சென்னை வந்த பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, பொங்கல் விழா மற்றும் துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது துக்ளக் விழாவில் கலந்துகொண்டு பேசிய  பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, “தமிழகத்தின் சிறப்பு வாய்ந்த கலாச்சாரத்தைப் பற்றி குறள் மூலம் தமிழகத்திற்கு வித்திட்டவர் திருவள்ளுவர்” என்று குறிப்பிட்டார். 

“சோ என்றால் துக்ளக், துக்ளக் என்றால் சோ. என்று சொல்லும் அளவிற்கு மறைந்த துக்ளக் பத்திரிகையின் நிறுவனர் மற்றும் ஆசிரியருமான சோவின்  வழியில் துக்ளக் பத்திரிகையை குருமூர்த்தி சிறப்பாக நடத்தி வருகிறார்” என்றும், அவர் புகழாரம் சூட்டினார். 

மேலும், “மத்திய அரசின் திட்டங்கள் மற்றும்  கூட்டாட்சி திட்டம் தமிழகத்தில் சிறந்த பலன்களை தருவதை பார்க்க முடிகிறது” என்னும் பெருமையாக பேசினார். 

“கடந்த 2014 ஆம் ஆண்டுக்கு முன்பே தேசிய வங்கிகள் செயல்பட துவங்கி விட்டது, ஆனால் அப்போது சுமார் 3 கோடி இந்தியர்கள் மட்டுமே வங்கி கணக்கு வைத்திருந்தனர். ஆனால் தற்போது 40 கோடி இந்தியர்கள் வங்கி கணக்கு வைத்திருக்கிறார்கள் என்றும் மத்தியஅரசின் நிதி நேரடியாக மக்களைச் சென்றடையும் வகையில் வங்கி கணக்கு துவங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது” என்றும், அவர் குறிப்பிட்டார். 

தற்போது நிலவி வரும்  விவசாயிகள் பிரச்னையை எதிர்க்கட்சியினர் தங்களுக்கு சாதகமாக முன்வைத்து தேர்தல் அறிக்கையில் வேளாண் திருத்தசட்டத்தை வாக்குறுதியாக கொடுத்து வருகின்றனர். ஆனால், தற்போது போராட்டமாக மாறிய வேளாண் திருத்த சட்ட மசோதாவை அவர்கள் வாக்குறுதியாக வைத்து அரசியல் செய்ய முயற்சிக்கிறார்கள்” என்னும் குற்றம் சாட்டினார். 

“தமிழகத்தில் 2021ல் சட்ட மன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. மேலும் பல மாநிலங்களில் பா.ஜ.க வலுவான கட்சியாக உருவெடுத்து வருகிறது அதை யாரும் மறுக்க முடியாது. இப்போது மக்கள் அனைவரும் மோடியுடன் கைகோர்த்து நிற்கிறார்கள், அதை நோக்கியே நாமும் பயணம் சென்று கொண்டு இருக்கிறோம். பிற மாநிலங்களில் பெற்ற வெற்றிகளை போல்  பாஜக தமிழகத்திலும் வெற்றி பெற வேண்டும். இங்கு இருக்கக்கூடிய மாநில தலைவர்கள் மீது அதிக நம்பிக்கை  இருக்கிறது வளர்ச்சியை நோக்கியே தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது” என்றும் அவர் தெரித்தார். 

“எனவே, தமிழகத்தில் வரும் காலத்தில் பா.ஜ.க ஆட்சி அமையும். அதனால் தான் பல்வேறு துறையைச் சார்ந்தவர்கள் தங்களை பா.ஜ.கவில் இணைகின்றனர்” என்றும் அவர் கூறினார். 

“ஆளுமைத் திறன் மிக்க தலைமை மறைந்த பின்னரும் பல்வேறு விதமான பிரச்சினைக்குப் பின்பும் தமிழக முதல்வர் பழனிசாமி ஆட்சியை தக்க வைத்திருப்பது அவரது ஆளுமையை வெளிப்படுத்துகிறது.இந்த ஆளுமைத் திறனை பார்க்கும் போது எனக்கே வியப்பாக உள்ளது” என்றும், ஜே.பி. நீட்டா பேசினார்.