கொரோனா வைரஸ் தொற்றால் பொருளாதாரம் முற்றிலும் முடங்கியது. வேலைவாய்ப்பின்மை ஏற்பட்டு பெரும்பாலான மக்கள் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் ‘EMI’ கட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. ஏப்ரல், மே மாதங்களில் ‘EMI’ கட்ட அவகாசம் வழங்கப்பட்டது. ‘EMI’ கட்ட அவகாசம் வழங்கினாலும், வட்டிக்கு வட்டி வசூலிக்கும் நடைமுறையில் வங்கிகள் இறங்கின.

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது உச்சநீதிமன்றம் மத்திய அரசை கண்டித்ததுடன் பதில் அளிக்க உத்தரவிட்டது.

இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஏப்ரல் - ஜூன் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மிக மோசமாக 23.9 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த ஆண்டின் ஜனவரி - மார்ச் காலாண்டில் கூட இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.1 சதவீதம் வளர்ச்சி கண்டிருந்தது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு ஏப்ரல் - ஜூன் காலாண்டில் ரூ.26.90 லட்சம் கோடியாக மட்டுமே இருந்துள்ளது. 2019ஆம் ஆண்டின் ஏப்ரல் - ஜூன் காலாண்டில் இதன் மதிப்பு ரூ.35.35 லட்சம் கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ``கொரோனா காலத்தில் வங்கியில் பெற்ற கடனைச் செலுத்த 2 ஆண்டுகள் வரை அவகாசம் அளிக்க முடியும். இதனால் ஊரடங்கு நேரத்தில் வங்கிகளில் பெறப்பட்ட தனிநபர் கடன், வீட்டுக் கடன், வாகனக் கடன், கடன் அட்டை மீதான கடன் உள்ளிட்ட அனைத்து தவணை களையும் செலுத்துவதில் இருந்து கால அவகாசம் அளிக்கப்பட்டது" என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளன.

இருப்பினும், ``கடனை தாமதமாகச் செலுத்தும் காலத்தில் வட்டிக்கு வட்டி விதிக்கப்படுவதை தள்ளுபடி செய்வது குறித்து ரிசர்வ் வங்கியும்,வங்கி தலைமை அதிகாரிகளும், மத்திய அரசும் சேர்ந்து பேசி முடிவெடுத்து அறிவிக்கிறோம்" எனத் தெரிவித்தனர்.

இருப்பினும், தவணைக் காலம் நீட்டிக்கப்படும் போது, கடன், வட்டி சுமை அதிகரிக்கும் என்பதால், சலுகையில் குறைந்தபட்சம் இந்த காலகட்டத்துக்கான வட்டியையும் ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.

இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஆக்ராவைச் சேர்ந்த கஜேந்திர சர்மா என்பவர் மனுத் தாக்கல் செய்தார். உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷண் தலைமையில் நீதிபதிகள் ஆர்.சுபாஷ் ரெட்டி மற்றும் எம்.ஆர்.ஷா அமர்வு இந்த மனுவை விசாரித்தது.

கடன் மீதான வட்டியை ரத்து செய்வதற்கு போதிய அதிகாரம் மத்திய அரசிடம் உள்ளது. ``பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் இதுபோன்ற வட்டி ரத்து முடிவுகளை எடுக்க முடியும். ஆனால் முடிவுகளை எடுக்காமல் ரிசர்வ் வங்கியின் பின்னால் வசதியாக மத்திய அரசு ஒளிந்து கொண்டிருக்கிறது" என்று நீதிபதி பூஷண் தெரிவித்தார்.

உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் பூஷண் தலைமையில் நீதிபதிகள் ஆர்.சுபாஷ் ரெட்டி மற்றும் எம்.ஆர்.ஷா அமர்வில், ஏற்கெனவே ஒத்திவைக்கப்பட்டிருந்த இந்த மனு இன்று மீண்டும் விசாரிக்கப்பட்டது. அப்போது, மத்திய அரசு, ரிசர்வ் வங்கி சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறுகையில், ``கொரோனா காலத்தில் வங்கிகளில் கடன் பெற்றவர்கள் சிரமத்தைக் குறைக்கும் வகையில், கடனைத் திருப்பிச் செலுத்த 2 ஆண்டுகள் வரை அவகாசம் அளிக்க முடியும். கொரோனா காலத்தில் பொருளாதார வளர்ச்சி 23 சதவீதம் வீழ்ச்சி அடைந்துவிட்டதால், அதைச் சரிக்கட்ட பல்வேறு முயற்சிகளை மத்திய அரசு எடுத்து வருகிறது ” எனத் தெரிவித்தனர்.

அப்போது நீதிபதிகள், ``கடன் செலுத்த அவகாசம் அளிக்கப்பட்ட காலத்தில் விதிக்கப்படும் வட்டிக்கு வட்டியை தள்ளுபடி செய்யவதைப் பற்றி உங்களின் நிலைப்பாடு என்ன?” என்று மத்திய அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ``இந்த விவகாரத்தில் ரிசர்வ் வங்கி, வங்கிகளி்ன் தலைமை அதிகாரிகள், மத்தியஅரசு ஆகிய மூன்றும் சேர்ந்து கூடி ஆலோசித்துதான் முடிவு எடுக்க முடியும். அதற்கு அவகாசம் தேவைப்படுகிறது” எனத் தெரிவித்தார்.

சொலிசிட்டர் ஜெனரல் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கை(புதன்கிழமை) நாளை ஒத்தி வைத்தனர்.