மாமன்னன் ராஜராஜசோழன் 1035வது ஆண்டு சதய விழா வரும் 26ம் தேதி நடக்கிறது. வழக்கமாக மிக சிறப்பாக 2 முதல் 3 நாட்கள் நடைபெறும் இவ்விழா, இந்தாண்டு கொரோனா நோய் தொற்று காரணமாக ஒருநாள் மட்டும் எளிமையாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, 26ம் தேதி காலை 6 மணிக்கு மங்கள இசை, 6.30 மணிக்கு கோயில் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்குதல், 7 மணிக்கு மாமன்னன் ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்தல், 9.15 மணிக்கு பெருவுடையார், பெரியநாயகி அம்மன் திருமேனிகளுக்கு பேரபிஷேகம் , மதியம் 1 மணிக்கு பெருவுடையார், பெரியநாயகி திருமேனிகளுக்கு பெருந்தீப வழிபாடு, இரவு 8 மணிக்கு மேல் கோயில் வளாகத்தின் உள்பிரகாரத்தில் சுவாமி புறப்பாடு ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.

கொரோனா தொற்று காரணமாக சுவாமி திருவீதியுலா 4 ராஜவீதிகளான மேலவீதி, வடக்குவீதி, கீழவீதி, தெற்கு வீதிகளில் நடைபெறாது. கொரோனா தொற்று காரணமாக சமூக இடைவெளியுடன் குறைந்தளவு பக்தர்களே அனுமதிக்கப்படுவர். கொரோனா தொற்று வழிகாட்டு நெறிமுறைகளை பக்தர்கள் கடைபிடிக்க வேண்டும். கோயில் உள்பிரகாரத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். வெளியில் இருந்தே வழிபடலாம். கொரோனா தொற்று காரணமாக கோயிலில் பக்தர்கள் அனுமதிக்கும்போது காவல்துறை மூலம் உரிய பாதுகாப்பு வழங்கப்படும்.

இந்த நிலையில், தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் விடுத்துள்ள அறிக்கையில், ``பேரரசன் இராசராசனின் 1035-ம் ஆண்டு பிறந்தநாள் விழாவின் போது, மூலவரான பெருவுடையார் கருவறையிலும், மற்ற தெய்வ பீடங்களின் கருவறையிலும் தமிழ் மந்திரங்களைச் சொல்லி பூசை செய்வதே பேரரசனுக்குச் செலுத்தும் சிறந்த நன்றிக் கடனாகும். சிவன் கோயிலுக்குரிய அர்ச்சனைத் தமிழ் மந்திரங்களைத் தமிழ்நாடு அரசு ஏற்கெனவே வெளியிட்டுள்ளது.

தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் தேவாரம், திருமந்திரம் முதலிய கருவறை அர்ச்சனை மந்திரங்களில் கற்றுத்தேர்ந்த, தமிழ் ஓதுவாமூர்த்தி உள்ளார். தேவையானால் வெளியிலிருந்து மூத்த ஓதுவாமூர்த்திகளை அழைத்துக் கொள்ளலாம். இப்பொழுது கருவறையில் அர்ச்சனை செய்து கொண்டிருப்பவர்களையும் தமிழ் மந்திரம் ஓதி அர்ச்சனை செய்ய வழி காட்டலாம். 

கடந்த 5.02.2020 அன்று நடைபெற்ற தஞ்சைப் பெருவுடையார் கோயில் திருக்குடமுழுக்கில் கருவறையிலும் கலசத்திலும் தமிழ் மந்திரம் ஓதி அவ்விழாவை நடத்திட ஆணை இடக்கோரி, தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு சார்பில் நானும், மற்றவர்களும் தொடுத்த (W.P.(MD) No.1644 of 2020) வழக்கில் 31.01.2020 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தமிழிலும் சமற்கிருதத்திலும் அர்ச்சனை செய்யுமாறு ஆணையிட்டது. அவ்வாணையின் படியே அக்குடமுழுக்கு தமிழிலும் சமற்கிருதத்திலும் நடத்தப்பட்டது.

இப்பொழுது நடைபெறவுள்ள தஞ்சைப் பெரியகோயில் சதயவிழாவிலும் பெருவடையார் கருவறை மற்ற தெய்வங்களின் கருவறைகள் அனைத்திலும் தமிழ் மந்திரங்களைச் சொல்லி பூசை செய்ய ஏற்பாடுகள் செய்யுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களையும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்களையும், அதிகாரிகளையும் கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்" என வலியுறுத்தியுள்ளார்.

இதேபோல, தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பிலும் தமிழில் பூஜை செய்ய வேண்டுமென்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை வேண்டுகோள் ஏற்கப்படாவிட்டால், போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கட்சி சார்பாக விடுக்கப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது :

``தமிழில் மந்திரம்-பூசை என்பது தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத் துறையின் கோவில் கருவறை அர்ச்சனை விதிமுறைகளுக்கு உட்பட்டதே! எனவே, 26.10.2020 தேதியன்று நடைபெற உள்ள தஞ்சைப் பெரிய கோவில் சதய விழாவில் மட்டுமல்ல, தமிழகத்தின் அனைத்து கோவில்களிலும் தமிழிலேயே பூசை செய்யக் கேட்டுக் கொள்வதுடன், மீறினால் மாபெரும் போராட்டம் நடத்த வேண்டியதிருக்கும் என்றும் எச்சரிக்க கடமைப்பட்டுள்ளது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!

