அமெரிக்காவில் இந்திய நர்ஸ் கொடூரமாகக் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தில், அவருடைய கணவன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டம் மோனிப்பள்ளி பகுதியைச் சேர்ந்த 26 வயதான மெரின் ஜாய் என்ற இளம் பெண், அமெரிக்காவில் உள்ள தெற்கு புளோரிடா மகாணத்தில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார்.

இதனிடையே, 34 வயதான பிலிப் மேத்யூ என்பவருடன், கடந்த 2016 ஆம் ஆண்டு இந்த தம்பதி திருமணம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து, இவர்களுக்கு 2 வயதில் குழந்தை ஒன்றும் உள்ளது. இதன் தொடர்ச்சியாக மகிழ்ச்சியாகச் சென்ற இவர்களது திருமண வாழ்க்கையில் திடீரென்று புயல் வீசத் தொடங்கி உள்ளது.

இதனால், கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. தொடர்ச்சியாக இவர்களுக்குள் சண்டை வந்துகொண்டே இருந்ததால், கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் கணவன் - மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக, தனித் தனியாக வாழ்த் தொடங்கினர்.

இதனால், அவர்களது குழந்தை, தாயின் அரவணைப்பில் வளர்ந்து வருகிறது. இதனால், மெரின் ஜாய் மற்றும் அவரின் தாய் ஆகியோர் அவர்களது குழந்தையை மேத்யூ பிலிப்பை பார்க்கவே அனுமதிக்கவில்லை என்று தெரிகிறது. குழந்தையைப் பார்ப்பது தொடர்பாக, பிலிப் மேத்யூ எவ்வளவோ முயன்றும் அது நடக்கவில்லை.

இது தொடர்பாகத் தனது மனைவி மெரின் ஜாயிடம், கணவர் பிலிப் மேத்யூ பலமுறை பேசியும் பலன் கிடைக்கவில்லை. அத்துடன், தன் மனைவி மெரின் ஜாய் மீது அதீத பாசம் வைத்திருந்த பிலிப் மேத்யூ, ரொம்பவும் பொறுமை காத்து வந்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் தன் குழந்தையைப் பார்க்காமல் தவித்து வந்த பிலிப் மேத்யூ, இது தொடர்பாக தன் மனைவியிடம் கெஞ்சிதாக கூறப்படுகிறது. ஆனாலும், அவர் மனசு இறங்கவில்லை. 

இதனால், கடும் கோபம் அடைந்த பிலிப் மேத்யூ, கடந்த 27 ஆம் தேதி இரவு மீண்டும் இது தொடர்பாகத் தனது மனைவி பணிபுரியும் மருத்துவமனைக்கு அருகில் வந்து மனைவியிடம் கடைசியாக ஒருமுறை கேட்டுள்ளார்.

அப்போது, “குழந்தையைப் பார்க்க ஒரு போதும் உன்னை அனுமதிக்கமாட்டேன்” என்று, மேத்யூ பிலிப்பிடம், மனைவி மெரின் ஜாய் கூறியதாகத் தெரிகிறது. 

இதனால், இன்னும் ஆத்திரமடைந்த பிலிப் மேத்யூ, மறு நாள் காலையில் வேலை முடித்து வந்த மனைவியை வழி மறித்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வெறித் தீர குத்தி கொலை செய்துள்ளார்.

இதில், கூச்சலிட்டபடியே ரத்த வெள்ளத்தில் சரிந்த மெரின் ஜாயை, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவர் பணியாற்றும் மருத்துவமனையிலேயே அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பாக விரைந்து வந்த அந்நாட்டு போலீசார், மனைவியைக் கொலை செய்த கணவர் பிலிப் மேத்யூவை கைது செய்து விசாரணை நடத்தினர். இந்த 
விசாரணையில், “குழந்தையைப் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டதால், கொலை செய்தது” தெரிய வந்தது.