மகாராஷ்டிரம் மாநிலத்தில் “வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லை” என்று, விஷ ஊசி போட்டு கணவர், 2 குழந்தைகளைக் கொன்று விட்டு பெண் டாக்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரம் மாநிலம் நாக்பூர் கோராடி ஓம் நகரை சேர்ந்தவர் 42 வயதான தீரஜ் அந்த பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார்.

தீரஜின் மனைவி 41 வயதான சுஷ்மா, அந்த பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வந்தார். இந்த தம்பதிக்கு 11 மற்றும் 5 வயதில் 2 குழந்தைகள் இருந்தனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக, வாழ்க்கையில் எந்த வித பிடிப்பும் இல்லாமல் வெறுமையை உணர்ந்து உள்ளார். அதனால், கடந்த சில நாட்களாகவே வீட்டிலும் சரி, அவர் பணியாற்றும் மருத்துவமனையிலும் சரி, யாரிடமும் எதுவும் பேசாமல் இருந்து வந்து உள்ளார்.

இதனால், கடும் மன உளைச்சலுக்கு அவர் ஆளாகி உள்ளார். ஒரு கட்டத்தில், “நாம் ஏன் இந்த உலகத்தில் வாழ வேண்டும்? என்று யோசித்து உள்ளார்.

“ஒரு வேளை நாம் இறந்து போனால், நம் கணவர் மற்றும் நம் குழந்தைகள் என்ன ஆவார்கள் என்றும் யோசித்த அவர், அவர்கள் மட்டும் சந்தோசமாகவா இருக்கப் போகிறார்கள்?” என்றும் சிந்தித்து உள்ளார். முடிவாக, “நாம் தற்கொலை செய்து கொள்ளலாம்” என்றும், அவர் முடிவு எடுத்துள்ளார். 

இது தொடர்பாக கடிதம் ஒன்றையும் டாக்டர் சுஷ்மா, எழுதி உள்ளார். அந்த கடிதத்தில், “வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லாததால் இந்த முடிவை எடுத்து உள்ளதாக” குறிப்பிட்டிருந்தார்.

அதன்படி, நேற்று இரவு கணவன் மற்றும் தனது 2 குழந்தைகளுக்கும் இரவு உணவு சாப்பிடக் கொடுத்துள்ளார். இதில், மயக்க மருந்தைக் கலந்து கொடுத்துள்ளார். 

அதனைச் சாப்பிட்ட, கணவன் மற்றும் 2 குழந்தைகளும் மயக்கம் அடைந்து உள்ளனர். இதனையடுத்து, கணவன் மற்றும் அவரது 2 குழந்தைகளுக்கும் தனது மனதைக் கல்லாக்கிக்கொண்டு, விச ஊசி செலுத்தி உள்ளார். இதில், அவர்கள் 3 பேரும் மயக்க நிலையிலேயே உயிரிழந்து உள்ளனர்.

இதனையடுத்து, உயிரிழந்த கணவன் மற்றும் தனது 2 குழந்தைகளையும், குழந்தைகள் தூங்கும் அறையில் போட்டு விட்டு, அந்த அறையை உள் பக்கமாக தாளிட்டு அதன் பிறகு, டாக்டர் சுஷ்மாவும் அந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதனையடுத்து, காலையில் அந்த வீட்டில் வேலை செய்யும் 60 வயது மதிக்கத் தக்க பணிப் பெண் வந்துள்ளார். அவர் வந்த போது, வீட்டின் கதவு திறந்து இருந்து உள்ளது. ஆனால், வீட்டில் யாரையும் காணவில்லை. இதனால், உள்ளே சென்று பார்த்துள்ளார். வீட்டில் எல்லா தகவுகளும் திறந்து இருந்த நிலையில், குழந்தைகள் தூங்கும் அறை மட்டும் உள் பக்கமாகப் பூட்டிக்கிடந்துள்ளது. ஆனாலும், வெகு நேரமாக அந்த கதவைத் தட்டியும், சத்தம் போட்டு அழைத்தும் கதவு திறக்கப்பட வில்லை. இதனால், சந்தேகம் அடைந்த அவர், காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து விரைந்து வந்த போலீசார், கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்து உள்ளனர். அங்கு, கணவன் மற்றும் 2 பிள்ளைகளும் படுக்கை அறையில் சடலமாகக் கிடந்துள்ள நிலையில், டாக்டர் சுஷ்மா மட்டும் அந்த அறையில் தூக்கிட்ட நிலையில், சடலமாகத் தொங்கி உள்ளார்.

இதனைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த போலீசார், அந்த அறையைச் சோதனை செய்து உள்ளனர். அப்போது, அந்த படுக்கை அறையின் அருகில் விச ஊசி செலுத்தப்பட்ட பாட்டில்கள் இருந்துள்ளன. 

மேலும், டாக்டர் சுஷ்மா கைப்பட எழுதிய கடிதமும் கிடைத்துள்ளது. இவற்றைப் பரிமுதல் செய்த போலீசார், 4 பேரின் உடல்களையும் மீட்டு பரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன், இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.