பஞசாப்பில் குடிபோதையில் இருந்த 6 போலீசார் சேர்ந்து அரசு பெண் அதிகாரியை துரத்தித் துன்புறுத்தியதோடு, அவரை காப்பாற்ற வந்த மைத்துனரையும் சுட்டுக்கொன்று அட்டூழியத்தில் ஈடுபட்ட சம்பவம், நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. 

பஞ்சாப் மாநிலம், குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு முக்கிய சாலையில், அதே பகுதியைச் சேர்ந்த அரசு கலால் அதிகாரியான அமர்ப்பரீத் கவுர் என்ற பெண் அதிகாரி, தனது இருசக்கர வானத்தில் நேற்று தினம் இரவு சென்றுகொண்டு இருந்தார். 

அப்போது, 2 வெ்வெறு கார்களில் வந்த 6 போலீசார், அந்த பெண் அரசு அதிகாரி என்று தெரியாமலேயே வெகு தூரம் துரத்தி வந்துள்ளனர். அதாவது சுமார் 30 நிமிடங்கள் அந்த பெண்ணை தங்களது காரிலேயே துரத்தி வந்துள்ளனர். 

ஒரு கட்டத்தில், அந்த பெண்ணை வழிமறித்த அந்த 6 பேர் கொண்ட போலீசார், அந்த பெண்ணை துன்புறுத்தி உள்ளனர். அப்போது, “நான் அரசு அதிகாரி” என்று, அந்த பெண் சொல்லியும் அவர்கள் விட வில்லை என்று தெரிகிறது. அந்த நேரத்தில் அந்த போலீசார் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால், பயந்துபோன அந்த பெண் அதிகாரி, தனது மைத்துனரும், உள்ளூர் கபடி வீரருமான  குர்மெஜ் சிங் என்பவருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து, குர்மெஜ் சிங் என்பவர் சம்பவ இடத்திற்கு வந்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த போதையில் இருந்த போலீசார் ஒருவர், குர்மெஜ் சிங்கை அந்த பெண் அதிகாரி முன்பே தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த குர்மெஜ் சிங், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

துப்பாக்கி சத்தம் கேட்டதும், அங்கு கபடி விளையாடிக்கொண்டிருந்த உள்ளூர் பகுதி மக்கள் மற்றும் கிராம மக்கள் பலரும் கூடி உள்ளனர். அவர்கள் அனைவரும், அந்த போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண் அதிகாரி, உள்ளூர் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தார். ஆனால், போலீசார் 6 பேர் இதில் சம்மந்தப்பட்டுள்ளதால், அவர்கள் எந்த புகாரும் செய்யாமல் மெத்தனமாகச் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, இந்த பிரச்சனை அந்த பகுதியில் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுக்கவே, பல்வேறு தரப்பினரும் சம்மந்தப்பட்ட 6 போலீசாரையும் கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.

இதனையடுத்து, பெண் அதிகாரி அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், குற்றச் செயலில் ஈடுபட்ட 6 போலீசாரையும் அதிரடியாகக் கைது செய்தனர்.

அந்த 6 பேரும், காவல் உதவி ஆய்வாளர்கள் ரஞ்சித் சிங், பல்ஜித் சிங், தலைமைக் காவலர்கள் அவதார் சிங், பல்கர்சிங், சுரிந்தர் சிங், முதலமைச்சரின் பாதுகாப்புக் காவலரான சிம்ராட் சிங் ஆகியோர் ஆவர். இந்த 6 போலீசார் மீதும் இந்தியத் தண்டனைச் சட்டம் 302 இன் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுமக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டி போலீசாரே, மதுபோதையில்.. அதுவும் அரசு பெண் அதிகாரியை வெகு தூரம் துரத்திச் சென்று துன்புறுத்தியதோடு, அவரது உறவினரையும் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம், இந்தியா முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு சாமானியன் தவறு செய்தால், அவனைத் தண்டிக்கும் நம் நாட்டின் சட்டம்; சட்டத்தைப் பாதுகாத்து பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய ஒரு பொறுப்புள்ள போலீசார் 6 பேர் சேர்ந்து ஒரு பெண் அரசு அதிகாரியைத் துன்புறுத்தியதோடு, அவரது குடும்ப உறுப்பினர் ஒருவரையும் சுட்டுக்கொன்றிருக்கும் இப்படிப்பட்ட சூழலில், அவர்களையும் நம் சட்டம் தண்டிக்குமா என்பது தான் தற்போது அனைவரின் மனதிலும் எழுந்துள்ள மிகப் பெரிய கேள்வியாக இருக்கிறது.

சட்டம் தன் கடமையைச் செய்யுமா? அல்லது சாமானியனுக்கு மட்டும் தான் சட்டமா? என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.