ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிராக உலக முழுவதும் 3.1 கோடி வன்முறைகள் சம்பவங்கள் பதிவாகி உள்ளதாக ஐ.நா. வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

கொரோனா என்னும் பெருந் தொற்று காரணமாக, உலகமே முடங்கிப் போய் உள்ளது. இதனால், உயிர் இழப்புகள் மட்டும் இல்லாமல் பொருளாதார இழப்பு உள்ளிட்ட பலவிதமான இழப்புகளை உலகமே சந்தித்து வருகின்றன.

இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில், உலக அளவில் அதுவும் இந்த ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிராக 3.1 கோடி குற்றச் சம்பவங்கள் நடந்துள்ளது என்பது, யோசித்துக் கூட பார்க்க முடியாத ஒரு விசயமாக இருக்கிறது.

உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு ஐ.நா. வெளியிட்ட அறிக்கையின் படி, “உலகம் முழுவதும் விநியோகச் சங்கிலிகள் சீர் குலைந்திருப்பதாக” குறிப்பிட்டுள்ளது. 

இதன் காரணமாக, “கருத்தடை சாதனங்கள் கிடைப்பது பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் திட்டமிடப்படாத கர்ப்பங்கள் ஏற்படும் அபாயம் அதிகமாகக் காணப்படுவதாகவும்” கூறப்பட்டு உள்ளது.

“கொரோனா தொற்று ஊரடங்கால் சுகாதாரத்தைக் காக்கும் போராட்டங்களுக்கு மத்தியில், பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார சேவைகள் ஓரங்கட்டப்பட்டு, பாலின அடிப்படையிலான வன்முறைச் சம்பவங்கள் மிகப் பெரிய அளவில் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளதாக”  ஐ.நா கூறி உள்ளது.

குறிப்பாக, “கொரோனா ஊரடங்கில் UNFPA research கூறியுள்ள அறிக்கையின் படி, இந்தியா போன்ற சில நாடுகளுக்கு பெரும் கவலை அளிக்கும் விசயங்களே நடந்துள்ளது” என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக, “கொரோனா தொற்றால் ஊரடங்கு மொத்தம் 6 மாதங்களுக்கு மேல் நீடிக்கும் பட்சத்தில், நடுத்தர வருவாய் உள்ள 114 நாடுகளில் சுமார் 4.7 கோடி பெண்கள் நவீன கருத்தடைகளைப் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்படும்” என்றும் கணிக்கப்பட்டு உள்ளது.  

மேலும், “ இன்னும் 3 மாதங்களுக்கு ஊரடங்கு தொடர்ந்தால், மேலும் 20 லட்சம் பெண்கள் நவீன கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்த முடியாமல் போகலாம்” என்றும், எச்சரிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல், “6 மாதங்களுக்கு மேல் ஊரடங்கு தொடரும் பட்சத்தில், இன்னும் கூடுதலாக 70 லட்சம் திட்டமிடப்படாத கர்ப்பங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது” என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, “ பாலின அடிப்படையிலான வன்முறை தொடர்பாக இதுவரை 3.1 கோடி வழக்குகளையும் எதிர்பார்க்கலாம் என்பது மிகவும் கவலைக்குரிய விசயம்” என்றும், ஐ.நா. சுட்டிக்காட்டி உள்ளது. 

“சமீப காலமாக, பெண்கள் கருவுறுதல் விகிதங்கள் மற்றும் ஆயுளில் மிகப்பெரிய மாற்றங்கள் காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ள ஐ.நா., கடந்த 1970 ஆம் ஆண்டின் முற்பகுதியில், பெண்கள் சராசரியாக தலா 4.5 குழந்தைகளைப் பெற்றனர் என்றும், கடந்த 2015 ஆம் ஆண்டுகளில் உலகத்திற்கான மொத்த கருவுறுதல் ஒரு பெண்ணுக்கு 2.5 குழந்தைகள் எனக் குறைந்தது” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

“இதற்கிடையில், சராசரி உலகளாவிய ஆயுட் காலம் என்பது, கடந்த 1990 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் 64.6 ஆண்டுகளில் இருந்து கடந்த 2019 ஆம் ஆண்டில் 72.6 ஆண்டுகளாக உயர்ந்து உள்ளது” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால், “கொரோனா வைரஸ் தொற்றின் பரவல், நோயில் மட்டும் இல்லாமல், மக்கள் தொகை பெருக்கத்திலும் மிகப் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது” என்பது தற்போது கண்டுப் பிடிக்கப்பட்டுள்ளதையும், ஐ.நா. சுட்டிக்காட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.