கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு மருந்தை கண்டறியும் பணியில் உலகம் முழுக்க, அனைத்து நாடுகளும் இருந்து வருகின்றது. தடுப்பூசி பணிகளை, உலக சுகாதார நிறுவனம் கண்காணித்தும் வருகின்றது. அந்த கண்காணிப்பின் அடிப்படையில், உலக சுகாதார நிறுவனம், முன்னணியில் இருக்கும் தடுப்பூசியாக குறிப்பிடுவது ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி பணிகளைத்தாம்.

இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், இங்கிலாந்து அரசு மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து ஒரு தடுப்பூசியை உருவாக்கி வருகின்றது. இந்த ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் 1 மற்றும் 2 ஆம் கட்ட மனித பரிசோதனையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. மேலும், இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் இறுதிகட்ட மருத்துவ பரிசோதனை இங்கிலாந்து, இந்தியா, பிரேசில், தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த பரிசோதனையில் ஆயிரக்கணக்கான தன்னாவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், பிரேசில் நாட்டில் ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் திடீரென உயிரிழந்துள்ளார் என்ற செய்தி, நேற்று பரவியது. ரியோ டி ஜெனிரோ நகரில் வசித்துவந்த அந்த தன்னார்வலரின் வயது 28 என்று, மேற்கத்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், அந்த தன்னார்வலர் உயிரிழந்ததற்கான காரணங்கள் குறித்து பிரேசில் அரசோ, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமோ, அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனமோ எந்த பதிலும் அளித்ததாக தெரியவில்லை. அதேபோல், தடுப்பூசி பரிசோதனையின் பாதுகாப்பு குறித்து கவலைப்பட தேவையில்லை என ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த விவகாரம் குறித்து விசாரனை நடத்த பிரேசில் சுகாதாரத்துறை சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இந்த விவகாரம் காரணத்தால், தடுப்பூசி பரிசோதனை நிறுத்தப்படாது என தெரிவிக்கப்பட்டது.

இதில், இந்த தன்னார்வலரின் இறப்புக்கு காரணம், கொரோனாவுக்காக கண்டறியப்படும் தடுப்பூசி இல்லையென மருத்துவர்கள் பலர் விளக்கம் அளித்து வருகின்றனர். உண்மையில் அவர் இறந்ததன் பின்னணி என்ன என்பது குறித்து, மருத்துவர் அரவிந்த ராஜ் என்பவர் தன் முகநூலில் விளக்கமாகவும் எளிமையாகவும் கூறியிருக்கிறார். அவர் குறிப்பிட்டிருக்கும் விளக்கம் இதோ....

``ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன், Astazeneca மருந்தியல் குழுமம் இணைந்து தயாரித்து, தற்போது சோதனை கட்டத்தில் இருக்கும் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி சோதனையில் பங்குபெற்ற பிரேசிலை சேர்ந்த தன்னார்வலர் ஒருவர் மரணம் என்ற செய்தி காலை முதலே மிகவும் பரபரப்பாய் பேசப்பட்டுக்கொண்டிருக்கிறது.

இதுதான் தக்க சமயம் என, தடுப்பூசி எதிர்ப்பு கும்பல் 'நாங்க தான் அப்பவே சொன்னோம் ல்ல... தடுப்பூசி கேடு.... யாரு நாங்க சொன்னத கேட்டீங்க' என வழக்கம்போல தங்கள் மேதாவித்தனத்தை கொட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

உண்மை நிலை என்ன ??

தற்போது Astrazeneca உருவாக்கிய தடுப்பூசி பரிசோதனை இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நான்கு நாடுகளில் நடைபெற்று வருகிறது. இத்தகைய பரிசோதனை கட்டம் என்பது மிகவும் கவனமாக மருத்துக்குழுவின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்படும் ஒன்றாகும். தடுப்பூசி பரிசோதனையில் பல கட்டங்கள் உள்ளன.

இந்த பரிசோதனை கட்டத்தில், உதாரணமாக 100 நபர்கள் பங்குபெறுகிறார்கள் என வைத்துக்கொள்வோம். இவர்கள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்படுவர். முதல் குழுவில் உள்ள 50 நபர்களுக்கு புதிதாக உருவாக்கம் செய்யப்பட்ட கொரோனா தடுப்பூசி வழங்கப்படும். இரண்டாம் குழுவில் உள்ள 50 நபர்களுக்கு ஏற்கனவே வேறு ஏதோ நோய்க்கு எதிராக கண்டறியப்பட்டு, உலக சுகாதர மையத்தால் அனுமதிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ள தடுப்பூசி வழங்கப்படும்.  தடுப்பூசியின் செயல்பாடு எந்த அளவில் உள்ளது என்பதை ஆராய, இது போன்ற கட்டங்கள் மேற்கொள்ளப்படும்.

இப்போது, கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி பரிசோதனையில் இறந்ததாக கூறப்படும் நபர் இரண்டாம் குழுவை சேர்ந்தவர்.

அதாவது, அவருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படவில்லை. மாறாக, Meningitis எனப்படும் மூளைக்காய்ச்சலுக்கு எதிராக ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டு நிலையில் உள்ள தடுப்பூசி தான் வழங்கப்பட்டுள்ளது.

ஆகவே, அவர் கொரோனா தடுப்பூசி அளித்ததால் தான் இறந்தார் என்பது முற்றிலும் தவறான தகவல்.

மேலும், அவர் இறப்பிற்கான காரணங்கள் தன்னார்வலரின் தனியுரிமை மற்றும் சோதனை விதிகள் காரணமாக பொதுமக்களுக்கு வெளியிடப்படவில்லை. இருப்பினும், கொரோனா தடுப்பூசிக்கும் அவரது இறப்பிற்கும் எந்த தொடர்பும் இல்லை என உறுதிசெய்யப்பட்ட காரணத்தால், தடுப்பூசி பரிசோதனையை தொடரலாம் என ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும்,  பிரேசில் சுகாதாரத்துறையும் பச்சைக்கொடி காட்டியுள்ளது.

ஆகவே, மக்கள் தடுப்பூசிகள் மீது அச்சம் கொள்ள வேண்டாம். தடுப்பூசி எதிர்ப்பு கும்பலும் மிகுந்து வழியும் உங்கள் மூளையை துடைத்துக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறேன்"

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.