இந்திய எல்லையில் மீண்டும் சீன வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதால், 6 கிலோ மீட்டர் தூரம் வரை எதிரியின் இலக்கை தாக்கும் சக்தி வாய்ந்த பீஷ்மா பீரங்கிகளை இந்தியா, எல்லைக்கு நகர்த்தி வருகிறது. 

இந்திய பகுதிக்கு உட்பட்ட லடாக் எல்லையில் இந்திய - சீன ராணுவ வீரர்களிடையே கடந்த 16 ஆம் தேதி நடைபெற்ற பயங்கர மோதலில், இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதில், இந்திய தரப்பில் 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

இதனையடுத்து, எல்லையில் நடந்த மோதல் தொடர்பாக ஆலோசிக்கவும், அடுத்தகட்டமாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் பேசி முடிவு எடுக்கவும் பிரதமர் மோடி தலைமையில், காணொலி காட்சி மூலம் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தேசியவாத கட்சி தலைவர் சரத் பவார், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, அதிமுக சார்பில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள அனைத்து கட்சித் தலைவர்களும் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, “எந்த சூழலையும் சமாளிக்கும் திறன் நமது ராணுவத்திற்கு இருப்பதாக” குறிப்பிட்டார். 

“புதிதாகக் கட்டப்பட்டுள்ள நிலைகளால், இந்திய ராணுவத்தின் கண்காணிக்கும் திறன் கூடியிருப்பதாகவும்” சுட்டிக்காட்டிய அவர், “ஒரே சமயத்தில் பல முனைகளுக்கும் செல்லக் கூடிய திறன் நமது ஆயுதப் படைகளுக்கு உள்ளது” என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

குறிப்பாக, “இந்தியாவின் ஒரு அங்குல நிலத்தைக் கூட விட்டுத்தர மாட்டோம் என்றும், எந்த நடவடிக்கைக்கும் நமது ராணுவம் தயாராக இருப்பதாகவும்” பிரதமர் மோடி சூளுரைத்தார். 

இதனையடுத்து, சீனா தனது 10 ராணுப வீரர்களை இந்திய எல்லையில் குவித்தது. அதற்கு, பதிலடியாக இந்தியாவும் தனது ராணுவத்தை எல்லையில் குவித்தது. இதன் தொடர்ச்சியாக இந்திய எல்லைப் பகுதியில் போர் விமானங்களை விமானப்படை தயார்நிலையில் நிறுத்தி வைத்திருந்தன. இதனை விமானப் படை தலைமை தளபதி நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது, இந்திய விமானப் படையின் சுகோய் 30 எம்.கே.ஐ., மிராஜ் 2000, ஜாக்குவார் போர் விமானங்கள் தயார் நிலையில் வைக்கப் பட்டதும் தெரியவந்தது. 
 
மேலும், சீன விமானப்படையினர் ஹோட்டன், கர் குன்சா பகுதிகளிலிருந்து தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டது. இதனையடுத்து, இந்தியா - சீனா இடையே போர் ஏற்பட்டால், அதில் இந்தியாவே வெற்றி பெறும் என்று அமெரிக்க நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து, இந்தியா - சீனா இடையே தொடர்ந்து பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. இதில், உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, லடாக் எல்லையில் இருந்து படைகளை வாபஸ் பெற இரு நாட்டுத் தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டது. அதன்படி, இரு நாடுகளும் தங்கள் படைகளை வாபஸ் பெற்றது.

இந்நிலையில், லடாக் எல்லையில் அமைந்துள்ள கல்வான் ஆற்றில் உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டின் இரு புறமும் சீன கட்டமைப்புகள் இருப்பதைக் காட்டும் செயற்கைக் கோள் படங்கள் வெளியானது. 

இந்த செயற்கைக் கோள் படங்களில், முன்னதாக மோதல் நடந்த ரோந்து புள்ளி 14 க்கு அருகில் அந்த புதிய கட்டடங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக, கடந்த மே 22 ஆம் தேதி முந்தைய செயற்கைக் கோள் படங்கள் இந்த இடத்தில் ஒரு கூடாரம் இருப்பதைக் காட்டியது. இருப்பினும், புதிய படங்கள் சீனவின் புதிய முகாம்களைக் காட்டுகின்றன. அத்துடன், புதிய படங்களில் தங்கும் இடங்கள் புதிதாக கட்டப்பட்டு வருவதையும் காட்டி உள்ளன. கடந்த மே 22 ஆம் தேதி எடுக்கப்பட்ட செயற்கைக் கோள் படத்தில் இவை எதுவும் இல்லை.

இந்தியா - சீனா இடையே சமாதான பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதும், சீனா தனது ராணுவத்தைத் தொடர்ந்து குவித்து வருவதால், கடும் கோபமடைந்த இந்தியா, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராணுவத்தை எல்லையில் குவித்து வருகிறது.

குறிப்பாக, இந்தியா தனது சக்தி வாய்ந்த டி 90 பீஷ்மா பீரங்கிகளை அதிக அளவுக்கு எல்லைப் பகுதிக்கு நகர்த்தி வருகிறது. இந்த பீரங்கிகள் அனைத்தும், மிகவும் துல்லியமான தாக்குதலுக்குப் பயன்படுத்தப்படும் என்றும், இந்த பீரங்கியானது ஒரு நிமிடத்தில் 60 குண்டுகளைப் பொழியும் ஆற்றல் பெற்றது என்றும் இந்திய ராணுவ தரப்பில் கூறப்படுகிறது. 

மேலும், ரசாயன மற்றும் உயிரி ஆயுதங்களைக் கையாளும் திறன் கொண்ட இந்த பீரங்கிகள், ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டவை என்றும், சுமார் 48 டன் எடை கொண்ட இந்த பீரங்கி ஆயிரம் குதிரை விசை ஆற்றல் கொண்டது என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த சக்தி வாய்ந்த டி 90 பீஷ்மா பீரங்கிகளை, இந்த மாதத்தின் தொடக்கம் முதலே எல்லைக்கு அருகில் இந்திய ராணுவம் நிறுத்தி வைத்துள்ளன. இதனால், எல்லையில் எந்த அத்துமீறலுக்கும் தக்க பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியா தயார் நிலையில் உள்ளது தெரியவந்துள்ளது.

அதே நேரத்தில், இந்தியாவின் டி 90 பீஷ்மா பீரங்கிகளுக்கு நிகராக, சீனாவிடமும் டி 95 பீரங்கிகள் உள்ளன. ஆனால், இந்தியாவிடம் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டி 90 பீரங்கிகள் உள்ளன. சீனாவிடம் 3500 பீரங்கிகள் மட்டுமே உள்ளது. 

இதன் காரணமாக, இந்திய எல்லையில் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.