சென்னையில் காதல் திருமணம் செய்த புதுப்பெண் தற்கொலை செய்துகொண்டதால், விரக்தியடைந்த கணவனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை பல்லாவரம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த 22 வயதான பிரசாந்த் என்கிற பிரவின் குமார், அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார்.

இதனிடையே, பிரவின் குமாரும், பல்லாவரத்தைச் சேர்ந்த 19 வயதான இளம் பெண் தீபிகா என்ற பெண்ணும், கடந்த 2 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். 

இவர்களது காதல் விவகாரம், இருவரின் பெற்றோருக்கும் தெரிய வந்தது. இதனால், இருவீட்டார் பெற்றோரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

தங்களது காதல் தொடர்பாக, இருவருமே தங்கள் வீட்டில் போராடிப் பார்த்துள்ளனர். ஆனால், கடைசி வரை சம்மதம் வாங்க முடியவில்லை. இதனையடுத்து, இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, கடும் எதிர்ப்பையும் மீறி கடந்த மே மாதம் 8 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

காதல் திருமணத்திற்குப் பிறகு, காதல் தம்பதிகள் இருவரம், பல்லாவரம் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதனையடுத்து, அவர்களது பெற்றோரை 
அழைத்து, போலீசார் சமாதானம் பேச முயன்றனர். அதில், பிரவின்குமாரின் பெற்றோர் மட்டும் சமரசம் ஆன நிலையில், பெண் வீட்டார் சமரசம் ஆகவில்லை. இதன் காரணமாக, காதல் தம்பதிகள் இருவரும், பிரவின் குமார் வீட்டில் வசிக்கத் தொடங்கினர்.

சுமார் 2 மாத காலம் இவர்களது திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகச் சென்றுள்ளது. இந்நிலையில் தற்போது ஆடி மாதம் நடைபெறுவதால், கடந்த 20 ஆம் தேதி தீபிகாவை அவரது தாய் வீட்டில் கொண்டு சென்று விட்டார். 10 நாட்களாகத் தாய் வீட்டில் இருந்த தீபிகா, கடந்த 30 ஆம் தேதி வீட்டில் உள்ள மின் விசிறியில் புடவையால் தூக்குப்போட்டு தீபாக தற்கொலை செய்து கொண்டாக கூறப்படுகிறது. 

இது தொடர்பாக, பல்லாவரம் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து, பெண்ணின் தந்தை சந்திரகுமார் கொடுத்த புகாரின் பேரில், பல்லாவரம் காவல் ஆய்வாளர் இளங்கோவன், வழக்கப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். அத்துடன், திருமணமான அடுத்த 2 மாதங்களில் தீபிகா இறந்ததால், இது குறித்து சென்னை தாம்பரம் கோட்டாட்சியர் விசாரணைக்குப் பரிந்துரை செய்யப்பட்டது.

மேலும், இது குறித்து கணவர் பிரவின் குமாரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, “மனைவி தீபிகா, என்னிடம் மிகவும் அன்பாகத் தான் இருந்தார் என்றும், அவரது தாய் வீட்டுக்குச் சென்ற பிறகு அங்கு இருந்து செல்போனில் என்னை அழைத்துள்ளார். நான் வேலையாக இருந்ததால், நான் போனை எடுக்காததால், கால் செய்யும் படி எனக்கு அவர் எஸ்.எம்.எஸ். அனுப்பினார்” என்றும் குறிப்பிட்டார்.

“ஆனால் நான் வேலையில் இருந்ததால், அதைக் கவனிக்கவில்லை என்றும், அந்த கோபத்தில் இருந்த என்ன நினைத்தார் என்று தெரியவில்லை என்றும் குறிப்பிட்ட அவர், இதனால் கூட அவள் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம்” என்றும் தெரிவித்தார்.

அதே நேரத்தில், மனைவியின் இறுதி சடங்கில் கலந்து கொள்ளக் கணவர் பிரவின்குமார் முயன்றுள்ளார். ஆனால், பெண் வீட்டுத் தரப்பில் கோபமாக இருப்பதால் அங்குச் செல்ல வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். அத்துடன், இன்று காலை கோட்டாட்சியர் விசாரணைக்கு வருமாறு அவரிடம் போலீசார் கூறிவிட்டு, ஆறுதலும் கூறி விட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில், மனைவி இறந்த சோகம் தாங்காமல் கடும் மன உளைச்சலுக்கு ஆளான பிரவின் குமார், நள்ளிரவில் குரோம்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து, விரைந்து வந்த குரோம்பேட்டை போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதனிடையே, காதல் திருமணம் செய்த தம்பதிகள், அடுத்தடுத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னை பல்லாவரம் மற்றும் குரோம்பேட்டை பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.