தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்து இருந்தார். அப்போது பேசியவர், ``தமிழகத்தில் அதிக அளவுக்கு காய்ச்சல் கிளினிக்குகள் திறக்கப்பட்டு, உடனுக்குடன் நோயாளிகள் கண்டறியப்பட்டு, சிகிச்சை வழங்கப்படுவதால் கொரோனா பரவல் கட்டுப்பாட்டில் உள்ளது. கொரோனா வைரஸால் மக்கள் பாதிக்கப்பட்டு பெரும் அச்சத்தில் இருக்கிறார்கள். இந்த நோய் குணமடைவதற்காக தடுப்பூசி கண்டறிந்ததும், தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் அரசின் சார்பில் இலவசமாக தடுப்பூசி போடப்படும்" என்று தெரிவித்தார்.

பொதுவாக மத்திய அரசு, மாநிலங்களுக்கு குறைந்த விலையில் கொரோனா தடுப்பூசிகளை வழங்கும். மாநில அரசு தான் அதை இலவசமாக போடவேண்டுமா, பணம் வாங்கி வழங்க வேண்டுமா என்பதை முடிவு செய்யும் என்று பாஜக ஊடகப்பிரிவு நிர்வாகி மால்வியா தெரிவித்து இருந்தார் . ஆனால் தமிழக அரசு இப்போதே இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது, பலருக்கும் மகிழ்ச்சியை தந்தது.

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டும் என்பதால், ஒரு கொரோனா தடுப்பூசிக்கு ஆயிரம் ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை செலவாகும். இது சமானியர்களுக்கு பெரும் சுமையாகும். ஏனெனில் ஒரு ஊசி 5000 என்றால், ஒரு குடும்பத்தில் நான்கு பேருக்கு ஊசி போட்டாலே ரூ.20,000 ஆகிவிடும். இந்த நிலையில்தான் முதல்வர் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

முதலமைச்சரின் இந்த கொரோனா தடுப்பூசி அறிவிப்பு குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில் மக்களுக்கு மருத்தை இலவசமாக தர வேண்டியது அரசின் கடமை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

“கொரோனா தடுப்பூசியை இலவசமாக தருவது மக்களுக்கு காட்டும் சலுகை என்று முதலமைச்சர் நினைக்கிறாரா?” என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், “மக்களுக்கு 5000 ரூபாய் நிதி உதவி அளிக்க மனமில்லாத முதல்வர் தன்னை தாராளப் பிரபுவாக காட்டிக்கொள்கிறார்” என்று விமர்சித்துள்ளார் அவர்.

முன்னராக நேற்றைய தினம் பீகார் சட்டசபை தேர்தலில் தாங்கள் வெற்றி பெற்றால் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று பாஜக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருந்தது. ``தேர்தலில் வெற்றிப்பெற்றால் தான் தடுப்பூசி இலவசம் எனக்கூறி, தடுப்பூசி விநியோகத்தை அடிப்படையாக வைத்து, பேரழிவு நோய்க் காலத்தில் அவற்றை ஓட்டரசியலாக மாற்றக் கூடாது" என மருத்துவர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். தேர்தல் அறிக்கையில் இதைச் சொல்லி வாக்கு கேட்கும் அளவுக்கு ஒரு கட்சி போகக்கூடாது என்று சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்ததும் குறிப்பிடத்தக்கது.