மனைவியை அடித்துக்கொன்ற கணவன் உடலை 2 நாட்கள் வீட்டிலே வைத்திருந்திருந்து, போலி மந்திரவாதியுடன் சேர்ந்து உயிர்ப்பிக்க முயற்சித்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.
 
மத்தியப் பிரதேசம் மாநிலம் பெடுல் மாவட்டத்தில் அமைந்துள்ள சிகோலி கிராமத்தைச் சேர்ந்த 46 வயதான பாய்யலால் இவ்னி என்பவர், தனது மனைவி சுனிதா உடன் வசித்து வந்தார். இந்த தம்பதிக்கு 3 பிள்ளைகள் உள்ளனர்.

இதனிடையே, பாய்யலால் இவ்னி - சுனிதா குடும்பத்தில் அடிக்கடி பிரச்சனை எழுந்துள்ளதால், அவர்களுடைய 3 குழந்தைகளும் வீட்டை விட்டு வெளியேறி வெளியூருக்குச் சென்று வேலை செய்து வருகின்றனர். இதனால், வீட்டில் பாய்யலால் இவ்னி - சுனிதா மட்டுமே வசித்து வருகின்றனர்.

வீட்டில் கணவன் - மனைவி மட்டும் தனியாக வசித்து வரும் நிலையில், அவர்களுக்குள் அடிக்கடி சண்டை வந்துள்ளது. அத்துடன் கணவன் பாய்யலால் இவ்னி, மது பழக்கத்திற்கு அடிமையானதால், அவர் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வருவது வழக்கம். இதன் காரணமாகவே, கணவன் - மனைவி இடையே சண்டை தொடர்ந்து நடப்பது வாடிக்கை.

இதேபோல், கடந்த 26 ஆம் தேதி இரவு நேரத்தில் குடித்து விட்டு வீட்டிற்கு வந்த பாய்யலால் இவ்னி, தன் மனைவியிடம் சண்டைபோட்டு அவரை கடுமையாகத் தாக்கி உள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த மனைவி சுனிதா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.

இதனையடுத்து, தன் மனைவி உயிரிழந்ததை மறைத்த அவர், அங்குள்ள மாட்டு சானத்தால் தன் மனைவியின் உடலை மறைத்து வைத்துள்ளார். அதன் தொடர்ச்சியாக, உள்ளூர் போலி மந்திரவாதி ஒருவரை அணுகி, தன் மனைவிக்கு உயிர் தரும்படி வேண்டி உள்ளார்.

அதன்படி, அந்த போலி மந்திரவாதி கடந்த 2 நாட்களாகப்  பல பூஜைகளும் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், அவர் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. இதனால், சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இது தொடர்பாக அங்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த சுனிதாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து, மனைவியை கொலை செய்த கணவனையும், போலி மந்திரவாதி ஒருவரையும் கைது செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதனிடையே, மனைவியை அடித்துக் கொன்ற கணவன், உடலை 2 நாட்கள் வீட்டிலே வைத்திருந்திருந்து, போலி மந்திரவாதியுடன் சேர்ந்து உயிர்ப்பிக்க முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.