டிக்டாக் மோகத்தில் விழுந்த பள்ளி மாணவ மாணவிகள், போதைக்கு அடிமையாகி மூங்கில் காட்டில் வைத்து திருமண செய்துகொள்ள முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் கோவை மாவட்டத்தில் தான் இப்படி ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கோவை அடுத்து உள்ள கண்ணப்பா நகரை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மகன் 22 வயதான கோகுல், பள்ளி படிப்பை முடித்துவிட்டு, வேலைக்குச் செல்லாமல் செல்போனில் டிக்டாக்கிற்கு அடிமையாகிக் கிடந்து உள்ளார்.

கோகுல் டிக்டாக் வீடியோ பதிவிட்டு வந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த பள்ளியில் படிக்கும் 17 வயது சிறுமியோடு காதல் மலர்ந்து உள்ளது.

இதனால், கோகுலும், அந்த 17 வயது சிறுமியும் அடிக்கடி செல்போனில் பேசிய தங்களது காதலை வளர்த்து வந்த நிலையில், இருவரும் டிக்டாக் வீடியோ வெளியிட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

அதன் தொடர்ச்சியாக, சிறுமியின் காதல் விவகாரம் அவரது வீட்டிற்குத் தெரிய வந்த நிலையில், கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், காதலுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து உள்ளனர்.

இதனால், காதலர்கள் இருவரும் திட்டம் போட்டு, கடந்த மே மாதம் 27 ஆம் தேதி வீட்டை விட்டு அந்த ஜோடி வெளியேறி உள்ளனர்.

இதனையடுத்து, கோகுல் தனது இருசக்கர வாகனத்தில் அந்த 17 வயது சிறுமியை கோவையில் இருந்து அழைத்துக்கொண்டு திண்டுக்கல்லுக்கு தப்பி வந்திருக்கிறார். இந்த காதல் ஜோடிக்கு உதவியாக 16 வயது சிறுவன் ஒருவனும், மற்றொரு 17 வயது சிறுமி ஒருவரும் மற்றொரு இருசக்கர வாகனத்தில் திண்டுக்கல்லுக்கு வந்து உள்ளனர்.

அதே நேரத்தில், வீட்டில் இருந்து சிறுமி மாயமானது தொடர்பாக, அங்குள்ள துடியலூர் காவல் நிலையத்தில் அவரது பெற்றோர் புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை நடத்தினர். 

அப்போது, சிறுமியின் காதலன் கோகுலின் செல்போன் எண்ணை ஆய்வு செய்தனர். அப்போது, திண்டுக்கல்லை சேர்ந்த ஒருவரிடம் கோகுல் பேசியது தெரிய வந்தது. 

இதனையடுத்து துடியலூர் போலீசார் மற்றும் சிறுமியின் பெற்றோர் திண்டுக்கல் விரைந்து சென்ற நிலையில், கோகுலின் செல்போன் சிக்னல் திண்டுக்கல் அருகே மொட்டணம்பட்டி எம்ஜிஆர் நகரில் இருக்கும் மூங்கில் தோப்பை அடையாளம் காட்டி உள்ளது. இதனையடுத்து, அங்கு விரைந்து சென்ற போலீசார், அவர்களைப் பிடிக்க முயன்றனர். 

அப்போது, போலீசாரை பார்த்த கோகுல், தனது காதலியான அந்த 17 வயது சிறுமியுடன் இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து எப்படியோ தப்பித்துச் சென்று விட்டார். ஆனால், கோகுலுக்கு உதவி செய்ய கோவையில் இருந்து வந்த 16 வயது சிறுவன் மற்றும் அந்த 17 வயது சிறுமியும் போலீசாரிடம் வசமாக மாட்டிக்கொண்டனர். இவர்களைப் போலவே, திண்டுக்கல்லைச் சேர்ந்த 3 பேரையும் போலீசார் அங்கு வைத்து மடக்கிப் பிடித்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த 3 பேரும் திண்டுக்கல் பேகம்பூர் பகுதியைச் சேர்ந்த 26 வயதான முகமது அலி ஜின்னா, 22 வயதான ராமையன்பட்டியை சேர்ந்த நிக்சன் ஜெரால்டு, மற்றும் 17 வயது சிறுவன் ஒருவன் என்பதும் தெரிய வந்தது.

அத்துடன், அவர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தியதில், “கோவையில் இருந்து வந்த சிறுவர் - சிறுமி உள்பட இந்த 5 பேரும், அந்த காதல் ஜோடிக்கு மூங்கில் காட்டில் வைத்து திருமணம் செய்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. 

குறிப்பாக, “கோகுல் தனது நண்பர்களுடன் கஞ்சா மற்றும் மது பழக்கத்திற்கு அடிமையாகி அதனை டிக்டாக் வீடியோவில் பதிவிட்டு வந்து உள்ளார் என்றும், அதன் மூலம் அந்த சிறுமியும் நட்புடன் பழகி பல இடங்களுக்கு கோகுலுடன் இருசக்கர வாகனத்தில் சென்று வந்ததும்” தெரிய வந்தது. 

மேலும், அவர்கள் அனைவரும் பள்ளியில் 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பில் படித்து வருபவர்கள் என்றும், கொரோனா ஊரடங்கு என்பதால் இன்ஸ்டாகிராம் மூலம் நண்பர்களை தேடி அவர்களுடன் வெளியிடங்களுக்குச் சுற்றி வந்ததோடு, அந்த சிறுமிகளுக்கும் போதை பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பதும்” போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. 

முக்கியமாக, பிடிபட்டவர்களின் செல்போனை ஆய்வு செய்த போது, அந்த செல்போனில் மாண மாணவிகள் புகைபிடிப்பது, மது அருந்துவது, தோழிகளுடன் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்களும் இருந்துள்ளது. இதனைப் பார்த்த போலீசார் கடும் அதிர்ச்சியடைந்து உள்ளனர். இது தொடர்பான விசாரணை தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால், அந்த பள்ளி மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் கலக்கமடைந்து உள்ளனர்.