ராமநாதபுரம் அருகே தவறான தோழிகள் வழிகாட்டலால் அழகான பெண்ணாக மாற ஓட்காவுக்கு அடிமையான மனைவியின் தொந்தரவு தாங்க முடியாமல் கணவன் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சண்முகராஜ், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த முருக வள்ளி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இவர்கள் இருவரும் வேறு வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களது காதலுக்கு இருவீட்டார் பெற்றோரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால், காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டனர். இதன் காரணமாக, இருவீட்டார் பெற்றோர்களும் இவர்களைப் புறக்கணித்தனர். 

இதனையடுத்து, சண்முகராஜ் - முருக வள்ளி தம்பதிகள், தனியாக வீடு வாடகைக்கு எடுத்து அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்துள்ளனர். இவர்களது திருமண வாழ்க்கை நல்ல முறையில் சென்றுகொண்டிருந்தது. இதனால், இந்த தம்பதிக்கு தற்போது 2 குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில், சண்முகராஜ் - முருக வள்ளி தம்பதிகள் வசிக்கும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த 2 பெண்களுடன் முருக வள்ளிக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த 2 பெண்களுடனும், முருக வள்ளி நெருக்கமாகப் பழகி வந்துள்ளார். அப்போது, “நாம் இன்னும் அழகாக இருக்க வேண்டும் என்றால், ஓட்கா என்னும் மதுவைக் குடிக்க வேண்டும். அப்போது தான், நாம் இன்னும் சூப்பரான முக அழகைப் பெற முடியும்” என்று, அந்த இரு தோழிகளும் முருக வள்ளியிடம் ஆசை வார்த்தைகள் கூறி உள்ளனர்.

கூடா நட்பு கேடாய் முடியும் என்பது போல, இரு தோழிகள் அளித்த தவறான ஆலோசனையால், முருக வள்ளியும் ஓட்கா குடிக்கத் தொடங்கி உள்ளார். இதனையடுத்து, அந்த 3 பெண்களும் அடிக்கடி ஓட்கா குடித்து வந்துள்ளனர்.

ஒரு கட்டத்தில், முருக வள்ளி ஓட்காவிற்கு அடிமையாகி உள்ளார். அவரால், போதையில்லாமல் இருக்க முடியவில்லை. இதன் காரணமாக, அக்கம் பக்கத்தில் பொய் சொல்லி பணம் வாங்கி ஓட்கா குடித்து போதையில் தள்ளாடி உள்ளார். 

ஓட்கா என்னும் மது இல்லாமல் முருக வள்ளியால் ஒரு கட்டத்திற்கு மேல் இருக்க முடியவில்லை. இதனால், அவர்கள் குடும்ப செலவுக்குக் கூட பணம் இல்லாமல் கணவன் - மனைவி இருவரும் கடும் சிரமப்பட்டு வந்தனர்.

ஒரு கட்டத்தில், வீட்டிற்குச் செலவுக்குத் தரும் பணம் தொடர்பாகக் கணவன், கணக்கு கேட்கத் தொடங்கி உள்ளார். அப்போது, அக்கம் பக்கத்தில் மனைவி வாங்கி கடன் பற்றியும் தெரிய வந்துள்ளது. இது குறித்து காரணம் என்ன வென்று விசாரித்தபோது தான், மனைவியின் மதுப் பழக்கம் கணவனுக்குத் தெரிய வந்துள்ளது.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அவர், மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால், கணவன் - மனைவி இடையே கடும் சண்டை வந்துள்ளது. கணவன் - மனைவி சண்டையில் ஒரு கட்டத்தில் கடும் ஆத்திரமடைந்த முருக வள்ளி, “தினமும் மது குடிக்க எனக்குப் பணம் தர வேண்டும். தரவில்லை என்றால், இறவில் தூங்கும்போது தலையில் கல்லைப் போட்டு உன்னைக் கொன்றுவிடுவேன்” என்று கணவனையே, மனைவி மிரட்டி உள்ளார்.

இதனால், பயந்துபோன கணவன் சண்முகராஜ், மனைவி எப்படியும் தம்மைக் கொன்றுவிடுவாள் என்று யோசித்த அவர், மனைவியைக் கொலை செய்யத் திட்டமிட்டார். அதன்படி, தன்னுடைய 2 பிள்ளைகளையும், தன்னுடைய உறவினர் ஒருவர் வீட்டில் விட்டுவிட்டு, மனைவிக்குப் படித்த ஓட்காவை வாங்கிக்கொண்டு வீடு திரும்பி உள்ளார்.

இரவு ஆனதும், மனைவிக்கு ஓட்காவை ஊற்றி கணவன் கொடுத்துள்ளான். இதனையடுத்து, கடும் போதைக்குச் சென்ற மனைவி முருக வள்ளி, படுத்துத் தூங்கி உள்ளார். அப்போது, அரைப் போதையிலிருந்த கணவன் சண்முகராஜ், “நீ என்னைக் கொன்றுவிடுவாயா? அதற்கு முன் நான் உன்னைக் கொன்றுவிடுவேன்” என்று கூறிக்கொண்டே, மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதில், மதுபோதையில் இருந்த மனைவி முருக வள்ளி, துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து, சண்முகராஜ் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இது குறித்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விரைந்து வந்த போலீசார், முருக வள்ளியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், சண்முகராஜை தேடி உள்ளனர். அப்போது, அவர் பேருந்து வசதி இல்லாத காரணத்தால் தன் 2 குழந்தைகளுடன் நடந்தே ஊரை விட்டுத் தப்பிச் செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக விரைந்து சென்ற போலீசார், தன் இரு மகள்களுடன் தப்பிச் செல்ல முயன்ற சண்முகராஜை கைது செய்து விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் தான், “கூடா நட்பின் கேடாய் முடிந்த இந்த கொடுமையான கதை” தெரிய வந்தது.

மேலும், உயிரிழந்த முருகவள்ளியின் உடலை வாங்ககூட அவரது பெற்றோர் முன்வரவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால், சண்முகராஜ் - முருகவள்ளி 
தம்பதிகளின் இரு குழந்தைகளும் தற்போது அநாதையாகி உள்ளனர். இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.