தமிழகத்தில் நடந்து முடிந்த மருத்துவக்கல்லூரி கலந்தாய்வில், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் படி தனியார் மருத்துவக் கல்லூரியில் சேரும் அரசு பள்ளி மாணவர்களுக்கு, கல்வி கட்டணம் - நுழைவுத் தேர்வு கட்டணத்தை அரசே ஏற்பதாக முதல்வர் சில தினங்களுக்கு முன் அறிவித்தார்.

ஆனால் தங்களுக்கு கலந்தாய்வு நடந்தபோது, அரசின் அறிவிப்பு வெளிவராததால் படிக்க இடம் கிடைத்தும் கட்டணம் கட்டுவதற்கு பணம் இல்லையென்ற காரணத்தால், 3 மாணவிகள் கல்லூரியில் சேராமல் விட்டுவிட்டதாக இன்று தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த மூன்று மாணவிகளுக்கும் தமிழக அரசு உடனடியாக உதவி செய்ய வேண்டும் என திமுக உட்பட எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்தன. இதுதொடர்பாக, ``கல்விக் கட்டணம் செலுத்தும் பிரச்சினையால் தங்களுக்குத் தனியார் மருத்துவக் கல்லூரியில் ஒதுக்கப்பட்ட இடங்களை ஏற்க மறுத்த மாணவ - மாணவிகள் அனைவருக்கும் ஆக்கபூர்வமாக உதவிடும் வகையில், மீண்டும் கலந்தாய்வு நடத்தி, அவர்கள் அனைவரும் மருத்துவக் கல்வியில் சேருவதற்கு உரிய தேவையான நடவடிக்கையைத் தாமதமின்றி எடுக்க வேண்டும்" என திமுக ஸ்டாலின் முதல்வருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

ஸ்டாலின் கடிதத்தை, சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன், சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் சேகர் பாபு இருவரும் முதல்வர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர் என திமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் வாய்ப்பினை நிராகரிக்க நேர்ந்த, கடலூர் மாணவிகள் திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்தித்து தங்களது குறைகளைக் கூறினர்.

இதுதொடர்பாக, தி.மு.கழகத் தலைவர் எழுதியுள்ள கடிதத்தில்,

``7.5 சதவீத முன்னுரிமை இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டு அனுமதிக்கான இடம்பெற்ற மாணவ மாணவியர் பலருக்கு, கல்விக் கட்டணம் செலுத்த முடியாத நிலை உள்ளது என்பதால், தங்களுக்குத் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஒதுக்கப்பட்ட இடங்களை ஏற்க மறுத்துள்ளனர் என்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் உள்ள நெங்கவல்லி கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி எஸ்.சுபத்ரா, திருச்சுழி தாலுகாவைச் சேர்ந்த மாணவர் அருண்பாண்டி, உசிலம்பட்டி ஒன்றியத்தைச் சேர்ந்த மாணவர் எஸ்.தங்கபாண்டி, மற்றொரு மாணவி தங்கப்பேச்சி உள்ளிட்ட அரசுப் பள்ளி மாணவ மாணவிகள் பலர், கல்விக் கட்டணம் செலுத்த முடியாத பொருளாதார நிலைமைக்கு உள்ளாகியிருக்கும் காரணத்தால், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை ஏற்க மறுத்து, அரசு மருத்துவக் கல்லூரியின் இட ஒதுக்கீட்டிற்காகக் காத்திருப்புப் பட்டியலில் இருப்பதாக, செய்தித்தாளொன்றில் வெளியாகியிருந்தது.

இதேபோல், கடலூர் மாவட்டத்தில் சாக்காங்குடி கிராமத்தைச் சேர்ந்த மாணவி இலக்கியா, கோவிலாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த மாணவி தர்ஷினி ஆகியோரும் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. “நீட்” தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, கல்விக் கட்டணம் செலுத்துவது தொடர்பாக, Post Matric கல்வி உதவித்தொகை மற்றும் இதர கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டங்கள் மூலம் நடைமுறைப்படுத்தச் சுழல் நிதி உருவாக்கப்பட்டுள்ளதாக” அரசு சார்பில் காலதாமதமாக அறிவித்ததும், இந்த மாணவ மாணவிகளுக்குக் கலந்தாய்வின்போதே முக்கியமான இந்தத் தகவலைத் தெரிவிக்காததும், நெருக்கடியான இத்தகைய சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.

கலந்தாய்வின்போதோ அல்லது அதற்கு முன்னரோ, மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் இந்தத் தகவலைக் கூறாததால் - இன்றைக்குப் பல மாணவ மாணவியரின் மருத்துவக் கனவு, “கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டவில்லை” என்றாகி விட்டது. இதற்குத் தீர்வுகாண வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. ஆகவே கல்விக் கட்டணம் செலுத்தும் பிரச்சினையால் தங்களுக்குத் தனியார் மருத்துவக் கல்லூரியில் ஒதுக்கப்பட்ட இடங்களை ஏற்க மறுத்த மாணவ - மாணவிகள் அனைவருக்கும் ஆக்கப்பூர்வமாக உதவிடும் வகையில், மீண்டும் கலந்தாய்வு நடத்தி, அவர்கள் அனைவரும் மருத்துவக் கல்வியில் சேருவதற்கு உரிய தேவையான நடவடிக்கையைத் தாமதமின்றி எடுக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்”

எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மருத்துவ படிப்புகளுக்கு பொது பிரிவு கவுன்சிலிங் நவம்பர் 22 முதல் நடைபெறுகிறது. இதில் தரவரிசைப்பட்டியலில் முதல் 50 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளில் 30 பேர் கவுன்சிலிங்கில் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசு ஒதுக்கீட்டில், 4,179 எம்.பி.பி.எஸ்., 1,230 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. நிர்வாக ஒதுக்கீட்டில், 953 எம்.பி.பி.எஸ்., 695 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கை, சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. பொது பிரிவினருக்கான மாணவர் சேர்க்கை இன்று (நவ.,23) முதல், டிச., 4 வரை நடைபெற உள்ளது. இன்று, பொது பிரிவில் முதல், 361 இடங்களை பெற்ற மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதில், எம்.பி.பி.எஸ் தரவரிசைப்பட்டியலில் முதல் 15 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகள் கவுன்சிலிங்கில் பங்கேற்கவில்லை என தெரியவந்துள்ளது. அதேபோல், தரவரிசைப்பட்டியலில் முதல் 50 இடங்களை பிடித்தவர்களில் 30 பேர் வரவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.