காஷ்மீரை சீனாவின் ஒரு பகுதியாக காட்டிய டிவிட்டருக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

இந்தியாவிற்குச் சொந்தமான பகுதிகளைப் பக்கத்து நாடுகள் உரிமை கொண்டாடி வரும் நிலையில், அவற்றை எதிர்த்து இந்தியா போராடி வரும் நிலையில், தற்போது காஷ்மீரை சீனாவின் ஒரு பகுதியாக டிவிட்டர் காட்டி உள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அதாவது காஷ்மீரை சீனாவின் ஒரு பகுதியாக காட்டும் வரைபடத்தை டிவிட்டர் வெளியிட்டது, இதனால், கடும் அதிர்ச்சியடைந்த இந்திய அரசு, டிவிட்டர் நிர்வாகத்திற்குத் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்து உள்ளது. 

இது தொடர்பாகத் தகவல் தொழில் நுட்பத் துறையின் செயலாளர் அஜய் சாவ்னி, டிவிட்டர் தலைமைச் செயல் அதிகாரி ஜாக் டோர்சிக்கு கண்டனம் தெரிவித்து கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.

அந்த கண்டன கடிதத்தில், “இந்திய வரைபடத்தைத் தவறாக வெளியிட்டது நாட்டின் இறையாண்மையை அவமதிக்கும் செயல்” என்று குறிப்பிட்டு உள்ளார்.

அத்துடன், டிவிட்டர் நிறுவனத்தின் இந்த கொடுஞ் செயலுக்கு, இந்திய அரசு கடும் அதிருப்தியைத் தெரிவித்து இருப்பதாகக் குறிப்பிட்டு உள்ள அஜய் சாவ்னி, இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்றும், தனது கண்டனத்தைத் தெரிவித்து உள்ளார்.

மேலும், “டிவிட்டரின் நிர்வாகத்தின் இந்த செயல், நடுநிலைத் தன்மை மற்றும் நம்பகத்தன்மை குறித்த கேள்விகளை எழுப்பி உள்ளதாகவும்” அஜய் சாவ்னி, கடுமையாகக் குற்றம்சாட்டி உள்ளார்.

“இந்தியர்களின் உணர்வுகளை டிவிட்டர் நிர்வாகம் மதித்துச் செயல்பட வேண்டும்” என்றும், அஜய் சாவ்னி டிவிட்டர் நிர்வாகத்தைக் கேட்டுக்கொண்டு உள்ளார். டிவிட்டரின் இந்த செயல்பாடுக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இணையத்தில் இந்த சம்பம் வைரலாகி வருகிறது.

அதே போல், முன்னதாக நேபாள நாட்டில், இந்தியாவிற்குச் சொந்தமான லிபுலேக் கணவாய், காலாபனி, லிம்பியாதுரா ஆகிய இந்தியப் பகுதிகளை இணைத்து வெளியிடப்பட்ட புதிய வரைபடத்திற்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனால், இந்தியாவை நேபாளம் சீண்டிப் பார்க்கும் முயற்சியில் இறங்கியது. 

இந்தியப் பகுதியை நேபாளத்திற்குச் சொந்தம் கொண்டாடும், அந்நாட்டுப் பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் இந்த நடவடிக்கை இந்தியாவை எரிச்சல் ஊட்டியது.

அதாவது, சீனாவுக்கான ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கும் விதமாக நேபாளத்தின் இந்த நடவடிக்கையால், நேபாளத்திற்கும் - இந்தியாவுக்கும் இடையே விரிசல் விழுந்தது. 

இதன் காரணமாக, நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலிக்க எதிராக, அவரது சொந்த கட்சியினரே கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அத்துடன், இந்தியா - நேபாளம் ஆகிய இரு நாட்டு உறவை மோசமாக்கும் விதமாகவும், ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை அவர் கூறியதாகவும், இதனால் அவர் பதவி விலக வேண்டும் என்று ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் கடுமையாக எதிர்த்து நின்றனர். குறிப்பாக, நேபாள முன்னாள் பிரதமர் புஷ்மா கமால் தஹல் பிரச்சண்டாவும், தனது கண்டனத்தைத் தெரிவித்தார். இதனால், அவரின் பிரதமர் பதவிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆபத்து வந்தது. இதனால், அவர் பதவி விலகும் சூழலும் அப்போது ஏற்பட்டது. இதனையடுத்து, அவருக்கு ஆதரவாகச் சீனா களம் இறங்கியது குறிப்பிடத்தக்கது.