புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்புப் பணி ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து திருச்சிக்கு இன்று (அக். 22) முதல்வர் பழனிசாமி விமானம் மூலம் வந்தார். பின்னர், அங்கிருந்து கார் மூலம் விராலிமலைக்கு வந்தார். அங்கு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர், அங்குள்ள ஐடிசி நிறுவனத்தில் ஒருங்கிணைந்த நுகர்வோர் பொருட்கள் தயாரிப்புப் பிரிவை முதல்வர் திறந்து வைத்தார். பின்னர், ஜல்லிக்கட்டுக் காளையை வீரர் ஒருவர் அடக்குவது போன்ற உலோகச் சிலையைத் திறந்து வைத்துப் பேசினார் முதல்வர் பழனிச்சாமி. அதன்பின், இலுப்பூர் பேருந்து நிலையம் அருகே 100 அடிக் கொடிக்கம்பத்தில் அதிமுக கொடியேற்றினார். அதைத்தொடர்ந்து, புதுக்கோட்டை அருகே கவிநாடு கண்மாய்ப் பகுதிக்கு வந்த தமிழக முதல்வருக்கு காவிரி-குண்டாறு திட்டத்துக்கு நிதி ஒதுக்கி, பணிகளைத் தொடங்கி உள்ளதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக 250 மாட்டுவண்டிகள், முளைப்பாரிகளோடு விவசாயிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஆட்சியர் அலுவலகம் வந்த அவருக்கு ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி வரவேற்பு அளித்தார். அங்கு, அரசின் திட்டங்களை விளக்கும் விதமாக வைக்கப்பட்டுள்ள அரங்குகள முதல்வர் பார்வையிட்டார். ரூ.210 கோடி மதிப்பிலான 29 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். ரூ.54 கோடியில் முடிவுற்ற 48 பணிகளைத் திறந்து வைத்தார்.

நலத்திட்ட உதவிகள் வழங்கிய பின்னர், பின்னர், ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் கலந்துகொண்டார். இதில், அமைச்சர்கள், அரசு செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கவிநாடு கண்மாயில் விவசாயிகளின் வரவேற்பை ஏற்றுக் கொண்ட முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களது விருப்பத்தை ஏற்று மாட்டு வண்டி ஓட்டினார். மாட்டு வண்டியில் ஏறி நின்றபடி, மாட்டு வண்டியை ஓட்டி, விவசாயிகள் அளித்த வரவேற்பை முதல்வர் பழனிசாமி ஏற்றுக் கொண்டார். இதைப் பார்த்த பொதுமக்கள் உற்சாகக் குரல் எழுப்பினர்.

முன்னதாக, காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு நன்றி தெரிவித்து விவசாயிகள் 200 மாட்டு வண்டிகளுடன் முதல்வர் பழனிசாமிக்கு வரவேற்பு அளித்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தின் 100 ஆண்டுகள் கனவுத் திட்டமான காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு அனுமதி அளித்து ரூ.700 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் புதுக்கோட்டை வந்துள்ள முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கவிநாடு கண்மாயில் 200 விவசாயிகள் மாட்டு வண்டிகளுடன் வந்து பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர். மேலும் நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர்.