இயக்குனர் எஸ். எஸ். ராஜமௌலி மற்றும் அவரது குடும்பத்தினர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து முழுமையாக மீண்டு விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பிளாஸ்மா தானம் செய்வது பற்றி அவரும் சற்றுமுன் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார். தான் ஆன்டிபாடி டெஸ்ட் எடுத்துக் கொண்டதாகவும் அதன் லெவல் 8.62 ஆக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். 15க்கு மேல் இருப்பவர்கள் தான் பிளாஸ்மா தானம் செய்ய முடியும் என ராஜமௌலி குறிப்பிட்டிருக்கிறார்.

கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. சினிமா துறையினரும் அதிகம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறார்கள்.

மேலும் அதிலிருந்து மீண்ட நபர்கள் மற்றவர்களை காப்பாற்றுவதற்காக பிளாஸ்மா தானம் செய்ய வேண்டும் என தெலுங்கு சினிமா பிரபலங்கள் பலரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். 

குறிப்பாக பாகுபலி இயக்குனர் ராஜமௌலி பல மாதங்களாக இதனை சமூக வலைத்தளங்களில் வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் பாகுபலி பட இசையமைப்பாளர் கீரவாணி அவரது மகனுடன் சேர்ந்து பிளாஸ்மா தானம் செய்திருக்கிறார். இந்த தகவலை அவரே ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார். சற்று முன் சுய விருப்பத்தின் அடிப்படையில் நான் KIMS மருத்துவமனையில் பிளாஸ்மா தானம் அளித்து இருக்கிறேன். 

என் மகனுடன் சேர்ந்து இதை செய்தேன். நன்றாக உணர்கிறேன். வழக்கமாக ரத்த தானம் செய்யும் போது இருப்பது போலவே நான் உணர்கிறேன். இதைப் பற்றி எந்த பயமும் கொள்ள தேவையில்லை என கீரவாணி குறிப்பிட்டிருக்கிறார்.

அவரது மகன் காலபைரவாவும் பிளாஸ்மா தானம் செய்திருக்கிறார். காலபைரவா தற்போது தன்னுடைய அடுத்த படமான கலர் போட்டோ படத்திற்காக இசை அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த படத்தில் இருந்து ஒரு பாடல் சமீபத்தில் வெளிவந்து இசை ரசிகர்களை கவர்ந்து பாராட்டுகளைப் பெற்றது. இந்த படம் தற்போது டப்பிங் நிலையில் இருப்பதால் விரைவில் அது வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இசையமைப்பாளர் கீரவாணி ராஜமௌலியின் அடுத்த படமான ஆர்ஆர்ஆர் படத்திற்கு இசையமைத்து வருகிறார். அந்த படத்தின் பணிகள் கொரோனா காரணமாக முழுமையாக தடை பட்டு இருக்கிறது. அது மீண்டும் எப்போது துவங்கும் என்பது பற்றி தயாரிப்பாளர்கள் எந்த அறிவிப்பையும் இன்னும் வெளியிடவில்லை. இந்த படத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் லீட் ரோல்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.