முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, கடந்த 10ஆம் தேதி அவர் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவருக்கு கொரோனாவுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால் 84 வயது மதிக்கத்தக்க பிரணாப் முகர்ஜி, சிகிச்சை பலனின்றி நேற்று (ஆகஸ்ட் 31) மாலை 6 மணியளவில் காலமானார் என்ற செய்தி வெளிவந்தது. இந்த தகவலை அவரது மகன் அபிஜித் முகர்ஜி உறுதிப்படுத்தி தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

பிரணாப் முகர்ஜியின் இறப்புக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ``பாரத ரத்னா பிரணாப் முகர்ஜி காலமானதை அறிந்து, இந்தியா துயரத்தில் ஆழ்ந்துள்ளது. அவர் நம் தேசத்தின் வளர்ச்சிப் பாதையில் ஒரு அழியாத அடையாளத்தை ஏற்படுத்தினார். ஒரு அறிஞர் சமமானவர், ஒரு உயர்ந்த அரசியல்வாதி, அவர் அரசியல் ஆளுமை மற்றும் சமூகத்தின் அனைத்து பிரிவுகளாலும் போற்றப்பட்டார் பிரணாப்" என்று கூறப்பட்டிருந்தது.

ஐந்து தசாப்த காலமாக அரசியல் வாழ்க்கையில் ஏறத்தாழ அனைத்து உச்சங்களையுமே பிரணாப் முகர்ஜி தொட்டிருக்கிறார். 2012 முதல் 2017 ஆம் ஆண்டு வரையில் இந்தியாவின் குடியரசு தலைவராக அவர் இருந்தார். மேலும் அரசியல்வாதியாக மட்டுமின்றி, பொருளாதார நிபுணராகவும் இருந்தார். அதேபோல இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும், நிதியமைச்சராகவும் அவர் இருந்துள்ளார். 

இவ்வளவு பெருமைக்குரிய அவர் காலமானதை தொடர்ந்து, அவரின் உடல் நேற்று இரவு டெல்லியில் 10 ராஜாஜி மார்க் பகுதியில் இருக்கும் அவரின் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு பிரணாப் முகர்ஜி உடலுக்கு மூத்த அரசியல் தலைவர்கள் இறுதி மரியாதை செலுத்தினார்கள்.பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பிரணாப் முகர்ஜி உடலுக்கு மரியாதை செலுத்தினார்கள். காங்கிரஸ், பாஜகவை சேர்ந்த மூத்த தலைவர்கள் இவரின் உடலுக்கு மரியாதை செலுத்தினார்கள். அதேபோல அவரது மறைவுக்கு, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். மேலும் அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் 7 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என தெரிவித்திருந்தது.

பொது மக்களும் வரிசையாக வந்து இவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.இதையடுத்து டெல்லியில் பிரணாப் முகர்ஜி உடல் எரியூட்டப்பட்டது. பின்னர் டெல்லியில் உள்ள லோதி மின் மயானத்திற்கு கொண்டு வரப்பட்ட பிரணாப் முகர்ஜியின் உடலுக்கு ராணுவ வீரர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.

ராணுவ வீரர்கள் இறுதி மரியாதை அளித்து தேசியக் கொடியை பிரணாப் முகர்ஜியின் குடும்பத்தாரிடம் ஒப்படைத்தனர். 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் பிரணாப் முகர்ஜியின் உடல் தகனம் செய்யப்பட்டது.

பிற்பகலில் பிரணாப் முகர்ஜியின் உடலை பிபிஇ கிட் அணிந்த ராணுவ வீரர்கள் இறுதிச்சடங்கு நடக்கும் இடத்துக்குக் கொண்டு செல்ல வாகனத்தில் ஏற்றினர். வழக்கமாக குடியரசு முன்னாள் தலைவர் உயிரிழந்தால், ராணுவ கவச வாகனத்தில் ஏற்றித்தான் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்படும். ஆனால் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதால், மத்திய சுகதாரத்துறை அமைச்சகத்தின் விதிமுறைப்படி, அதற்குரிய வாகனத்தில் ராணுவத்தினரால் கொண்டு செல்லப்பட்டது. கொரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றியும், சமூக விலகலைக் கடைப்பிடித்தும் பிரணாப் உடல் வாகனத்தில் ஏற்றப்பட்டது. பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி, தந்தைக்கான இறுதி சடங்குகளை செய்திருந்தார்.