ஆசைக்கு இணங்க மறுத்ததால் கடைக்குள் புகுந்து இளைஞன், பெண்ணைத் தாக்கி கடையை அடித்து நொறுக்கும் கொடூர செயலில் ஈடுபட்ட சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கல்லூரி சாலையில் தனியார் மருந்து கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் திருமணமான இளம் பெண் ஒருவர், வேலை பார்த்து வருகிறார். 

அதே போல, அந்த பகுதியில் செயல்பட்டு வரும் என்.என்.எல். பேருந்து நிறுவனத்தின் உரிமையாளர் பாண்டிதுரை என்பவர், அந்த மருந்து கடைக்குச் சென்று, அங்கு பணியாற்றி வரும் திருமணமான இளம் பெண்ணுக்கு கடந்த 3 மாதங்களாகத் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் பாண்டிதுரையின் பாலியல் அத்துமீறலை பொறுத்துக்கொள்ள முடியாத அந்த இளம் பெண், தனது ஓனரும் மருந்துக் கடையின் உரிமையாளருமான ரவியிடம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து ரவி, பாண்டிதுரையை கண்டித்து உள்ளார். 

இதனால், ஆத்திரமடைந்த பாண்டிதுரை மருந்து கடைக்கு அடியாட்களுடன் வந்து, மருந்தக உரிமையாளர் ரவியையும், அந்த பெண்ணையும் கடுமையாக தாக்கி கடையை அடித்து உடைத்து முற்றிலுமாக சேதப்படுத்தி உள்ளார். 

இந்த கொடூர தாக்குதலில் அந்த இளம் பெண் ரத்த வெள்ளத்தில் கடைக்குள் சரிந்து விழுந்தார். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த மருந்துகடை உரிமையாளர் ரவி, “தன் கடைக்குள் புகுந்து தாக்கும் காணொலி காட்சிகளை” எடுத்துக்கு கொண்டு, போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காரைக்குடி வடக்கு காவல் துறையினர், கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து, அதனை  விசாரணைக்காக எடுத்துக்கொண்டனர். அத்துடன், தாக்கப்பட்ட கடை உரிமையாளரும், இளம் பெண்ணும் தனித்தனியாக பாண்டிதுரை மீது புகார் அளித்தனர்.

இதனையடுத்து, படுகாயம் அடைந்த அவர்கள் இருவரும் அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லைகள் கொடுத்து, கடையை அடித்து உடைத்துச் சேதப்படுத்திய பாண்டிதுரையை தீவிரமாகத் தேடி வருகின்றனர். போலீசார் தன்னை தேடுவதை அறிந்த பாண்டிதுரை தற்போது தலைமறைவாகி உள்ளார். அத்துடன், பாண்டிதுரை அழைத்து வந்த அடியாட்களையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

அதே போல், நாகர்கோவில் அருகே குடும்பத் தகராறு காரணமாக விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பிய மனைவியை, கணவன் கத்தியால் சரமாரியாகக் குத்தி விட்டுத் தப்பியோடி உள்ளார்.
 
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்து உள்ள திருமலைபுரம் பகுதியைச் சேர்ந்த 35 வயதான சதீஷ், அந்த பகுதியில் மருந்து விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார். சதீஷ், தன் மனைவி 32 வயதான ஜோஷிக்கு இடையே கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று உள்ளது.  இந்த தம்பதிக்கு தற்போது ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில், கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, தம்பதியினர் இருவரும் கடந்த ஒரு வருடமாகப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மனைவி ஜோஷி, விவகாரத்திற்கு விண்ணப்பித்து சதீஷுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இதனால், கடும் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த கணவன் சதீஷ், மனைவி வீட்டிற்கு வந்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது. தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தன் மனைவியை சரமாரியாகக் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். 

இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த ஜோஷியை, அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து வடசேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள சதீஷை தேடி வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.