விரும்பி திருமணம் செய்தவர்களை வாழ வழிவகை செய்ய வேண்டும் என திராவிட விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி வேண்டுகோள் விடுத்துள்ளார்

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள தர்மபுரி கிராமத்தைச் சேர்ந்த செல்வன், அந்த பகுதியில் உள்ள குருப்பநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த இளமதி ஆகிய இருவரும் ஒரே இடத்தில் பணியாற்றும்போது, கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு இரு வீட்டாரின் பெற்றோர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

 Kolathur Mani speaks support for love marriage

இதனால், இருவரும் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், இருவருக்கும் திராவிடர் விடுதலை கழகத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் முன்னின்று திருமணம் செய்து வைத்தார்.

இதனையடுத்து, அன்று இரவு புது மணத் தம்பதிகள் இருவரும், சேலம் மாவட்டம் கொளத்தூர் அடுத்துள்ள காவலாண்டியூரில் உள்ள ஈஸ்வரன் வீட்டில் தங்கியிருந்த போது, 50 பேர் கொண்ட கும்பல், வீடு புகுந்து ஈஸ்வரன் மற்றும் செல்வன் ஆகிய இருவரையும் கடுமையாகத் தாக்கிவிட்டு, இளமதியை கடத்திச் சென்றனர்.

இது தொடர்பாகக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், இளமதியின் தந்தை மற்றும் அவரது மாமா உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.

இதனிடையே, கடத்தப்பட்ட இளமதி, தனது வழக்கறிஞர் சரவணன் உடன் மேட்டூர் காவல் நிலையத்தில் நேற்று ஆஜரானார். அவரிடம் போலீசார் தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்தினர். 

 Kolathur Mani speaks support for love marriage

அப்போது, “இளமதி, தன்னுடைய பெற்றோருடன் செல்ல விரும்புவதாக” அவரது வழக்கறிஞர் சரவணன் கூறினார். 
இதனைத் தொடர்ந்து, “சாதி மறுப்பு திருமணம் செய்த இளமதியை கடத்தியதாக தி.வி.க. தலைவர் கொளத்தூர் மணி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அதேபோல், இளமதியை திருமணம் செய்த செல்வன் உள்பட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த தி.வி.க. தலைவர் கொளத்தூர் மணி, “தங்கள் மீது பொய்யான வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக” குற்றம்சாட்டினார்.

 Kolathur Mani speaks support for love marriage

“தங்கள் வழக்குப் பதிவு செய்யப்பட்டதற்குப் பின்னால், அரசியல் தலையீடு இருப்பதாகவும், ஒரு அமைச்சரின் தலையீடு இருப்பதாகவும், அது குறித்து விரைவில் பொதுவெளியில் அம்பலப்படுத்தப்படும்” என்றும் அவர் கூறினார்.

“குறிப்பாக, தங்கள் மீது முன் தேதியிட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கலாம் என்ற ஐயம் உள்ளதாகவும், இந்த வழக்கை சட்டப்படி எதிர்கொள்வோம்” என்றும் குறிப்பிட்டார்.

முக்கியமாக, விரும்பி திருமணம் செய்தவர்களை வாழ வழிவகை செய்ய வேண்டும். ஆணவக்கொலைக்கான தனிச் சட்டமும், கல்விக்கான சட்டமும் பொதுப்பட்டியலில் தான் உள்ளது என்றும்,  நாடாளுமன்றத்தில் 2012 ஆம் ஆண்டு முதல் கிடப்பில் உள்ள ஆணவக் கொலைக்கான தனிச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் கொளத்தூர் மணி வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.