நாளை முதல் வரும் 30 ஆம் தேதி வரை மண்டலத்திற்குள் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியதை அடுத்து, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் இன்று முக்கிய ஆலோசனை மேற்கொண்டார். இதனையடுத்து, மருத்துவ நிபுணர்களுடன் அவர் கலந்து ஆலோசித்தார்.

இதனையடுத்து, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். 

அதன்படி, “கொரோனா தொடர்பாகப் பிரதமருடன் 6 முறையும், ஆட்சியர்களுடன் 7 ஆலோசனை நடத்தப்பட்டதாக” குறிப்பிட்டார்.

“தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளோம்” என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய முதலமைச்சர், “ கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த கடுமையான முயற்சி எடுத்து வருகிறோம் என்றும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது” என்றும் கூறினார்.

“இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாகவும், தமிழகத்தில் தான் கொரோனா இறப்பு சதவிகிதம் குறைவு
என்றும், இதற்காக பாடுபடும் மருத்துவர்கள், செவிலியர்களை உளமாற பாராட்டுகிறேன்” என்றும் முதலமைச்சர் பழனிசாமி புகழாரம் சூட்டினார்.

“வருவாய், சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து துறை பணியாளர்களுக்கும் நன்றி என்றும், கொரோனா தடுப்பு பணியில் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றி வருகின்றனர்” என்றும் குறிப்பிட்ட முதலமைச்சர் பழனிசாமி, “காவல், கூட்டுறவு போன்ற துறையினர், அரசு அதிகாரிகள், தன்னார்வலர்களுக்கும் பாராட்டுக்கள்” என்றும் தெரிவித்தார்.

மேலும், “அதிக தொற்று உள்ள பகுதிகளில் அதிக பரிசோதனை செய்ய ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாகவும்; வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவு” பிறப்பித்துள்ளதாகவும் முதலமைச்சர் கூறினார்.

அத்துடன், “சென்னையில் வீடுவீடாக சென்று கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று குறிப்பிட்ட முதலமைச்சர், “சென்னை முழுவதும் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன” என்றும் சுட்டிக்காட்டினார்.

“மக்கள்தொகை நெருக்கம் காரணமாக சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும், சென்னையில் 600 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும்” முதலமைச்சர் கூறினார்.

“சென்னையில் 15 மண்டலங்களிலும் கண்காணிப்பு பணிகள் தீவிரமா நடைபெற்றுவருகிறது என்றும், 6 அமைச்சர்கள் சென்னையில் கொரோனா தடுப்பு பணியை கண்காணித்து வருகின்றனர்” என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

“நோய் அறிகுறி உள்ளவர்கள் தாமாக முன்வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும், இருக்கும் இடத்திற்கே வந்து நடமாடும் வாகனங்கள் மூலம் பரிசோதனை செய்யப்படுகிறது” என்றும் முதலமைச்சர் பழனிசாமி குறிப்பிட்டார்.

குறிப்பாக, “நாளை முதல் வரும் 30 ஆம் தேதி வரை மண்டலத்திற்குள் பொது போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாகவும், இதனால் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது” என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

அதேபோல், “ஒரு மாவட்டத்தை விட்டு மற்றொரு மாவட்டத்திற்குச் செல்ல வேண்டும் என்றாலும், இனி இ பாஸ் அவசியம்” என்றும் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். 

“கார், பைக் உள்ளிட்ட தனியார் வாகன போக்குவரத்தும் ரத்து” செய்யப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

அத்துடன், “பொதுமக்கள் அவசியத் தேவைக்காக வெளியில் வந்தால், கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும்” என்றும், முதலமைச்சர் பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார்.

மேலும், “மதுரையில் பொதுமுடக்க பகுதியில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும்” என்றும் முதலமைச்சர் அறிவித்தார்.

இதனிடையே, “உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்” தெரிவித்தார்.

“கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும்” என்றும் முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.

அத்துடன், “தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தில் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும். காவல் உதவி ஆய்வாளர்கள் 2 பேர், தலைமைக் 
காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்” என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். 

“உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பிக்கும் உத்தரவின் அடிப்படையில் சட்டப்படி நடவடிக்கை” எடுக்கப்படும் என்றும், முதலமைச்சர் பழனிசாமி உறுதிப்படத் தெரிவித்தார்.