சதய விழாவில், மூலவரான பெருவுடையார் கருவறையிலும் மற்ற தெய்வ பீடங்களின் கருவறைகளிலும் தமிழ் மந்திரங்களைச் சொல்லி பூசை செய்வதே தமிழ் மாமன்னனுக்குச் செலுத்தும் நேர்மையான நன்றிக் கடனாகும். சிவன் கோயிலுக்குரிய அர்ச்சனைத் தமிழ் மந்திரங்களைத் தமிழ்நாடு அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ளது. 

தேவாரம், திருமந்திரம் முதலான கருவறை அர்ச்சனை மந்திரங்களில் கற்றுத்தேர்ந்த, தமிழ் ஓதுவாமூர்த்திகள் நிறைய பேர் உள்ளார்கள். மேலும், தமிழில் பூசை என்பது தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத் துறைக் கோவில் கருவறை அர்ச்சனை விதிமுறைகளுக்கு உட்பட்டதேயாகும். 

ஆனால் கடந்த 05.02.2020 அன்று நடைபெற்ற தஞ்சைப் பெருவுடையார் கோயில் திருக்குடமுழுக்கில் கருவறையிலும் கலசத்திலும் தமிழ் மந்திரம் ஓதி அவ்விழாவை நடத்திட ஆணையிடக்கோரி, தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு சார்பில் தொடுத்த (W.P.(MD) No.1644 of 2020) வழக்கில், 31.01.2020 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, தமிழிலும் சமஸ்கிருதத்திலும் அர்ச்சனை செய்யுமாறு ஆணையிட்டது. அவ்வாணைப்படியே தமிழிலும் சமஸ்கிருதத்திலும் நடத்தப்பட்டது. 

ஆனால், இல்லாத மொழியான சமஸ்கிருதத்தில் அர்ச்சனை, அதுவும் தமிழ் மட்டுமே தெரிந்த, தமிழர்கள் கட்டிய கோவில்களில் என்பது, வலிந்து திணிக்கப்பட்ட கொடிய நச்சுச் செயல் என்பதைத் தமிழ்நாடு அரசு உணர வேண்டும். உணர்ந்து அறிவுக்கேடான, நியாயப்படுத்தவே முடியாத, உள்ளதிலேயே தவறான அந்தக் குற்றப் பழக்கவழக்கத்தினைக் கைவிட வேண்டும். இதை ஒரு கொள்கை முடிவாகவே தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும். 

எனவே தஞ்சைப் பெரியகோயில் சதயவிழாவில் பெருவுடையார் கருவறை உள்பட மற்ற தெய்வங்களின் கருவறைகள் அனைத்திலும் தமிழ் மந்திரங்களை மாத்திரம் சொல்லியே பூசை செய்ய ஏற்பாடு செய்யுமாறு தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.  

 நான் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியபோது 2008 ம் ஆண்டு சிதம்பரம் நடராஜர் கோவிலில் தமிழில் அர்ச்சனை செய்வதை தடுத்ததைக் கண்டித்து  சட்டமன்றத்தில் சிறப்பு கவனஈர்ப்பு  தீர்மானத்தை கொண்டுவந்து ஓதுவார் ஆறுமுகசாமி அவர்களை தமிழில் அர்ச்சனை செய்யவும் தேவாரம் திருவாசகம் பாடவும் அனுமதி பெற்று தந்தேன். 

தஞ்சை பெரிய கோவிலில் மட்டுமல்ல, அனைத்துக் கோவில்களிலும் தமிழிலேயே பூசை-அரச்சனை செய்ய தமிழ்நாடு அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் அரசு நினைத்தால் ஓர் அரசானையின் மூலம் இதனை சாத்தியமாக்க முடியும், இது தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வலியுறுத்தல் மட்டுமல்ல; பாஜக தவிர்த்து, பிற கட்சிகள் மற்றும் தமிழ் மட்டுமே தெரிந்த பொதுமக்கள் அனைவரின் வலியுறுத்தலுமாகும். 

தமிழில் மந்திரம்-பூசை என்பது தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத்துறையின் கோயில் கருவறை அர்ச்சனை விதிமுறைகளுக்கு உட்பட்டதாகையால், தமிழ்நாடு அரசு கொள்கை முடிவு எடுக்கத் தடையில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகிறோம். 

எனவே, 26.10.2020 தேதிய தஞ்சைப் பெரிய கோவில் சதய விழாவில் மட்டுமல்ல, ஏனைய கோவில்களிலும் தமிழிலேயே பூசை செய்யக் கேட்டுக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளது தமிழக வாழ்வுரிமைக் கட்சி" எனக்கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசு, இவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுமா என பொறுத்திருந்து பார்ப்போம்!