராவில் மிகவும் அதிகமாக கிழக்கு கோதாவரியில் 1676 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனந்தபூர் பகுதியில் 1371 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. குண்டூரில் 1124 பேருக்கு 24 மணி நேரத்தில் கொரோனா ஏற்பட்டுள்ளது. கர்நூலில் 1091 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக ஆந்திராவில் தினமும் 7 ஆயிரத்திற்கும் அதிகமான புதிய நோயாளிகள் எண்ணிக்கை பதிவாகி வந்தது. இது போக போக குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட வந்த நிலையில் அதிர்ச்சி அளிக்கும் விதத்தில், ஒரே நாளில் இன்று 10 ஆயிரம் கேஸ்கள் வந்துள்ளது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஆந்திராவில் 70584 சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன், இத்தனை பரிசோதனைகள் செய்யப்படவில்லை என்பதாலும், அதிகரிக்கப்பட்ட சோதனைகள்தான் புதிய நோயாளிகள் அதிகரிக்கவும் காரணம் என்றும் கருத்து கூறப்பட்டு வருகிறது.